துல்கர் சல்மானின் ‛காந்தா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | கமல் படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர் | உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் |
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஐந்து சீசன்களை கடந்து தற்போது 6வது சீசன் இன்று(அக்., 10) முதல் துவங்கி உள்ளது. கமல்ஹாசனே இந்தமுறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 6வது சீசன் கோலாகலமாக துவங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். போட்டியாளர்கள் விபரம் கீழே...
முதல் ஆளாக உள்ளே நுழைந்த ஜி.பி.முத்து
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பே பல பிரபலங்களின் பெயர்கள் இந்த போட்டியில் பங்கேற்க போவதாக செய்திகள் வந்தன. அதில் முக்கியமான நபர் ஜி.பி. முத்து. டிக்டாக் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தனது வட்டார மொழி வழக்கில் பேசி ஏராளமான ரசிகர்களை பெற்று வந்தார். கடந்தமுறையே இந்த நிகழ்ச்சியில் இவர் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில் இந்த முறை நிகழ்ச்சியின் முதல் ஆளாக முத்து உள்ளே நுழைந்தார்.
2வது நபர் அசல்
போட்டியின் இரண்டாவது நபராக சென்னையை சேர்ந்த பாடகர் அசல் என்பவர் உள்ளே நுழைந்தார். இவர் ஒரு ராப் பாடகர் ஆவார். தனியார் ஆல்பமும் செய்து வருகிறார்.
3வது நபர் திருநங்கை ஷிவின்
பிக்பாஸில் கடந்த சீசனில் நமீதா மாரிமுத்து என்ற திருநங்கை பங்கேற்றார். அதேப்போன்று இந்த முறையும் ஷிவின் கணேசன் என்ற திருநங்கை பங்கேற்றுள்ளார். திருநங்கை என்றாலும் மாடலிங்கில் இவர் அசத்தி வருகிறார்.
4வது நபர் அசீம்
போட்டியில் நான்காவது நபராக சின்னத்திரை நடிகரான அசீம் பங்கேற்றுள்ளார். பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பிக்பாஸில் பங்கேற்க போவதாக தகவல் வந்தது. ஆனால் இந்த முறை வாய்ப்பை தவறவிடவில்லை. போட்டியின் நான்காவது நபராக முகமது அசீம் உள்ளே நுழைந்துள்ளார்.
5வது நபர் ராபர்ட் மாஸ்டர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது போட்டியாளராக ராபர்ட் மாஸ்டர் உள்ளே நுழைந்தார். அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடனத்தில் அசத்தி பின்னாளில் பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணியாற்றி இவர் உள்ளார். தொடர்ந்து ஓரிரு படங்களில் நாயகனாகவும் நடித்தார். நடிகர் சிம்புவின் ஆஸ்தான நண்பர்களில் இவரும் ஒருவர். சிம்புவின் பல படங்களுக்கு இவர் நடனம் அமைத்துள்ளார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
6வது போட்டியாளர் ஆயிஷா
நிகழ்ச்சியின் 6வது போட்டியாளராக சின்னத்திரை நடிகை ஆயிஷா உள்ளே சென்றுள்ளார். ஜீ தமிழில் ஒளிப்பரப்பான சத்யா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ள இவர் இந்த முறை பிக்பாஸ் வீட்டினுள் உள்ளே நுழைந்துள்ளார்.
7வது போட்டியாளர் ஷெரீனா
பிக்பாஸ் சீசன் 6ன் ஏழாவது போட்டியாளராக ஷெரீனா உள்ளே சென்றுள்ளார். மாடலிங் துறையிலும் உள்ள இவர் தனியாக போட்டோ ஸ்டுடியோவும் வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவர் இப்போது களமிறங்கி உள்ளார்.
