குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு |
நடிகை நயன்தாரா மற்றும் நடிகர், தயாரிப்பாளர் தனுஷ் இடையிலான மோதல் நயன்தாரா வெளியிட்ட ஒரு அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நயன்தாரா பற்றிய 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற டாகுமென்டரியில், 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள், பாடல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த அதன் தயாரிப்பாளரான தனுஷ் தரப்பிலிருந்து 'என்ஓசி' வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை அந்த அறிக்கையில் முன் வைத்திருந்தார் நயன்தாரா.
இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையில் காதல் மலரக் காரணமாக இருந்தது அந்தப் படம். அதன் காட்சிகள் தங்களது டாகுமென்டரியில் இடம் பெறாமல் போவது அவர்களுக்கு ஒரு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தில் உள்ள அனைத்துப் பாடல்களையும் விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை, இன்று வரையும் ரசிக்கப்பட்டு வருகிறது.
நயன்தாரா நேற்று வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு 'நானும் ரௌடிதான்' படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தப் படத்திற்கான பட்ஜெட்டை விக்னேஷ் சிவன் இழுத்துவிட்டார் என்றும் சிலர் பேசியுள்ளார்கள். பட்ஜெட் எவ்வளவு, படத்தின் வசூல் எவ்வளவு, அதனால் தனக்கு லாபமா, நஷ்டமா என்பது குறித்து தயாரிப்பாளர் தனுஷ் ஒருவருக்கு மட்டுமே தெரியும். படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு பட்ஜெட் குறித்து நிச்சயம் தெரிந்திருக்கும்.
படம் வெளியான பின் தனுஷ், விக்னேஷ் சிவன் இருவரும் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்ததால் வசூல் விவரம் விக்னேஷ் சிவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல தயாரிப்பாளர்கள் அவர்களது வசூல் விவரங்களை இயக்குனர்களுக்கு அதிகமாகப் பகிர மாட்டார்கள். முன்னணி இயக்குனராக இருந்தால் வேண்டுமானால் சொல்வார்கள்.
'நானும் ரௌடிதான்' படத்தின் பட்ஜெட், வசூல் என்னவாக இருக்கும் என திரையுலகில் விசாரித்தோம். அதில் கிடைத்த சில தகவல்களைப் பகிர்கிறோம்.
2015 அக்டோபர் 21ம் தேதி இப்படம் வெளியானது. அந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்கள் என்பதால் அந்தத் தேதியில் வெளியிட்டார்கள். அதற்கேற்றபடி படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்து வசூலும் வந்துள்ளது.
விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதிகா, பார்த்திபன், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அனிருத் இசை என மொத்தமாக கலைஞர்களுக்காக கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டும் 5 கோடி ரூபாயாம். மொத்தம் 70 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். அதற்கான படப்பிடிப்பு செலவுகள் சுமார் 6 கோடி, முன், பின் தயாரிப்புப் பணிகளுக்காக ஒரு கோடி வரை செலவு, படத்தின் விளம்பரம், வெளியீடு செலவு, இதர செலவுகள் என ஒன்றரை கோடி, ஆக மொத்தம் 13 கோடியே 50 லட்சம் வரை செலவாகியிருக்கலாம் என்பது தகவல்.
அக்டோபர் 21, 2015ம் ஆண்டு விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள', படம் 'நானும் ரௌடிதான்' படத்திற்கான முக்கிய போட்டியாக இருந்தது. ஆனால், 'நானும் ரௌடிதான்' முதல் காட்சியிலேயே நல்ல வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றது. அப்போதைய பாக்ஸ் ஆபீஸ் வசூலாக 50 கோடிக்கும் மேல் வசூலித்தது என்கிறார்கள். படத்தின் பட்ஜெட், இதர வரி செலவுகள் போக நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளது.
தயாரிப்பாளராக தனுஷுக்கு போட்ட பட்ஜெட்டை விட கூடுதலாக செலவு ஆகியிருந்தாலும் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். சாட்டிலைட் உரிமை, ஆடியோ உரிமை, அதன் பிறகு ஓடிடி உரிமை என இதர வருவாய் அவருக்குத்தான் நேரடியாக போய்ச் சேர்ந்திருக்கும். இந்த பட்ஜெட், வசூல் குறித்த விவரங்கள் திரையுலக வட்டாரங்களில் விசாரித்ததில் கிடைத்தவை. அதன் உண்மை நிலவரம் என்ன என்பது அதன் தயாரிப்பாளரான தனுஷுக்கு மட்டுமே தெரியும் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
சினிமாவில் போட்ட பட்ஜெட்டை விட கூடுதல் பட்ஜெட் ஆகிறது என்பது பல படங்களுக்கும் நடக்கும் ஒன்றுதான். ஆனால், அதன் பிறகான வெற்றி, வசூல் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையிலான சச்சரவு, கோபம் ஆகியவற்றை மறக்கச் செய்துவிடும். 'நானும் ரௌடிதான்' படத்தைப் பொறுத்தவரையில் அப்படி நடக்கவில்லை. அன்று முதல் இன்று வரை தயாரிப்பாளர் தனுஷ், இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசிக் கொள்ளாமலே இருக்கிறார்கள் என்பதுதான் நமக்குக் கிடைத்த முக்கிய தகவலாக உள்ளது.
அதுதான் 'நயன்தாரா டாகுமென்டரி' விஷயத்தில் பலமாக எதிரொலித்துள்ளது.