புஷ்பா 2 திரைப்படம் வெளியான பிறகு அதற்கு கிடைத்த அபரிமிதான வெற்றியும் வசூலும் ஒரு பக்கம் என்றால் படம் வெளியான நாளிலிருந்து அதனை சுற்றி சுழன்றடிக்கும் சர்ச்சைகளும் இன்னொரு பக்கம் தொடரவே செய்கின்றன. புஷ்பா 2 படம் பார்க்க வந்த ஒரு பெண் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். அதன் பிறகு நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார். அதன் பிறகு இந்த படத்தில் காவல்துறை அதிகாரிகளை தவறாக சித்தரிப்பது போன்று காட்சி இடம் பெற்றுள்ளது என்று ஒரு வழக்கு பதிவானது. இன்னொரு பக்கம் இந்த படத்தில் வில்லனாக நடித்த பஹத் பாசிலின் கதாபாத்திர பெயர் பன்வார் சிங் ஷெகாவத் என இருப்பதால் ஷெகாவத் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒரு பக்கம் போர்க்கொடி தூக்கினார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் பாடிய தம்முண்டு பட்டுக்கோரா சிகாவத்து என்கிற பாடல் யு-டியூப்பில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியானது. ஆனால் இதற்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக தற்போது இந்த பாடலை யு-டியூப்பில் இருந்து நீக்கியுள்ளது இந்த பாடலை வெளியிட்டுள்ள டி சீரிஸ் நிறுவனம். ஷெகாவத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு ஒருபுறம் தற்போது இளம் பெண் மரணம் காரணமாக அல்லு அர்ஜுன் சந்தித்து வரும் எதிர்ப்பு இன்னொரு பக்கம் என இந்த பாடல் தூக்கப்படுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.