இசையமைப்பாளர் இளையராஜா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சிம்பொனி இசை அமைக்க வேண்டும் என்ற அவரது நீண்டகால கனவை சமீபத்தில் சாத்தியமாக்கினார் இளையராஜா. 'வேலியன்ட்' என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்திருப்பதாக இளையராஜா கடந்த ஆண்டு அறிவித்தார்.
இந்த சிம்பொனி இசையை லண்டனில் கடந்த மார்ச் 8ல் அரங்கேற்றம் செய்து சாதனை படைத்தார். அவருக்கு உலகம் முழுவதும் பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு இங்குள்ள அரசியல்வாதிகள் முதல் திரைக்கலைஞர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில், டில்லியில் இன்று (மார்ச் 18) பிரதமர் மோடியை நேரில் சந்தித்த இளையராஜா, அவரிடம் வாழ்த்துப்பெற்றார். இதுத்தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த இளையராஜா, 'பிரதமர் மோடி உடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனது சிம்பொனி "வேலியண்ட்" உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டு மற்றும் ஆதரவால் பணிவுகொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு: நமது இசை மற்றும் கலாசாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்திய இசை ஜாம்பவான் ராஜ்யசபா எம்.பி., இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி.
அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடி, சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனியான வேலியண்டை அரங்கேற்றியதன் மூலம் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்கினார். இந்த நிகழ்ச்சி உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நிகழ்த்தப்பட்டது. இந்த மகத்தான சாதனை அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.