யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
2025ம் ஆண்டு ஆரம்பமாகும் போது இந்த ஆண்டில் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்கள் வரப் போகிறது என்பதே தமிழ் சினிமா உலகத்திற்கான ஒரு பெரிய விஷயமாக இருந்தது.
எதிர்பார்ப்பில் 2025
ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி', கமல்ஹாசனின் 'தக் லைப், இந்தியன் 3', விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்', அஜித்தின் 'விடாமுயற்சி, குட் பேட் அக்லி', விக்ரமின் 'வீர தீர சூரன் 2', தனுஷின் 'இட்லி கடை, குபேரா', சிலம்பரசனின் 'தக் லைப்', சூர்யாவின் 'ரெட்ரோ, சூர்யா 45', கார்த்தியின் 'வா வாத்தியார், சர்தர் 2', சிவகார்த்திகேயனின் 'பராசக்தி', விஜய் சேதுபதியின் 'ஏஸ்', ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை, பராசக்தி, ஜீனி' என ஒரு பெரிய பட்டியலே இருந்தது. இவற்றில் ஓரிரு படங்கள் வெளியாகிவிட்டன. மீதியுள்ள படங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.
தென்னிந்திய மொழிகளில் தெலுங்கு, கன்னடம் ஆகியவை 1000 கோடி வசூலைக் கடந்து படங்களைக் கொடுத்துவிட்டன. ஆனால், தமிழ் சினிமா இன்னும் அந்த ஒரு சாதனையை எட்டிப் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறது. இந்த வருடம் அப்படி ஒரு படம் வந்துவிடும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அதிர்ச்சி தந்த விடாமுயற்சி
ஆனால், 2025ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்கள் அப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறிவிட்டன. டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி' படம் எப்படியும் 300 கோடி வசூலையாவது கடந்துவிடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அப்படம் அதில் பாதியைத்தான் கடந்துள்ளது என்பது பாக்ஸ் ஆபீஸ் தகவலாக உள்ளது. அவ்வளவு கடந்தும் அப்படம் லாபத்தைத் தரவில்லை என்பது மற்றுமொரு சோகம்.
அடுத்தடுத்த மாதங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வர உள்ள நிலையில் முதலில் வந்த பெரிய நடிகரான அஜித் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு மற்ற முன்னணி ஹீரோக்களுக்கும் அதிர்ச்சியைத்தான் கொடுத்திருக்கும். 'ஸ்டார் வேல்யூ' என்பது இங்கு முக்கியமில்லை, படத்தின் 'கன்டென்ட்' என்ன சொல்கிறது என்பதுதான் முக்கியம் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் அப்படி வந்த சில படங்கள் பெரிய தோல்வியைத் தழுவி ஏமாற்றத்தைத் தந்தன. அது இந்த ஆண்டிலும் தொடர்ந்துவிடக் கூடாது என்றுதான் திரையுலகினரும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆச்சர்யம் தந்த மத கஜ ராஜா
இந்த வருடத்தில் தோல்வியாக ஒரு அதிர்ச்சி கிடைத்தது என்றால் மற்றொரு பக்கம் ஆரம்பத்திலேயே வெற்றியிலும் ஒரு அதிர்ச்சி கிடைத்தது. அது 'மத கஜ ராஜா' படம் மூலம் ஆச்சரிய அதிர்ச்சியாக அமைந்தது. அப்படம் முடிவடைந்து பல்வேறு சிக்கல்கள் காரணமாக 12 வருடங்களாக வெளியாகாமலேயே இருந்தது. பொதுவாக வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு ஓரிரு வருடங்கள் தாமதமாக வந்தாலே அப்படங்கள் வரவேற்பைப் பெற்ற வரலாறு இல்லை. ஆனால், 12 வருடங்களுக்குப் பிறகு வந்த ஒரு படம் 50 கோடி வசூலுக்கும் அதிகமாக வசூலித்து 50 நாட்கள் வரை ஓடியதெல்லாம் அபூர்வமாக நிகழக் கூடியவை. அது தமிழ் சினிமாவில் முதல் முறையாக நிகழ்ந்திருக்கிறது. சுந்தர் சி, விஷால், சந்தானம் கூட்டணி ஜாலியான ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்கக் காரணமாக அமைந்தது.
