வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
ஹிந்தி திரைப்படப் பாடல்களின் மோகம் அதிகரித்திருந்த 70களின் பிற்பகுதியில், இசைப்பிரியர்களுக்கு இசையின் மற்றொரு பரிமாணத்தை காட்டியவரும், வெகுநாட்கள் காத்திருந்த வெள்ளித்திரை இசைக்கு வெகுமதியுமாய் கிடைத்தவரும் தான் 'இசைஞானி' இளையராஜா. இவரது வருகைக்குப் பின், தமிழ் திரையிசையின் வீச்சு என்பது, அன்றாட மக்களின் இயல்பு வாழ்வில் ஓர் அங்கமானது.
அதுவரை கேட்டு ரசித்த திரையிசைப் பாடல்களின் ஒலி அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாய், நம் மண் சார்ந்த இசையை புதிய வடிவில், அதுவரை கேட்டு உணராத புதிய ஒலி அமைப்பில் தந்து, ஒட்டு மொத்த இசை உள்ளங்களையும் தன் மெட்டுக்குள் அடக்கிவிடும் வசியம் அறிந்தவர்தான் இளையராஜா. 'அன்னக்கிளி'யில் தொடங்கிய இவரது ஆரோகணம், அவரோகணம் அள்ள, அள்ளக் குறையாத அமுத சுரபியாய், அவரது இசைப்பிரவாகம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது.
ஓடாத திரைப்படத்தையும், தனது ஒப்பற்ற இசையமைப்பால், ஒய்யார திரைப்படமாய் காட்டிவிடும் வித்தை அறிந்தவர்தான் இளையராஜா. கதையின் கரு, காட்சியமைப்பின் தன்மை, கதாபாத்திரங்களின் உணர்வுகள் என அத்தனையும் தன் பின்னணி இசை கொண்டே சொல்லிவிடும் வல்லமை பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா மட்டுமே.
நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் நிபுணத்துவம் வாய்ந்த இந்த இசைமேதை, தான் இசையமைக்கும் படங்களில், சில சமயங்களில் படக்குழுவினரின் விருப்பத்திற்கேற்ப பாடலுக்கு இசையமைத்ததும் உண்டு. அப்படி உருவானதுதான் நடிகர் கமல்ஹாசனின் திரைப்படப்பாடல் ஒன்று.
நடிகர் கமல்ஹாசன், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான “ராஜ்கமல் இண்டர்நேஷனல்” மூலம் தயாரித்து, தானே நடித்து வெளியிட்ட “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படத்தில், குள்ளன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கமல், தன் சகாக்களுடன் தனது காதலி குறித்து பாடும் ஒரு சந்தோஷப் பாடலுக்கான ட்யூனை இளையராஜாவிடம் கேட்க, அவரும் வாசித்துக் காட்ட, அதில் திருப்தி கொள்ளாத கமல்ஹாசன், இளையராஜாவிடம் எம்ஜிஆர் நடித்த “அன்பே வா” திரைப்படத்தில் இடம் பெற்ற “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் நல்ல அழகி என்பேன்” என்ற பாடல் போல் வேண்டும் என்றார்.
சரி இந்த ட்யூனை கேளுங்கள் என இளையராஜா வேறொரு ட்யூனை வாசித்துக் காட்ட, இது நன்றாக இருக்கிறது என்று சொன்ன கமலிடம், நீங்கள் கேட்ட அந்த “நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்” என்ற பாடலைத்தான் நான் போட்டிருக்கிறேன் என சொல்லி, அதை பாடியும் காண்பித்திருக்கின்றார் இளையராஜா. படத்தின் தயாரிப்பாளரான நடிகர் கமல்ஹாசனையும் திருப்திபடுத்தி, அதே சமயத்தில் அந்த பழைய பாடலை அப்படியே எடுத்து கையாளாமல், அந்தப் பாடலின் சாயலில் இவரது நிபுணத்துவத்தை காட்டி, ஒரு வெற்றிப் பாடலாக தந்த இசைஞானியின் அந்தப் பாடல்தான் “புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, அந்த மணமகள்தான் வந்த நேரமாடா” என்ற பாடல்.
அதேபோல் மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மூச்சு விடாமல் பாடிய பாடல் என்ற விளம்பரத்தோடு வந்து, மாபெரும் வெற்றிப் பாடலாக இன்று வரை கொண்டாடி வரும் “கேளடி கண்மணி” திரைப்படப் பாடலான “மண்ணில் இந்தக் காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ” என்ற பாடலும் இளையராஜாவின் இசைவார்ப்பில் வந்த ஒரு அரிய பாடல் என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் “கேளடி கண்மணி” படம் வெளிவருவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்ற பாடல்களை கம்போஸ் செய்திருக்கின்றார் இளையராஜா. 1979ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “ஆறிலிருந்து அறுபதுவரை” என்ற படத்தில், எஸ்பி பாலசுப்ரமணியமும், எஸ் ஜானகியும் இணைந்து பாடியிருக்கும் “கண்மணியே காதல் என்பது, கற்பனையோ காவியமோ, கண் வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள்; நெஞ்சினில், பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா” என ஒரே மூச்சில் பாடும்படி கம்போஸ் செய்திருப்பார் இளையராஜா.
இதே ஆண்டில் வெளியான மற்றொரு திரைப்படமான “புதிய வார்ப்புகள்” என்ற திரைப்படத்திலும் இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார் இளையராஜா. “தம்தன னம்தன தாளம் வரும், புது ராகம் வரும், பல பாவம் வரும், அதில் சந்தன மல்லிகை வாசம் வரும், மணமாலை வரும் சுபவேளை வரும், மணநாள் திருநாள் புதுநாள் உனை அழைத்தது” என்ற இந்தப் பாடலையும் ஒரே மூச்சில் பாடும்படிதான் கம்போஸ் செய்திருப்பார்.
இப்படி இசைஞானி இளையராஜாவின் அற்புதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லிலடங்கா சுகராகங்கள் இவரிடம் ஏராளம்! ஏராளம்!!