8வது போட்டியாளர் மணிகண்டன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது போட்டியாளராக மணிகண்டன் பங்கேற்றுள்ளார். தொழில்முனைவோரும், சின்னத்திரையில் சில சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனான இவர் இந்த முறை பிக்பாஸ் போட்டியில் களமிறங்கி உள்ளார். இவரது மனைவியான சோபியாவும் நடிகை ஆவார். சின்னத்திரை ரியாலிட்டி ஷோவிலும், லக்ஷமி உள்ளிட்ட ஓரிரு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
9வது போட்டியாளர் ரட்சிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது போட்டியாளராக நடிகை ரட்சிதா சென்றுள்ளார். சின்னத்திரை ரசிகர்களுக்கு இவர் மிகவும் பிரபலமானவர். பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் இவர் நடித்து பிரபலமானார். சமீபத்தில் மற்றொரு டிவியில் ஒரு சீரியலில் நடித்து வந்தவர், பின்னர் அதிலிருந்து விலகினார். இப்போது பிக்பாஸில் களமிறங்கி உள்ளார்.
10வது போட்டியாளர் ராம்
நிகழ்ச்சியின் 10வது போட்டியாளராக ராம் என்கிற ராமசாமி உள்ளே நுழைந்தார். மாடலிங் துறையில் உள்ள இவர் தான் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்ததாகவும், ஆனால் அந்த படம் வெளியாகவில்லை என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சி மூலம் என்னை மேலும் பிரபலப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக ராம் கூறினார்.
11வது போட்டியாளர் ஏடிகே
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 11வது போட்டியாளராக பாடகர் ஏடிகே பங்கேற்றார். இவர் பல படங்களில் பாடி உள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் திருச்சியில் வளர்ந்தார். 17 ஆண்டுகளாக ராப் இசையில் கலக்கி வருகிறார். தமிழா என்ற பெயரில் ஆல்பம் வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானார். மகுடி, ஆத்திச்சூடி உள்ளிட்ட பல ராப் பாடல்களை இவர் பாடி உள்ளார்.
12வது போட்டியாளர் ஜனனி
நிகழ்ச்சியின் 12வது போட்டியாளராக ஜனனி உள்ளே சென்றார். இலங்கையை சேர்ந்த இவர் அங்கு மாடலிங், நடனம், செய்திவாசிப்பாளர், தொகுப்பாளர் என அசத்தி வருகிறார். கடந்த சீசன்களில் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா பங்கேற்று ரசிகர்களின் மனதை வென்றார். அதே வரிசையில் இப்போது மற்றொரு இலங்கையை சேர்ந்த ஜனனி இந்த முறை பிக்பாஸில் களமிறக்கப்பட்டுள்ளார்.
13வது போட்டியாளர் சாந்தி
நிகழ்ச்சியின் 13வது போட்டியாளராக நடன அமைப்பாளரும், நடிகையுமான சாந்தி உள்ளே சென்றார். நிறைய படங்களில் பெண் டான்ஸராக இவரை பார்த்திருப்பீர்கள். அதோடு மெட்டி ஒலி சீரியலில் அம்மி அம்மி மிதித்து என்ற பாடலில் இவர் தான் நடனம் ஆடியிருப்பார். தற்போது பல சீரியல்களில் இவர் நடித்து வருபவர் இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி உள்ளார்.
14வது போட்டியாளர் விக்ரமன்
நிகழ்ச்சியின் 14வது போட்டியாளராக விக்ரமன் உள்ளே சென்றார். இவர் பத்திரிக்கையாளராக பணியாற்றி உள்ளார். அரசியல் களத்திலும் உள்ளார். இப்போது இந்த நிகழ்ச்சி மூலம் தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சியில் களமிறங்கி உள்ளார்.
15வது போட்டியாளர் அமுதவாணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 15வது போட்டியாளராக அமுதவாணன் உள்ளே சென்றார். விஜய் டிவியின் ஆஸ்தான கலைஞர்களில் இவரும் ஒருவர். அந்த டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் அசத்தி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். பல மேடை நிகழ்ச்சிகளிலும் காமெடியில் அசத்தி உள்ளார். சினிமாவிலும் சில படங்களில் இவர் நடித்தார். இப்போது பிக்பாஸில் களமிறங்கி உள்ளார்.
