திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் |
தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்குள்ளாகவே ஆந்திரா எல்லை ஆரம்பமாகிவிடுகிறது. அதற்குப் பிறகு மொழியும் மாறிவிடுகிறது, மக்களின் வாழ்வியலும் மாறிவிடுகிறது. ஒரு காலத்தில் சென்னை மாகாணமாக தமிழகம், ஆந்திரா ஆகியவை ஒன்றாக இருந்த போது சென்னையில்தான் தமிழ்ப் படங்களும், தெலுங்குப் படங்களும் மற்ற தென்னிந்திய மொழிப் படங்களும் தயாராகி வந்தன.
அப்போது நிறைய தெலுங்கு நடிகர்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருந்தார்கள். என்டிஆர், நாகேஸ்வரராவ், எஸ்வி ரங்காராவ், வி நாகையா, பானுமதி, சாவித்ரி, ஜமுனா இப்படி பல நடிகர், நடிகையரைச் சொல்லலாம். அவர்களை தமிழ் நடிகர்களாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் ரசித்தனர். தங்களில் ஒருவராக அவர்களைப் பார்த்தனர்.
ஆனால், காலப் போக்கில் சென்னை மாகாணம் பிரிந்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மொழிவாரியாகப் பிரிந்தது. போகப் போக சென்னையில் உருவான அனைத்து தென்னிந்திய மொழிப் படங்களும் அந்தந்த மாநிலத்தை நோக்கி நகர்ந்து போனது. இப்போது தமிழ்ப் படங்களே ஐதராபாத்தில் அதிகமாகப் படமாகி வருகிறது.
இருந்தாலும் தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கில் நடிக்கவும், தெலுங்கு நடிகர்களுக்கு தமிழில் நடிக்கவும் உள்ள ஆசை மட்டும் மாறாமல் இருக்கிறது. அந்தக் காலம் போல இந்தக் காலத்தில் தெலுங்கு நடிகர்களை ரத்தினக் கம்பளம் போட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்கத் தயங்குகிறார்கள்.
கடந்த பத்து வருடங்களில் சில முன்னணி தெலுங்கு நடிகர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்து அவர்களில் சிலர் வெற்றியையும், சிலர் தோல்வியையும் பெற்றுள்ளார்கள்.
நானி
ராஜமவுலி இயக்கத்தில், கிச்சா சுதீப், சமந்தா மற்றும் பலர் நடித்து தெலுங்கு, தமிழில் உருவாகி 2012ல் வெளிவந்த 'நான் ஈ' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்து தமிழிலும் நேரடியாக அறிமுகமானார் நானி. அப்படத்தில் கொஞ்ச நேரமே வந்து ரசிகர்களின் மனதில் கொஞ்சமாக இடம் பிடித்தார் நானி. அதற்குப் பிறகு அவரது சில தெலுங்குப் படங்கள் தமிழிலும் டப்பிங் ஆகி வெளிவந்தன. ஆனால், அவற்றை அவர் தமிழ் ரசிகர்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்காததால் இன்னமும் இங்கு ஒரு மார்க்கெட் கிடைக்க தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
பிரபாஸ்
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி 2015ல் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபாஸ். அந்தப் படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் நேரடியாக படமாக்கப்பட்டது. அந்தப் படத்தின் வெற்றியும், அதற்குப் பிறகு 2017ல் வெளிவந்த 'பாகுபலி 2' படமும் எந்த அளவிற்கு தமிழிலும் வெற்றியைப் பெற்றது, வரவேற்பைப் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்றார் பிரபாஸ். ஆனால், அதற்குப் பிறகு அவர் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த 'சாஹே, ராதேஷ்யாம்' ஆகிய படங்கள் தோல்வியாக அமைந்தன.
மகேஷ் பாபு
தெலுங்குத் திரையுலகத்தின் 'பிரின்ஸ்' என அழைக்கப்படுவர் மகேஷ் பாபு. சென்னையில் பிறந்து, கல்லூரிப் படிப்பு வரை இங்கேயே படித்து வளர்ந்தவர். தெலுங்கில் முன்னணி நடிகராக உயர்ந்தவருக்கு பிறந்து வளர்ந்த ஊரில் அறிமுகமாக வேண்டும் என்ற ஒரு ஆவல். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகி 2017ல் வெளிவந்த 'ஸ்பைடர்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அவரது ஆசையை நிராசையாக்கினார் இயக்குனர் முருகதாஸ். தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு இருந்த இமேஜும் அந்தப் படம் மூலம் கொஞ்சம் காலியானது. அதற்குப் பிறகு நல்ல தமிழ்த் திரைப்படங்களை பார்த்து பாராட்டுவதோடு தனது தமிழ் சினிமா ஆசையை நிறுத்திக் கொண்டார்.
ராம் பொத்தினேனி
சென்னையில் பள்ளிப் படிப்பைப் படித்தேன் என்று பெருமையாகச் சொன்னவர், முதன் முதலில் தமிழில் 'அடையாளம்' என்ற குறும்படத்தில் நடித்தவர் ராம் பொத்தினேனி. அழகான இளம் தெலுங்கு ஹீரோக்களில் இவரும் ஒருவர். இவர் கதாநாயகனாக நடிக்க 2012ல் வெளிவந்த 'எந்துகன்டே பிரேமன்தா' என்ற தெலுங்குப் படத்தை 'ஏன் என்றால் காதல் என்பேன்' என்ற பெயரில் தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், தமிழில் இதுவரை வெளியாகவில்லை. அதன்பின் லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகி கடந்த வருடம் வெளிவந்த 'த வாரியர்' படம் மூலம் இங்கு அறிமுகமானார். இரண்டு மொழிகளிலுமே இப்படம் தோல்வியைத் தழுவியது. இனி, தமிழில் நடிப்பாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டும்.
