பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
2022ல் வெளிவந்த 'விக்ரம்' படத்தை முதன் முதலில் அறிவித்த போதுதான் இன்றைய சினிமா ரசிகர்கள் 1986ல் வெளியான 'விக்ரம்' படத்தைத் தேடிப் பிடித்து பார்த்திருப்பார்கள். தமிழ் சினிமாவில் அன்றைய இளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம் 'விக்ரம்'.
ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன், சத்யராஜ், லிஸி, டிம்பிள் கபாடியா, அம்ஜத் கான், ஜனகராஜ் மற்றும் பலர் நடித்து 1986ம் ஆண்டு மே 29ம் தேதி வெளிவந்த படம் 'விக்ரம்'. ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக வந்த அந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெறவில்லை என்றாலும் ஒரு முக்கியமான படமாக அமைந்தது.
அந்தக் காலத்தில் ஹாலிவுட் படங்களை ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட படங்கள் தமிழ் சினிமாவில் வராதா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு முடிந்தவரையில் ஒரு திருப்தியைக் கொடுத்த படம். கமாண்டர், கம்ப்யூட்டர், ராக்கெட், சலாமியா நாடு என என்னென்னவோ கதை சொல்கிறார்கள் பி அன்ட் சி ரசிகர்கள் விமர்சித்த ஒரு படம்.
பாலிவுட்டில் அப்போது முன்னணியில் இருந்த டிம்பிள் கபாடியாவின் தமிழ் அறிமுகம் ரசிகர்களை மிகவும் வசீகரித்தது. மலையாளத்தில் பல படங்களில் நடித்த லிஸி தமிழில் அறிமுகமான படம். ஹிந்தியில் 1975ல் வெளிவந்து வசூல் சாதனை படைத்த 'ஷோலே' படத்தின் வில்லன் அம்ஜத் கான் தமிழில் நடித்த படம் என சில முக்கிய அறிமுகங்களும் படத்தில் இடம் பெற்றது.
இளையராஜாவின் இசையில் 'மீண்டும் மீண்டும் வா…, வனிதாமணி வன மோகினி…, சிப்பிக்குள் ஒரு முத்து…, என் ஜோடி மஞ்சக்குருவி…, விக்ரம்…விக்ரம்….,” ஆகிய படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது. அந்த 'விக்ரம்…விக்ரம்…' டியூன்தான் 2022ல் வெளிவந்த 'விக்ரம்' படத்தின் பின்னணி இசையிலும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டது.
எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'விக்ரம்' என்ற நாவலைத் தழுவி உருவான படம். நாவலைப் போன்றே படமும் விறுவிறுப்பாக இருந்ததாக ரசிகர்கள் சொன்னார்கள். இருந்தாலும் ஏ சென்டர்களில் மட்டும் அதிக வரவேற்பைப் பெற்ற படம், பி அன்ட் சி சென்டர்களில் பெரிய வரவேற்பைக் கொடுக்கவில்லை என்பதும் உண்மை. பின்னாட்களில் வர வேண்டிய ஒரு படத்தை முன்னரே யோசித்து கொடுத்தது கமல்ஹாசன், சுஜாதா, ராஜசேகர் கூட்டணி. அப்படம் மட்டும் மாபெரும் வெற்றி பெற்றிருந்தால் நல்ல தரமான, பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பல ஆக்ஷன் படங்களை கமல்ஹாசனிடமிருந்து எதிர்பார்த்திருக்கலாம்.
2022ல் வெளியான 'விக்ரம்' படத்தின் வசூல் 1986ல் வெளியான 'விக்ரம்' படத்திற்கும் கிடைத்திருக்க வேண்டியது. அதை அன்றைய சினிமா ரசிகர்கள் செய்யத் தவறிவிட்டார்கள்.