100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மூக்குத்தி அம்மன் 2 : படத்தில் நடிப்பவர்கள் விபரம் | பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த அனுராக் காஷ்யப் | என் பணியை சிறப்பாக செய்ய முயற்சிக்கிறேன் - கஜராஜ் ராவ் | விஷ்ணு விஷாலுக்கு வில்லன் ஆன செல்வராகவன்! | அடுத்த மாதம் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு துவங்குகிறது | ராம்சரண் படத்திற்கு தயாரான சிவராஜ் குமார்! | நாகார்ஜூனா உடன் நடனமாடும் பூஜா ஹெக்டே! | பிளாஷ்பேக் : மோகன் கையில் மைக்கை கொடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக் : மறக்கடிக்கப்பட்ட மகா கலைஞன் கொத்தமங்கலம் சீனு | கோவில்களில் சினிமா பாட்டு பாட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவின் ஆரம்பகாலத்தில் கோலோச்சிய ஆளுமைகள் பலர் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் கொத்தமங்கலம் சுப்பு. நடிப்பு, கதை, வசனம், பாடல்கள் இசை என பன்முகத்துடன் வலம் வந்தார். வரலாறு அவரை நிறையவே பதிவு செய்திருக்கிறது. ஆனால் அவரைப்போலவே கொத்தமங்கலம் சீனு என்று ஒருவர் இருந்தார். அவர் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சீனிவாசன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் சோழவந்தானை சேர்ந்த பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். சிறுவயதிலேயே இசைஞானம் மிக்க அவர் கல்லிடைகுறிச்சி வேதாந்த பாகவதரிடம் இசை பயின்றவர். அக்காலத்துச் சிறுவர்களின் புகலிடமாக இருந்த 'பாய்ஸ் கம்பெனி' நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்ல குரல்வளமும், அழகான முகபாவமும் கொண்ட சீனிவாசனுக்குத் தொடக்கத்தில் சிறுசிறு வேடங்களே கிடைத்தன. பின்னர் நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்து புகழ்பெற்றார்.
அப்போது செட்டிநாட்டுப் பகுதியில் நாடகங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் சீனிவாசன், செட்டிநாட்டிலுள்ள கொத்தமங்கலத்தில் செட்டிலானார். அங்கு புகழ்பெற்றதால் கொத்தமங்கலம் சீனு ஆனார்.
இவரின் பெருமையை அப்போதைய பிரபல பாடகி சரஸ்வதி பாய் மூலம் உணர்ந்த ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் தனது சரஸ்வதி ஸ்டோர் மூலம் கொத்தமங்கலம் சீனுவின் தனி பாடல் இசை தட்டுகளை வெளியிட்டார். 1932ம் ஆண்டில் முதல் இசைத்தட்டு வெளியானது. அப்போது சீனுவுக்கு வயது 22. அதுவரை தமிழகத்தின் தென்பகுதியில் மட்டுமே பரவியிருந்த சீனுவின் புகழ் அதன்மூலம் தமிழகம் முழுவதும் பரவியது. தொடர்ந்து கொத்தமங்கலம் சீனு பாடி பல இசைத்தட்டுகள் வெளிவரத் தொடங்கின.
அதன்பிறகு சீனுவுக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்தது. லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் 1934ல் தயாரித்த 'சாரங்கதாரா' படத்தின் மூலம் நடிகர் மற்றும் பாடகர் ஆனார். அதன் பிறகு பட்டினத்தார், மீராபாய், சாந்த சக்குபாய், திருமங்கை ஆழ்வார் ,மணிமேகலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
1941ல் இயக்குநர் கே. சுப்ரமண்யத்தின் 'கச்ச தேவயானி' வெளியானது. அதில் கதாநாயகியாக நடித்த டி.ஆர்ராஜகுமாரிக்கு ஜோடியாக நடித்தவர் கொத்தமங்கலம் சீனு. தொடர்ந்து சூரியபுத்ரி , கிருஷ்ணப் பிடாரன், பக்த நாரதர், சோகாமேளர் , தாசி அபரஞ்சி , சகடயோகம், துளசி பிருந்தா போன்ற படங்களிலி நடித்தார். அவர் நடித்தது எல்லாமே புராணம் மற்றும் பக்தி படங்கள்தான்.
1950களுக்கு பிறகு திரைப்படங்களின் போக்கு மாறத் தொடங்கியது. புராண, இதிகாசப் படங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து சமூகக் கதையம்சம் உள்ள படங்கள் அதிகம் வெளியாகத் துவங்கின. இவற்றில் நடிக்க விரும்பாத கொத்தமங்கலம் சீனு சினிமாவைவிட்டே விலகினார். என்றாலும் பக்தி மற்றும் புராண நாடங்களில் கடைசி வரை நடித்துக் கொண்டே மறைந்தார்.