குடும்பங்கள் கொண்டாடிய குடும்பஸ்தன்
அடுத்ததாக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படமாக 'குடும்பஸ்தன்' படம் அமைந்தது. தமிழ் சினிமாவில் மூன்றாம் கட்ட, நான்காம் கட்ட நடிகர்களின் படங்களுக்கு அவ்வளவு வரவேற்பு கிடைக்காது. ஆனால், அதைத் தொடர்ந்து பொய்ப்பித்து வருகிறார் மணிகண்டன். 'குட் நைட், லவ்வர்' என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்தவருக்கு இந்த ஆண்டில் வெளிவந்த 'குடும்பஸ்தன்' மற்றுமொரு வெற்றிப் படமாக அமைந்தது. விமர்சன ரீதியாக கொஞ்சம் விமர்சிக்கப்பட்டாலும் இப்படம் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றிப் படமாக அமைந்தது.
தூள் கிளப்பிய டிராகன்
இந்த ஆண்டில் முதன் முதலில் 100 கோடி வசூலைக் கடந்த 'விடாமுயற்சி' படம் லாபகரமான படமாக அமையவில்லை. ஆனால், இந்த வாரத்துடன் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் 'டிராகன்' படம் லாபகரமான படமாக ஏற்கெனவே அமைந்துவிட்டது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் லாபக் கணக்கை ஆரம்பித்து விட்டது. 'லவ் டுடே' படத்தின் வெற்றியை அடுத்து இந்தப் படத்திலும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் அடுத்த ஏறுமுக ஹீரோவாக வளர்ந்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
மற்ற பொங்கல் படங்கள் இனித்ததா
பொங்கல் வெளியீடாக வந்த 'மத கஜ ராஜா' லாபத்தைத் தந்துவிட, அதனுடன் பொங்கலை முன்னிட்டு வந்த 'காதலிக்க நேரமில்லை, வணங்கான்' ஆகிய படங்கள் ஓரளவிற்கே வரவேற்பைப் பெற்றன. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி அறிமுகமான 'நேசிப்பாயா' ஏமாற்றத்தையே தந்தது.
பாலா இயக்கத்தில் வந்த 'வணங்கான்' படம் வழக்கம் போல பாலாவின் மற்றுமொரு படமாகவே அமைந்தது. இந்தப் படத்தில் சூர்யா நடிக்க மறுத்தன் காரணம் படத்தைப் பார்த்த பிறகுதான் பலருக்கும் புரிந்தது.
இந்த ஆண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மற்றொரு படமாக தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் இருந்தது. அறிமுக மற்றும் வளரும் நட்சத்திரங்களை வைத்து ஒரு '2 கே' காதல் கதையைக் கொடுத்திருந்தார் தனுஷ். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பி அன்ட் சி சென்டிர்களில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
அதிக படம் ரிலீஸ் நல்லதா...
இந்த இரண்டு மாதங்களில் ஒரே நாளில் 9 படங்கள் வெளிவந்ததும் நடந்தது. பிப்ரவரி 14ம் தேதி காதல் தினத்தை முன்னிட்டு அத்தனை படங்கள் வந்தன. ஆனால், அவற்றில் ஒன்று கூட கவனத்தை ஈர்க்கவில்லை என்பது சோகமே. ஒரே நாளில் இத்தனை படங்கள் வருவது பாதிப்பை ஏற்படுத்தாதா என திரையுலகத்தின் ஒரு சங்கம் கூட யோசிக்கவில்லை. இப்படி ஒரு அதிக வெளியீடு மார்ச் மாதம் 7ம் தேதி மீண்டும் நடக்கப் போகிறது. அன்றைய தினம் 10 படங்கள் வரை வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்தடுத்த மாதங்களில் இப்படி நடக்க விடுவதை நினைத்தால் என்னவென்று சொல்வது ?.
