மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? | ஒருங்கிணைந்து செயல்படுவோம் : தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு |
தொலைக்காட்சியில் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட், சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து 'லப்பர் பந்து' கொடுத்த வெற்றியால் மலையாள சினிமாவில் நுழைந்ததை நம்முடன் பகிர்கிறார் டி.எஸ்.கே.,
''இயற்பெயர் சரவணக்குமார், பிறந்து வளர்ந்தது திருச்சி. முன்பு எனது தந்தை காமெடி நிகழ்ச்சி சி.டி.,க்களை வாங்கி வருவார். அதில் முழுவதும் மிமிக்கரி மட்டுமே இருக்கும். அதை தினமும் கேட்டு மனதில் பதிந்து அதன் மூலம் நானும், எனது சகோதரரும் மிமிக்கிரி செய்தோம்.
பள்ளியில் சக மாணவர்களுடன் மிமிக்கிரி செய்து காண்பித்த போது கைதட்டல் கிடைத்தது. எனக்குள் இருந்த மிமிக்கிரி திறமையை எனக்கே தெரியப்படுத்தி ஊக்கப்படுத்தி, போட்டிகளில் வெற்றி பெற உதவியாக இருந்தவர்கள் எனது ஆசிரியர்கள். பள்ளிப்படிப்பை முடித்து கல்லுாரியில் சேர்ந்தேன். கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டிகளில் மிமிக்கிரி செய்து வெற்றி பெற்றேன்.
2007ல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான போட்டியில் முன்னணி நடிகர், நடிகைகளின் குரல்களை மிமிக்கிரி செய்ததால் வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் தங்களின் சொந்த ஊரின் பெயரை அடைமொழியாக வைத்துக்கொள்வது வழக்கமாக இருந்தது.
அதே போன்று 'திருச்சி சரவணக்குமார்' என வைத்துக்கொண்டேன். இந்த பெயரை முழுவதுமாக யாரும் கூப்பிடாததால் அதை சுருக்கி 'டி.எஸ்.கே.,' என மாற்றினேன். தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபுரிந்தேன்.
வாழ்க்கையில் அடுத்த கட்டம் செல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியதால் நடிக்க துவங்கினேன்.
மகான் கணக்கு, வாராயோ வெண்ணிலாவே, காவல், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, அடங்காதே, சிக்சர், பெட்ரோமாக்ஸ், தனுசு ராசி நேயர்களே, வரலாறு முக்கியம், கருங்காப்பியம், வல்லான் உள்பட 18 படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். தற்போது நடிகர் அர்ஜூன் தாஸ் உடன் 'பாம்' திரைப்படத்தில் நடித்து உள்ளேன்.
சமீபத்தில் வெளியான 'லப்பர் பந்து' படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து திறமையை வெளிப்படுத்தினேன். இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. பல ஆண்டுகளாக கிடைக்காத வெற்றி 'லப்பர் பந்து' மூலமாக கிடைத்தது.
மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் உடன் 'விலாயத் புத்தா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நிறைய படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும், பல வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறேன்.
மிமிக்கிரி கலைஞராக இருந்ததால் மற்ற நடிகர்களின் பாவனைகள் உடலில் அதிகமாக வெளிப்படும். நடிகராக விருப்பம் இருந்ததால் மிமிக்கிரியை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஓர் அடையாளம் மட்டுமே; சினிமாவில் ஜெயிக்க அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். எல்லாரையும் வாழ வைத்த சென்னை தற்போது என்னையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.