16வது போட்டியாளர் வீஜே மகேஸ்வரி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 16வது போட்டியாளராக வீஜே மகேஸ்வரி உள்ளே நுழைந்துள்ளார். டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றினார். பின்னர் திருமணம் செய்தவர், ஓரிரு ஆண்டுகளிலேயே அந்த வாழ்க்கை முறிந்தது. பின்னர் சினிமா பக்கம் திரும்பிய மகேஸ்வரி கமலின் விக்ரம் உள்ளிட்ட படங்களில் தோன்றினார். சீரியல்களிலும் தலைகாட்டி வந்தவர் இப்போது பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்துள்ளார்.
17வது போட்டியாளர் வீஜே கதிரவன்
நிகழ்ச்சியின் 17வது போட்டியாளராக கதிரவன் என்பவர் உள்ளே சென்றுள்ளார். வீஜேவான இவர் சில டிவி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல இந்த ஒரு பிளாட்பார்மை தான் தேர்வு செய்ததாக கூறுகிறார் கதிரவன்.
18வது போட்டியாளர் குயின்ஸி
நிகழ்ச்சியின் 18 வது போட்டியாளராக குயின்ஸி என்பவர் உள்ளே சென்றுள்ளார். கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்த சமயத்திலேயே மாடலிங்கில் உள்ளே நுழைந்த இவர் சிறுவயது முதலே நடிகையாக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர். தற்போது ஓரிரு படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்த வாய்ப்பு மூலம் இன்னும் மக்கள் மத்தியில் பிரபலமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி உள்ளார்.
19வது போட்டியாளர் நிவாஷினி
பிக்பாஸ் சீசன் 6ன் 19வது போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் நிவாஷினி எனம் நிவா. பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கப்பூர் தான். சிறுவயது முதலே நடிகை ஆக வேண்டும் என்பதே இவரது ஆசை. மீடியா வெளிச்சம் இருக்க வேண்டும் என எண்ணுபவர். பேஷன் டிசைனிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர் வெப்சீரிஸில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இப்போது பிக்பாஸில் ஒரு போட்டியாளராக களமிறங்கி உள்ளார்.
20வது போட்டியாளர் தனலட்சுமி
நிகழ்ச்சியில் 20வது போட்டியாளராக ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த தனலட்சுமி என்பவர் உள்ளே சென்றுள்ளார். சிறுவயது முதலே நடனம், நடிப்பு தான் இவருக்கு பிடித்த ஒன்று. கடந்த நான்கு ஆண்டுகளாக சினிமா படங்களில் உள்ள கேரக்டர்களை அப்படியே மேக்கப் போட்டு அதை வீடியோ வெளியிட்டு இவர் பிரபலமானார். தற்போது பிக்பாஸ் வீட்டினுள் களமிறங்கி உள்ளார்.
இந்த சீசனில் அமுதாவாணன், ரட்சிதா, அசீம், ராபர்ட் மாஸ்டர், சாந்தி மாஸ்டர், ஜிபி முத்து, வீஜே மகேஸ்வரி, வீஜே கதிரவன், ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டன் உள்ளிட்ட ஓரளவுக்கு தெரிந்த முகங்களும் இந்த சீசனில் களமிறங்கி உள்ளனர். திருநங்கை ஷிவின், இலங்கையை சேர்ந்த ஜனனி, சிங்கப்பூரை சேர்ந்த நிவா உள்ளிட்ட தெரியாத முகங்கள் பலரும் களமிறங்கி உள்ளனர். இவர்களின் உண்மை முகங்கள் என்ன, போட்டியில் 100 நாட்கள் தாக்குபிடிக்க போவது யார், பட்டத்தை வெல்லபோவது யார் என்பது இனி வரும் 100 நாட்களில் தெரிய வரும்.