ஆயிரம் கோடி வசூல் கனவு….காத்திருக்கம் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? | உண்மை கதையில் யோகி பாபு | வெற்றி ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பும் ஷ்ரத்தா | 'மாமன்' சூரியின் கதை: இயக்குனர் தகவல் | பிளாஷ்பேக்: பல தலைமுறைகளை வாழ வைத்த 'மைடியர் குட்டிச்சாத்தான்' | பிளாஷ்பேக்: காதல் சின்னத்தை மீட்டெடுக்க விரும்பிய வி.என்.ஜானகி |
கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது ஒரு கொண்டாட்டம் என்றாலும், சினிமா தியேட்டர்களுக்குக் குடும்பத்துடன் செல்வதும் ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும். அந்த விதத்தில் இந்த கோடை விடுமுறையில் அடுத்தடுத்து சில பல முக்கியமான படங்கள் வெளியாக உள்ளன.
மே 1ம் தேதி இந்திய மொழிகளில் சில பல படங்கள் வெளிவருகின்றன. தமிழில் சூர்யா, பூஜா ஹெக்டே நடித்துள்ள 'ரெட்ரோ', சசிகுமார், சிம்ரன் நடித்துள்ள 'டூரிஸ்ட் பேமிலி' படங்கள் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இரண்டு படங்களிலும் வித்தியாசமான கூட்டணி இடம் பெற்றுள்ளது. இரண்டு படங்களையுமே குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் விதமாகத்தான் எடுத்துள்ளார்கள் என்று தகவல்.
தெலுங்கில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள 'ஹிட் 3' படம் வெளியாக உள்ளது. 'ஹிட் 1, ஹிட் 2' ஆகிய இரண்டு படங்களும் பரபரப்பான க்ரைம் திரில்லராக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன. மூன்றாம் பாகத்தில் நானி நடித்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகம். அது டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பிலேயே தெரிந்துவிட்டது. படமும் நிறைய வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் ஆசிப் அலி நடித்துள்ள 'அபயந்தர குட்டவாலி' என்ற படம் வெளியாகிறது. 'ரேகாசித்ரம், கிஷ்கிந்தா காண்டம்' ஆகிய படங்கள் மூலம் சமீபத்தில் மற்ற சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் ஆசிப் அலி. இந்தப் படத்தின் மூலமும் மீண்டும் ஒரு வெற்றியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிந்தியில் அஜய் தேவகன், ரிதேஷ் தேஷ்முக் நடித்துள்ள 'ரெய்டு 2', சஞ்சய் தத், மவுனி ராய் நடித்துள்ள 'த பூட்னி', நவாசுதீன் சித்திக் நடித்துள்ள 'கோஸ்டா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. 2018ல் வெளிவந்த 'ரெய்டு' படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அதன் இரண்டாம் பாகம் வர உள்ளது. 'த பூத்னி' படம் ஒரு பேய்ப் படமாகத் தயாராகி உள்ளது.
என்னதான் இந்திய மொழிப் படங்கள் என்றாலும் ஒரு கூட்டம் ஹாலிவுட் படம் எதுவுமில்லையா என்று கேட்பார்கள். அதற்காகவே மார்வெல் ஸ்டுடியோஸ் 'தண்டர்போல்ட்ஸ்' படத்தை மே 1ம் தேதி இந்தியாவில் வெளியிடுகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.
மாநகரங்களில் வசிப்பவர்கள் மற்ற மொழித் திரைப்படங்களையும் பார்க்க விரும்பினால் அவர்கள் மேலே குறிப்பிட்ட அனைத்துப் படங்களையுமே பார்க்கலாம். மற்ற ஊர்களில் உள்ளவர்களுக்கு வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்களும், ஹாலிவுட் படமும் விருந்தாக அமையலாம்.