'ட்ரிப்' என்ற படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் தற்போது இயக்கி உள்ள படம், 'தூக்குதுரை'. இதில் யோகி பாபு, இனியா, மகேஷ், சென்ட்ராயன், பாலசரவணன், 'கும்கி' அஸ்வின், சத்யா, மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் தயாரித்துள்ளனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் கே.எஸ் இசை அமைத்துள்ளார். வரும் 25ம் தேதி வெளிவருகிறது.
படம் குறித்து இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் கூறுகையில், ''இந்த படம் முழு நீள காமெடி படமாக உருவாகியுள்ளது. வன்முறை காட்சிகள் துளியும் இருக்காது. அதனால் எல்லோரும் குடும்பத்துடன் சென்று படத்தை பார்க்கலாம். படத்தை வருகிற பிப்ரவரி 9ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்கள் நிறைய ரிலீசாகிறது என்பதால், நாங்கள் எடுத்த முடிவுதான், இம்மாதம் 25ம் தேதியே ரிலீஸ் செய்துவிடுவது என்பது. பெரிய படங்கள் வரும்போது சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் புதிய பெரிய படங்கள் வரும்போது அதற்கு வழிவிட்டு சிறிய படத்தை எடுத்து விடுகிறார்கள். அதனால்தான் இந்த முடிவு,'' என்றார்.