'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் | 'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழ் திரையுலகில் அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர், நிர்மலா. அந்த படத்தின் வெற்றியால், நிர்மலாவின் பெயரின் முன், வெண்ணிற ஆடை என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. முதல் படத்திலேயே, ஜெ.,வுக்கும், நிர்மலாவுக்கும் நடிப்பில் போட்டி என்றால், பின்னாளில், அரசியல் களத்திலும் அது தொடர்ந்தது.
எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், தமிழக அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தால், அ.தி.மு.க., பிளவுபட்டது. ஜானகி அணி, ஜெ., அணி என பிரிந்த போது, 1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஜானகி அணி சார்பில், ஜெ.,வை எதிர்த்து களம் கண்டார் நிர்மலா. அந்த தேர்தலில், ஜெ., மகத்தான வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பும், ஜெ., வசம் வந்தது. சில காலங்களுக்குப் பின், ஜெ.,வின் அழைப்பை ஏற்று, அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைந்த நிர்மலா, அவரின் அபிமானத்தை பெற்ற, நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவராக வலம் வந்தார்.
ஜெயலலிதாவுடனான நினைவலைகளை, நம்முடன் பகிர்ந்த நிர்மலா கூறியதாவது: வெண்ணிற ஆடை தான், எனக்கும், ஜெயலலிதாவுக்கும் அறிமுக திரைப்படம். அதன் பின், ரகசிய போலீஸ் 115, தங்க கோபுரம் போன்ற படங்களிலும், சில தெலுங்கு படங்களிலும், சேர்ந்து நடித்துள்ளோம். நடிகையாக இருந்தபோதே, ஜெ., மிகவும் தைரியசாலி. தவறு என மனதில் பட்டால், அதை உடனே சுட்டிக்காட்டுவார்; யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பார். அந்த தைரியம் தான், இரும்பு பெண்மணி என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்தது.அவரின் இறுதி காலம் வரை, இரும்பு பெண்மணியாகவே வாழ்ந்தும் காட்டினார்.
எம்.ஜி.ஆர்., இறந்தபோது, அவரை எதிர்த்து போட்டியிட்டவள் நான். அதன் பின், கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் அ.தி.மு.க.,விலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தேன். இத்தனைக்கும் பிறகு, என் மீது பாசம் காட்டிய ஜெ., நீங்கள் தாயகம் திரும்ப வேண்டும் என, அன்புடன் அழைப்பு விடுத்தார். அவர் கூறிய வார்த்தைகள், என்னை கண்கலங்க வைத்தன. அதனால், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தேன்.
எம்.ஜி.ஆர்., எனக்கு வழங்கிய, நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்தை, ஜெ.,வும் எனக்கு வழங்கினார். கட்சியில் எத்தனை நட்சத்திர பேச்சாளர்கள் இருந்தாலும், எனக்கு தனி முக்கியத்துவம் அளித்தார். அவரின் இதுபோன்ற செயல்கள், என்னை மிகவும் நெகிழ வைத்தன. ஒருமுறை, தேர்தல் பிரசாரத்திற்காக, தஞ்சாவூர் போயிருந்தேன். அப்போது, அங்கிருந்தவர்கள் என்னை விழுந்து விழுந்து உபசரித்தனர். 10 நிமிடத்திற்கு ஒருமுறை, உங்களுக்கு ஏதாவது வேணுமா? என கேட்டபடி இருந்தனர். அவர்களின் அதீத உபசரிப்பு, ஒரு கட்டத்தில் எனக்கு எரிச்சலுாட்டியது. அவர்களை கடிந்து கொண்ட நான், அளவுக்கு அதிகமாக கவனித்து, ஏனப்பா இப்படி தொந்தரவு செய்கிறீர்கள்? என்றேன். அப்போது அங்கிருந்தவர்கள், அம்மாவின் உத்தரவு அது என்றனர். நான் நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றேன்.
ஜெ.,, அடிப்படையில் மிகவும் நல்லவர்; பாசமானவர். அதேசமயம், தவறு என்று தெரிந்தால், கருணையே காட்டாமல் தண்டனை கொடுக்கும் இரும்பு பெண்மணி. மொத்தத்தில், கருணையும், கண்டிப்பும் கலந்த கலவை என்றே கூறலாம். நடிகையாக இருந்த காலத்தில், ஜெ., அரசியல் பற்றி சிந்தித்ததும் கிடையாது. சராசரி குடும்ப பெண்மணிகளைப் போல் வாழவே விரும்பினார். காலத்தின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்தவர், காலத்தை வென்று சாதனை படைத்தார்.
இளம் தலைமுறை பெண்கள், அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். எந்த நிலையிலும் விரக்தி அடையாமல் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். சோதனைகள் வரும் நேரத்தில் ஜெ.,வின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் எண்ணிப் பார்த்தால் மனதில் தானாக அச்சம் அகலும்; நம்பிக்கை பிறக்கும். இது இக்கால பெண்களுக்கு நான் சொல்லும் அட்வைஸ் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். சோதனைகள் பல கடந்து, சாதனை படைத்த, இரும்பு பெண்மணி ஜெ.,க்கு நிகர், ஜெ., மட்டும் தான்! என்றார்.