பிப்ரவரி மாதக் கடைசி நாளில் வந்த படங்களில் 'சப்தம், அகத்தியா' என இரண்டு அமானுஷ்ய படங்கள் கொஞ்சமாக பயமுறுத்தி உள்ளன. 'சப்தம்' படம் தலைப்புக்கேற்றபடியே அற்புதமான சப்தத்துடன் திரையில் தனியாகக் கேட்கிறது. இரண்டு படங்களும் தியேட்டர்களில் எப்படி வரவேற்பைப் பெறுகிறதோ இல்லையோ ஓடிடி தளத்தில் வெளிவந்தால் பல ரசிகர்களைக் கவர வாய்ப்புள்ளது.
நமது கணக்குப்படி பிப்ரவரியோடு முடிந்த இரண்டு மாதங்களில் 45 படங்கள் தியேட்டர்களில் வெளியாகி உள்ளன. அவற்றில் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்தது மூன்றே மூன்று படங்கள்தான். 'மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன்' ஆகியவைதான் அந்த மூன்று படங்கள்.
வழக்கம் போல இந்த ஆண்டும் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. கடந்த இரண்டு மாதங்களில் ஓடிடி தளத்தில் ஒரு படம் கூட அப்படி வெளியாகவில்லை.
ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக மாதவன், சித்தார்த், நயன்தாரா நடித்துள்ள 'டெஸ்ட்' படம் இருக்கும். இப்படத்தின் டீசரை வெளியிட்டு விட்டார்கள். விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகலாம்.
திருப்தி கிடைத்தால் போதும்
இந்த மார்ச் மாதம் தேர்வுகள் மாதம் என்பதால் முன்னணி நடிகர்களின் படங்கள் வர வாய்ப்பில்லை. மாதக் கடைசியில் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன் 2' படம் வெளியாக உள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் வர உள்ளது. 'விடாமுயற்சி' தந்த ஏமாற்றத்தை அந்தப் படங்கள் தராது என்ற நம்பிக்கையில் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும், ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
1000 கோடி வருகிறதோ இல்லையோ, படத்தை வாங்குபவர்களுக்கு வசூலும், படத்தைப் பார்க்க வருபவர்களுக்கு திருப்தியும் கிடைத்தால் போதும்.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வெளியான படங்கள்…
ஜனவரி
ஜனவரி 3 : பயாஸ்கோப், கடைசி நேரத்தில், கலன், மௌனமே காதலாய், சீசா, எக்ஸ்ட்ரீம்
ஜனவரி 10 : மெட்ராஸ்காரன், வணங்கான்
ஜனவரி 12 : மத கஜ ராஜா
ஜனவரி 14 : காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, தருணம்
ஜனவரி 17 : சிதறிய பக்கங்கள்
ஜனவரி 24 : பாட்டல் ராதா, குடும்பஸ்தன், குழந்தைகள் முன்னேற்றக் கழகம், Mr.ஹவுஸ்கீப்பிங், நான் வேற மாதிரி, பூர்வீகம், வல்லான்
ஜனவரி 31 : காண்டீபன், ராஜபீமா, ரிங் ரிங், தறுதல, வரம்பு
பிப்ரவரி
பிப்ரவரி 6 : விடாமுயற்சி
பிப்ரவரி 14 : 2 கே லவ் ஸ்டோரி, 9 எஎம் டூ 9 பிஎம் வேலண்டைன்ஸ் டே, அது வாங்குனா இது இலவசம், பேபி & பேபி, தினசரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, கண்நீரா, ஒத்த ஓட்டு முத்தையா
பிப்ரவரி 21 : டிராகன், ஈடாட்டம், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பல்லவபுரம் மனை எண் 666, பிறந்தநாள் வாழ்த்துகள்
பிப்ரவரி 28 : அகத்தியா, கடைசி தோட்டா, கூரன், சப்தம்