தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகாவுக்கு வாய்ஸ் கொடுத்தார் என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம்.. ஆனால் ராஷ்மிகாவின் கேர்ள் பிரண்டுக்கு எதற்காக வாய்ஸ் கொடுத்தார் என இயல்பாகவே ஒரு கேள்வி எழும். ஆனால் விஷயம் இருக்கிறது. தற்போது 'புஷ்பா 2' படத்தில் தனது நடிப்பிற்காக, நடனத்திற்காக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் தனது மிக நெருங்கிய நண்பரும் காதலராக கிசுகிசுக்கப்படுபவருமான விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்துடன் சேர்ந்து இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்த்துள்ளார்.
இந்த நிலையில் ராஷ்மிகா நடித்துவரும் புதிய படமான 'கேர்ள் பிரண்ட்' படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரில் படம் சம்பந்தப்பட்ட எந்த வசனங்களும் இடம் பெறாமல் வெறும் பின்னணி இசை மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதே சமயம் இந்த டீசரின் துவக்கத்திலேயே நடிகர் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவின் காதல் பற்றி விவரிப்பதாக துவங்குகிறது. இந்த படத்தை பின்னணிப் பாடகி சின்மயின் கணவரும் பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகருமான ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார்.
அதனால் இந்த டீசருக்கு ஒரு விளம்பர யுக்தியாக விஜய் தேவரகொண்டாவின் குரலை பயன்படுத்தி உள்ளார் என்றே தெரிகிறது. விஜய் தேவரகொண்டா குரலுடன் ராஷ்மிகாவின் விதவிதமான முக பாவங்களுடன் ஹிருதயம் புகழ் இசை அமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையுடன் இந்த டீசர் பார்ப்பவர்களை மீண்டும் ஒருமுறை பார்க்கச் செய்யும் விதமாகவே உருவாக்கப்பட்டுள்ளது.