இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் |
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க திரையுலகம் வீழ்ச்சியடைந்து வருவதாகக் கூறி, அதைக் காப்பாற்ற வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு வெளிநாட்டு திரையுலகினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
100 சதவீத வரி என்பது எப்படி இருக்கும் என கருத்துக்கள் வெளியாகி உள்ளது. அதன்படி வெளிநாட்டுத் திரைப்படம் ஒன்று அமெரிக்க வினியோக உரிமையாக உதாரணத்திற்கு ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் விலைக்கு விற்கப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அந்தப் படம் மீதான 100 சதவீத வரியாக ஒரு மில்லியன் யுஎஸ் டாலர் விதிக்கப்படும். அப்படியென்றால் அந்தப் படத்திற்கான முதலீடு என்பது 2 மில்லியன் யுஎஸ் டாலர் ஆக உயரும். அதற்கேற்றபடி டிக்கெட் கட்டணங்களை உயர்த்தித்தான் ஆக வேண்டும். அப்படி உயர்த்தினால் அவற்றை மக்கள் வந்து பார்க்க வாய்ப்புகள் குறைவு.
எனவே, அமெரிக்க வினியோக உரிமையை வாங்குபவர்கள் வெளிநாட்டுப் படங்களின் விலையை 50 சதவீதமாகக் குறைத்து வாங்க வேண்டும். அப்படி வாங்கினால்தான் அதற்கான வரிவிதிப்புடன் இப்போது உள்ளபடி டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்க முடியும். அது இந்தியா போன்ற நாடுகளில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமாக அமையும்.
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிப் படங்களில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு அமெரிக்காவில் குறிப்பிட்ட அளவிலான மார்க்கெட், வசூல் உண்டு. 'பாகுபலி 2' படம் அங்கு 20 மில்லியன் டாலர் வசூல், 'ஆர்ஆர்ஆர்' 15 மில்லியன் டாலர் வரை வசூலைக் குவித்தது.
டிரம்ப் தியேட்டர்களுக்கான வரி விதிப்பு பற்றி மட்டுமே கூறியிருக்கிறார். அது ஓடிடி உரிமை பெறுவதற்கான வரியாகவும் இருந்தால், ஓடிடி உரிமையைப் பெறும் வியாபாரமும் பாதிப்படைய வாய்ப்புள்ளது என்கிறார்கள். நெட்பிளிக்ஸ், அமேசான் போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் இந்திய அளவிலும் மற்ற நாடுகளிலும் அதிக அளவில் படங்களை வாங்குகின்றன.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ஹாலிவுட் படங்களுக்கு இங்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. அந்தப் படங்களுக்கான வருவாய் வெளிநாடுகளிலிருந்து மட்டும் 75 சதவீதத்திற்கு மேல் கிடைக்கிறது. அந்த வசூல் பாதிக்கப்பட்டால் ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் அது குறித்து முறையிட வாய்ப்புள்ளது. அல்லது அவர்களது தளத்தை வெளிநாடுகளுக்கு மாற்றிச் செயல்படும் நிலையும் வரலாம்.
அமெரிக்கா சினிமாத் துறையைக் காப்பாற்ற நினைத்து டிரம்ப் எடுக்கும் இந்த 100 சதவீத வரி விதிப்பு, அவர்களுக்கே திருப்பி அடிக்கும் நிலையை ஏற்படுத்தலாம்.
அடுத்து வரும் நாட்களில் உலக சினிமாத் துறையில் இந்த விவகாரம் அதிகம் விவாதிக்கப்படும் ஒன்றாகவும், சர்ச்சையை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இருக்கும்.