கடந்த 2016ல் விஜய் சேதுபதி நடிப்பில் ரத்தின சிவா இயக்கத்தில் வெளியான படம் 'றெக்க'. இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். என்றாலும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் மாலா அக்காவாக நடித்திருந்த நடிகை சிஜா ரோஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். குறிப்பாக அந்த படத்தில் அவர் இடம்பெறும் பாடலான 'கண்ணம்மா.. கண்ணம்மா.. அழகு பூஞ்சிலை' என்கிற பாடல் அவரை ரொம்பவே பிரபலப்படுத்தியது. அதற்கு முன்பும் தமிழில் சில படங்களில் நடித்துள்ளார் சிஜா ரோஸ். றெக்க படத்தை தொடர்ந்து 'பைரவா' படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாக, நான்கு வருடங்கள் கழித்து 'உடன்பிறப்பே' படத்தில் சசிகுமாரின் மனைவியாக என வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார்.
இந்த நிலையில் தற்போது சரத்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் 'தி ஸ்மைல் மேன்' படத்தில் நடித்துள்ளதன் மூலம் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் சிஜா ரோஸ். இந்த படத்தில் துப்பறியும் அதிகாரியாக நடிக்கும் சரத்குமாருக்கு உதவியாக துப்பறியும் இளம்பெண் கதாபாத்திரத்தில் சிஜா ரோஸ் நடித்துள்ளார். றெக்க படத்துக்கு பிறகு பெரும்பாலும் அதே போன்ற கதாபாத்திரங்கள் வந்ததால் தான் நடிப்பில் சிறிய இடைவெளி விழுந்து விட்டது என்றும் இந்த ஸ்மைல் மேல் படத்தில் தனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றும் கூறியுள்ளார் சிஜா ரோஸ்.