புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
ஏபி நாகராஜன் இயக்கத்தில், கேவி மகாதேவன் இசையமைப்பில், சிவாஜி கணேசன், சாவித்ரி, நாகேஷ், பாலையா, முத்துராமன், தேவிகா, மனோரமா, கேபி சுந்தராம்பாள், டிஆர் மகாலிங்கம், ஏபி நாகராஜன் மற்றும் பலர் நடிப்பில் 1965ம் ஆண்டில் இதே ஜுலை 31ம் தேதி வெளியான படம் 'திருவிளையாடல்'.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் சரித்திர காலப் படங்கள்தான் அதிகம் வந்தது. அவற்றை புராணப் படங்கள் என்றும் அழைப்பார்கள். அதன் பின்தான் சமூகக் கதைகள் பக்கம் சினிமா போனது. இருந்தாலும் 60 வருடங்களுக்கு முன்பு ஈஸ்ட்மென் கலரில் வந்த இந்தத் 'திருவிளையாடல்' படம் மாபெரும் பக்திக் காவியமாக இன்று வரையிலும் சினிமா ரசிகர்களால் பாராட்டப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவபெருமானின் திருவிளையாடல்களைப் பற்றிய கதைதான் இந்தப் படம். 'சிவன் லீலை' என்ற நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்தான் இது. விறகு வெட்டியாக வந்து கர்வத்தில் இருந்த பாடகர் ஒருவரை சிவன் தோற்கடிப்பது, புலவன் நக்கீரனுக்கு எதிராக ஒரு தருமி மூலம் பாடலால் பாடம் புகட்டுவது, மீனவர்களளைக் காப்பாற்ற மீனவனாக வந்தது என சிவனின் சில 'திருவிளையாடல்கள்' தான் படத்தில் இடம் பெற்றது. கூடவே சிவனின் மகன் முருகனின் புகழ் பாட ஔவையார் கதாபாத்திரத்தையும் படத்தில் இடம் பெற வைத்தார்கள்.
படத்தில் எண்ணற்ற சிறந்த நட்சத்திரங்கள் நடித்தார்கள். அனைவரது நடிப்பும், அவர்களது கதாபாத்திரங்களும் அன்றைய ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்த ஒன்று. சிவாஜி, சாவித்ரி, நாகேஷ், பாலையா என பலருக்கு அந்தப் படம் தனித்த அடையாளமாக விளங்கியது.
கேவி மகாதேவனின் இசையில், படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே இன்றும் கேட்கத் தூண்டும் பாடல்களாக உள்ளன. “பழம் நீயப்பா, இன்றொரு நாள் போதுமா, இசைத் தமிழ் நீ செய்த, பார்த்தால் பசுமரம், பாட்டும் நானே, பொதிகை மலை உச்சியிலே, ஒன்றானவன் உருவில்,” ஆகிய பாடல்கள் பல வருடங்களாக தொடர்ந்து ரேடியோக்களில், ஊர் திருவிழாக்களில் அதிகம் ஒலித்த பாடல்களாக அமைந்தன. அந்தக் காலத்தில் கோவில் திருவிழாக்களில் 'திருவிளையாடல் ஒலிச்சித்திரம்' இடம் பெறாமல் விழாக்கள் நடக்கவே நடக்காது. பாடல்கள் ரெக்கார்டுகளாக விற்று சாதனை படைத்த அளவிற்கு அதன் வசனங்கள் மட்டுமே அடங்கிய ரெக்கார்டுகளும் சாதனை படைத்தது. 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரன் பேசும் வசனமும், தருமியாக நடித்த நாகேஷின் புலம்பல் வசனங்களும் இப்போதும் பலருக்கும் மறக்காத ஒன்று.
இன்றைய பல சரித்திரப் படங்களைப் பார்த்து, அதில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகளைப் பார்த்து பிரமிக்கும் இன்றைய தலைமுறை ரசிகர்கள் 'திருவிளையாடல்' படத்தில் உள்ள அரங்குகள், மேஜிக் காட்சிகளைப் பார்த்தால் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். அந்தக் காலத்திலேயே தமிழ்ப் படங்கள் சாதித்த சாதனைகள் கணக்கில் அடங்காது.
25 வாரங்களுக்கும் மேல் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக, வசூல் சாதனை படமாக அமைந்தது இந்தப் படம். அந்த ஆண்டிற்கான சிறந்த இரண்டாவது திரைப்படத்திற்கான, தேசிய விருதையும் வென்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.