வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழில் சினிமா அறிமுகமான காலத்தில் இங்கு தயாரிப்பாளர்கள் இருந்தார்கள். ஆனால் இயக்குனர்கள் இல்லை. காரணம் திரைப்பட தொழில் நுட்பம் இங்கு யாருக்கும் தெரியவில்லை. திரைக்கதை அமைக்கும் திறனும் இல்லை. இந்த நிலையில்தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார் எல்லீஸ் ஆர்.டங்கன்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் நடுத்தர குடும்பத்தில் 1909ம் ஆண்டு பிறந்தவர் டங்கன். செயின்ட் க்ளையர்ஸ்வில் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். புதிதாக வாங்கிய கேமராவைக் கொண்டு, பள்ளி ஆண்டு இதழுக்காக புகைப்படங்கள் எடுத்தார். அந்த இதழின் பொறுப்பாசிரியராகவும் செயல்பட்டார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த திரைப்படத் துறையில் ஒளிப்பதிவு பிரிவில் சேர்ந்தார்.
திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு, படத்தயாரிப்பு நிர்வாகம் என அனைத்தும் கற்றார். அவருடன் படித்தவர்தான் இன்னொரு பிரபலமான இந்திய இயக்குனரான மாணிக்லால் டாண்டன். படிப்பு முடிந்ததும், இந்தியா திரும்பிய டாண்டன் ஹிந்தி படங்களை இயக்க தொடங்கினார். அப்போது தனக்கு உதவியாக பணியாற்ற உடன் படித்த எல்லீஸ் டங்கனை அழைத்தார். அவரும் இந்தியா வந்தார்.
இந்தியா வந்த டங்கன், 'நந்தனார்' படத்தில் மாணிக் லால் டான்டனிடம் உதவியாளராக பணியாற்றினார். அப்போது தமிழ் படம் தயாரித்துக் கொண்டிருந்த ஏ.என்.மருதாச்சலம் தனது அடுத்த படத்தை இயக்குமாறு டாண்டனிடம் கேட்டார். ஆனால் அவர் பிசியாக இருந்ததால் தனது நண்பரான எல்லீஸ் டங்கனை சென்னைக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டுக்கு வந்த டங்கன் இயக்கிய முதல் படம் 'சதி லீலாவதி' 1936ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பிறகு 'இரு சகோதரர்கள், அம்பிகாபதி, சூர்யபுத்திரி, சகுந்தலா, மீரா உள்ளிட்ட 13 படங்களை இயக்கினார்.
'மீரா' படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமியை நடிக்க வைத்தார். எம்ஜிஆர், எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகம் செய்தவரும் இவரே. தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாவிட்டாலும் ஆங்கிலம் தெரிந்த தமிழ் உதவியாளர்களைக் கொண்டே தமிழ் சினிமா உலகில் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். தனது 92வது வயதில் மரணம் அடைந்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா வந்த அவருக்கு தமிழ் திரையுலகம் பாராட்டு விழா நடத்தி கவுரவித்தது.