நாக சைதன்யா
தமிழில் பெரும் வெற்றி பெற்ற 'தேவதாஸ்' படத்தில் நடித்த நாகேஸ்வரராவ் பேரன், தமிழில் டப்பிங் செய்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'உதயம், இதயத்தைத் திருடாதே' படங்களில் நடித்த நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா. இவரும் சென்னையில்தான் பள்ளிப் படிப்பை முடித்தார். தமிழிலும் நடிக்க ஆசைப்பட்டவருக்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் இரு தினங்களுக்கு முன்பு வெளியான 'கஸ்டடி'. தெலுங்கில் வெற்றி என நேற்று சக்சஸ் மீட் கொண்டாடிவிட்டார்கள் படக்குழு. ஆனால், தமிழில் படத்திற்குப் பெரிய வரவேற்பு இல்லை என்பதுதான் உண்மை. விமர்சனங்களும் எதிர்மறையாகத்தான் வந்துள்ளன. தாத்தா, அப்பா போல இங்கு தடம் பதிக்க ஆசைப்பட்டவருக்கு ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது.
அல்லு அர்ஜுன்
மேலே சொன்னவர்களைத் தவிர நேரடித் தமிழ்ப் படங்கள் மூலம் இங்கு அறிமுகமாகாமல் டப்பிங் படம் மூலம் சில பல தெலுங்கு நடிகர்கள் இங்கு அறிமுகமானார்கள். அவர்களில் தடம் பதித்தவர் அல்லு அர்ஜுன். தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் சென்னையில் வளர்ந்த அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்க ஒரு படத்தை பிரம்மாண்டமாக ஆரம்பித்தார்கள். ஆனால், அப்படம் இதுவரை எடுக்கப்படவேயில்லை. 2021ல் வெளிவந்த டப்பிங் படமான 'புஷ்பா' படம் மூலம் இங்கு குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றார் அல்லு அர்ஜுன். அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. நேரடித் தமிழ்ப் படத்தில் நடிக்கும் ஆசை அல்லு அர்ஜுனிடம் இன்னமும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
சுனில்
தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் சில படங்களில் நடித்தவர் சுனில். 'புஷ்பா' படத்தில் வில்லனாக நடித்தவர் என்றால் தமிழ் ரசிகர்கள் ஓரளவிற்குத் தெரிந்து கொள்வார்கள். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்', கார்த்தி நடிக்கும் 'ஜப்பான்', விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவருக்கான வரவேற்பு தமிழில் எப்படி இருக்கும் என இனிமேல்தான் தெரியும்.
ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப்
படமான 'ஆர்ஆர்ஆர்' படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெற்றியைப் பெற்றது.
ஜுனியர் என்டிஆர், ராம் சரண் தேஜா இருவரையும் தெரிந்து கொள்ள அப்படம் கை
கொடுத்தது. இருவருமே நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்தவர்கள். ராம் சரண்
சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்'
படத்தில் நடித்து வருகிறார். அப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளிவரும்.
ஜுனியர் என்டிஆர் நடித்து வரும் தெலுங்குப் படங்களும் டப்பிங் ஆகி
வெளியாகும். இருவருமே நேரடித் தமிழ்ப் படத்தில் நடிப்பார்களா என்பது
சந்தேகமே.
ஓடிடி வந்த பிறகு 'மொழிக்கான தடைகள்' எதுவும் இல்லை என பலர் சொல்லி வருகிறார்கள். மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என மற்ற மொழிகளில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படங்கள், வெப் தொடர்கள் ஆகியவை தமிழில் டப்பிங் செய்யப்பட்டிருந்தால் அவற்றைக் கூட சினிமா ரசிகர்கள் நன்றாக இருந்தால் ரசித்துப் பார்க்கிறார்கள்.
தெலுங்கு மொழி நடிகர்களைப் போலவே மலையாள மொழி நடிகர்கள் சிலர் இங்கு நடிக்க வந்து வரவேற்பைப் பெற்றுள்ளார்கள். பிரேம் நசீர், மது, மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், நிவின் பாலி என சிலரை உதாரணமாகச் சொல்லலாம். கன்னடத்திலிருந்து பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சிலர் வந்து பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்கள். சிவராஜ்குமார் தற்போது ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியிலிருந்து '2.0' படம் மூலம் அக்ஷய் குமார் நேரடியாக தமிழில் அறிமுகமானார்.
தெலுங்கு நடிகர்கள் அளவிற்கு மற்ற நடிகர்கள் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டுவது குறைவுதான். இருப்பினும் சில தெலுங்கு நடிகர்களே இங்கு வரவேற்பைப் பெற்றுள்ளார்கள். நடிக்க வந்து தோல்வியுற்றவர்கள், இனி நடிக்க வருபவர்கள் எப்படி வெற்றி பெற வேண்டும், அதற்கான கதை என்ன, கதாபாத்திரம் என்ன, இயக்குனர்கள் யார், படம் முழுக்க முழுக்க தமிழ்ப் படத்திற்கான பின்னணியில் இருக்க வேண்டுமா, தெலுங்கையும் கலந்து எடுத்து இப்படியும் இல்லாமல், அப்படியும் இல்லாமல் ஏமாற்ற வேண்டுமா என பலவற்றையும் யோசித்துப் பார்த்து வர வேண்டும்.
இங்கு வேற்று மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நடிகர்கள் டாப் ஸ்டார்களாக உயர்ந்துள்ளார்கள். தமிழ் சினிமா ரசிகர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்று பார்க்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏமாற்றமில்லாத, நேர்மையான ஒரு படைப்பு மட்டுமே. அப்படி வருபவர்களுக்கு மொழி ஒரு தடையல்ல.