சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் - பிரித்விராஜ் இருவரும் இணைந்து நடித்திருந்த ப்ரோ டாடி படம் ஒடிடி தளத்தில் வெளியானது. திருமணமாகாத ஒரு இளைஞன் ஒரே நேரத்தில் அப்பாவாகவும், அண்ணனாகவும் புரமோஷன் பெறுகிறான் என்கிற வித்தியாசமான கதையம்சத்துடன் கலகலப்பாக உருவாகியிருந்த இந்தப்படத்தை பிரித்விராஜே இயக்கியும் இருந்தார். இந்தப்படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகர் வெங்கடேஷ் வாங்கியுள்ளார் என்றும் இதில் தந்தை - மகனாக வெங்கடேஷும் ராணாவும் நடிக்க இருக்கிறார்கள் என்றும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கடேஷை பொறுத்தவரை மோகன்லால் படங்களின் ரீமேக்கில் அதிகம் விரும்பி நடிப்பவர் என்பது தெரிந்த விஷயம் தான். அதேபோல தற்போது அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் பிரித்விராஜின் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராணா, ப்ரோ டாடி ரீமேக்கிலும் பிரித்விராஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பார் என தெரிகிறது.