கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
2017ல் வெளிவந்த 'கூட்டத்தில் ஒருவன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தசெ ஞானவேல். அந்தப்படம் அவருக்கு குறிப்பிடத்தக்க அறிமுகத்தை ஏற்படுத்தித் தரவில்லை. கோலிவுட்டில் அறிமுகமான இயக்குனர்களில் கூட்டத்தில் ஒருவராகவே ரசிகர்களிடம் கடந்து போனார்.
ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ஜெய் பீம்' படம் மூலம் அவருக்கு நல்லதொரு பெயர் கிடைத்தது. அப்படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்றது. ஒரு உண்மைச் சம்பவத்தை உண்மைக்கு நெருக்கமாகக் காட்டினார் என்று பலரும் பாராட்டினார்கள்.
அப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரண்டு படங்களை இயக்கியவர், அதில் ஒரு படத்திற்கு மட்டுமே வரவேற்பு, அதுவும் தியேட்டர்களில் வெளியாகவில்லை, ஓடிடியில் வெளியாகியது, அதற்கே ரஜினி பட வாய்ப்பா என பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
அப்படத்தின் அறிவிப்பு வெளிவந்து அதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளைப் பற்றிய அறிவிப்பு வந்த போது அவர்களது ஆச்சரியம் மேலும் அதிகமாகியது. ரஜினிகாந்த் தவிர, அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, கிஷோர், ராவ் ரமேஷ், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரோகிணி என திறமையான நட்சத்திரக் கூட்டத்துடன் 'வேட்டையன்' உருவாகி நாளை மறுதினம் அக்டோபர் 10ல் வெளியாக உள்ளது.
வழக்கமான ரஜினி படங்களைப் போல இப்படத்திற்கு பெரும் பரபரப்பு தற்போது இல்லை என்பது உண்மை. சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வருகிறார். இருந்தாலும் படத்திற்கான முதல் மூன்று நாட்களுக்கான முன்பதிவு வழக்கம் போலவே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினி படங்களுக்கு உரிய ஆரம்பகட்ட வரவேற்பு இந்தப் படத்திற்கும் கிடைத்துவிடும் என்பது பாக்ஸ் ஆபீஸ்ட் வட்டாரங்களின் எதிர்பார்ப்பு.
அதேசமயம் கருத்து ரீதியாக இந்தப் படம் 'என்கவுன்டர்' பற்றிய படம் என்பது படம் வெளிவந்த பின் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி படம் என்றாலே அது அவருடைய படமாக மட்டுமே அடையாளப்படுத்தப்படும். ஆனால், இந்தப் படத்தில் பல டாப் நடிகர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாது இயக்குனரின் முந்தைய படமும் காவல்துறை கொடுமைகளைப் பற்றிய படமாக அமைந்து பல விதங்களில் விவாதிக்கப்பட்டது.
இந்தப் படத்திலும் அப்படி ஒரு கதை இருப்பதால் அது ரஜினி என்ற ஒரு சூப்பர் ஸ்டாரின் தனித்துவத்தை மீறி விவாதிக்கப்பட்டால் அந்தப் படம் ஒரு இயக்குனரின் படமாகவே பார்க்கப்படும். ரஜினியின் ரசிகர்களுக்கும் அப்படி ஒரு சந்தேகம் இந்தப் படத்தின் மீது இருக்கிறது. ஹீரோயிசக் காட்சிகள் படத்தில் இருக்குமா அல்லது ஒரு இயல்பான கதையில், கதாபாத்திரத்தில் அவரை இயக்குனர் நடிக்க வைத்திருப்பாரா என்ற கேள்வியும் அவர்களிடத்தில் உள்ளது.
இதற்கு முன்பு ரஜினி நடித்து கடந்தாண்டு வெளிவந்த 'ஜெயிலர்' படம் ஒரு முழுமையான கமர்ஷியல் படம், அதில் ரஜினியின் ஹீரோயிசக் காட்சிகள் அதிகம் இருந்ததால்தான் அப்படம் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்திலும் காவல்துறை அதிகாரி, இந்தப் படத்திலும் காவல்துறை அதிகாரி. இரண்டிற்குமான அணுகுமுறையில் நிச்சயம் வித்தியாசம் இருக்கும் என்றும் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
'வேட்டையன்' இயக்குனரின் படமா, ரஜினிகாந்த் படமா என்ற இந்த கேள்விகளுக்கெல்லாம் 48 மணி நேரத்தில் விடை கிடைத்துவிடும்.