வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தெலுங்கர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சீமான் தவிர்த்து திரையுலகினர் யாரும் குரல் கொடுக்கவில்லை.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை கஸ்தூரி. இவரது இயற்பெயர் ஷன்மதி. இயல்பிலேயே தைரியமான நபரான கஸ்தூரி சட்டம் படித்து 1992ல் மிஸ் சென்னை பட்டம் வென்று பின் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் உடன் மிஸ் இந்தியா போட்டிகளில் பங்கேற்றவர். இறுதிப்போட்டியில் தோற்றாலும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது.
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனுக்காக எடுத்த ‛ஆத்தா உன் கோவிலிலே' என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். தனுஷ் குடும்ப குலதெய்வமான கஸ்தூரி அம்மனின் பெயரை நாயகிக்கு வைத்தார் கஸ்தூரி ராஜா. அன்று முதல் ஷன்மதி கஸ்தூரி ஆனார். பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்தார். அன்றைக்கு இவருக்கு சக போட்டியாளர்களாக இருந்த குஷ்பு, சுகன்யா, ரோஜா உள்ளிட்ட நடிகைகளுக்கு பெரிதாக வளர முடியவில்லை என்றாலும் ஆண்டுக்கு நான்கு படங்களில் நடித்து வந்தார்.
ஐரோப்பாவில் டாக்டராக பணியாற்றும் தெலுங்கர் ஒருவரை திருமணம் செய்து விட்டு பின்பு நடிப்பு வேண்டும் என்று இந்தியாவுக்கு வந்தார். தாய்மை தொடர்பாக இவர் கொடுத்த டாப்லெஸ் போட்டோ அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் கொடுத்தது. சினிமாவில் இரண்டாவது ரவுண்டில் ஓரிரு படங்களில் தலைகாட்டினார். டிவி சீரியல் பக்கமும் சென்றார். ஆனால் இவைகளை விட அரசியல் மற்றும் சினிமா சார்ந்து இவர் தெரிவித்த கருத்துக்கள் இவரை இன்னும் பிரபலமாக்கியது. தொடர்ந்து சர்ச்சை என்றாலும் அதை துணிச்சலாக பேசினார்.
அப்படித்தான் சமீபத்தில் சென்னையில் அர்ஜுன் சம்பத் தலைமையில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்துாரி பங்கேற்று பேசினார். அப்போது, தெலுங்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக, சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகேயுள்ள பப்பலக்குடா பகுதியில், சினிமா தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்த கஸ்துாரியை, போலீசார் கைது செய்தனர்.
பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கஸ்துாரி, 'நான் ஒரு சிங்கிள் மதர், சிறப்பு குழந்தையின் தாய். என்னை சிறையில் அடைக்க வேண்டாம்' என, கோரிக்கை விடுத்தார். அதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கஸ்துாரியை நீதிமன்ற காவலில் 29ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி மாலை 3:30 மணியளவில், புழல் சிறையில் கஸ்துாரி அடைக்கப்பட்டார்.
கஸ்தூரிக்கு சீமான் மட்டுமே ஆதரவு
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி: நடிகை கஸ்துாரி பேசியதில் காயம் பட்டதாக சொல்கின்றனர். தீவிரவாதியைப் பிடிப்பது போல தனிப்படை அமைத்து, ஐதராபாதுக்குச் சென்று நடிகை கஸ்துாரியை கைது செய்யும் அளவுக்கு, அவர் செய்த தவறு என்ன? மன்னிப்பு கேட்ட பின்பும், அவரை சிறைப்படுத்துவது அநியாயம்.
தி.மு.க., எல்லா விஷயத்தையும் அரசியல் மோதலாகவே பார்க்கிறது. எவ்வளவோ பேரை தி.மு.க.,வினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்துள்ளனர். குடும்பங்களை பற்றி மோசமாகப் பேசி உள்ளனர். தாய், தந்தையர் குறித்து கேவலமாக பேசி இருக்கின்றனர். அதற்கெல்லாம் யார் நடவடிக்கை எடுப்பது? நாட்டில் மலையை வெட்டி விற்றவன், விற்றுக் கொண்டிருப்பவன், மண்ணை அள்ளி திண்பவன், ஊழல் லஞ்சத்தில் ஊறி திளைப்பவன், பெண்களை வன்கொடுமை செய்து கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன் யாரையும் கைது செய்வதில்லை. அனைவரும் வெளியில் தான் சுற்றிக் கொண்டுள்ளனர்'' என்றார்.
கடினமான நேரங்களில் சீரடி சாய்பாபா, இளையராஜா, எழுத்தாளர் புலமை பித்தன் ஆகிய மூன்று பேர் என்னை தைரியமாக இருக்க உதவினர் என கஸ்தூரி அடிக்கடி சொல்வார். இவர்கள் வரிசையில் இப்போது சீமான் மட்டுமே அவருக்காக குரல் கொடுத்துள்ளார். திரை உலகை சார்ந்த மற்ற எவரும் கஸ்தூரிக்காக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.