மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் தர்மேந்திரா மற்றும் மீனாகுமாரி நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற “பூல் அவுர் பத்தர்” என்ற ஹிந்திப் திரைப்படம் சென்னையில் நீண்ட நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்து கொண்டிருந்தது. திருட்டுத் தொழிலை பிரதானமாகக் கொண்டு பிழைப்பு நடத்தி வரும் திருடன் ஒருவனை, வாழ்க்கையில் எந்தப் பிடிமானமும் இல்லாமல் வாழ்ந்து வரும் ஒரு இளம் விதவைப் பெண்ணிற்கு அவனை திருத்தி நல்வழிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கல்மனம் படைத்த அந்த திருடனின் இதயத்தை மலர் போல மென்மையாக்கி அவன் வாழ்க்கையை நெறிபடுத்தி, அவளையே அவன் மணமுடிப்பது போல் அமைந்தது.
இந்த திரைப்படத்தை பார்த்த நடிகை சவுகார் ஜானகி, மீனாகுமாரியின் நடிப்பைப் பார்த்து வியந்ததோடு, தமிழில் இந்தப் படத்தை யார் எடுத்தாலும் அதில் மீனாகுமாரியின் விதவை கதாபாத்திரத்தை எப்படியாவது கேட்டு வாங்கி நடித்து விடவேண்டும் என்ற ஆவலும் அவரை தொற்றிக் கொண்டது.
ஜெமினி நிறுவனம் “பூல் அவுர் பத்தர்” ஹிந்தி திரைப்படத்தை தமிழில் தயாரிக்க திட்டமிட்டது. விபரம் அறிந்த சவுகார் ஜானகி, ஜெமினி எஸ்எஸ் பாலனை அணுகி, படத்தில் வரும் மீனாகுமாரியின் வேடத்தில் நடிக்கும் தனது விருப்பத்தை தெரிவித்தார். எம்ஜிஆரின் ஒப்புதலோடு அந்த வேடம் சவுகாருக்கு வழங்கப்பட்டது.
எம்ஜிஆரின் 100வது திரைப்படமாக “ஒளி விளக்கு” என்ற பெயரில் வெளிவந்தது அத்திரைப்படம். திருடனாக எம்ஜிஆரும், இளம் விதவையாக சவுகார் ஜானகியும் நடித்தனர். இந்தபடத்தில், எம்ஜிஆருக்கு ஜோடியாக ஜெயலலிதா ஒரு நடன மங்கை வேடத்தில் நடித்தார். ஹிந்தி திரைப்படத்தில் வருவதுபோல் அந்த இளம் விதவை கதாபாத்திரத்தை நாயகன் மணமுடிப்பது போல் தமிழில் எடுத்தால் அதை எம்ஜிஆர் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என எண்ணி, அந்த கதாபாத்திரத்தை நாயகனின் சகோதரியாக்கி முடிவில் மரணம் அடைவது போல் எடுத்திருப்பர்.
எம்ஜிஆரின் 100வது படம், ஜெமினி நிறுவனத்திற்காக எம்ஜிஆர் நடித்த ஒரே திரைப்படம், ஜெமினி நிறுவனத்தின் முதல் வண்ணத் திரைப்படம் என்ற பெருமைகளோடு வெளிவந்த இத்திரைப்படத்தில் சவுகார் ஜானகியின் நடிப்பு அற்புதமாக அமைந்து படத்தின் வெற்றிக்கு துணை நின்றது.
மேலும் எம்ஜிஆர் தமிழக முதல்வரான பின்பு 1984ல் உடல் நலமின்றி மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று அங்குள்ள ப்ருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் நலம்பெற வேண்டி இத்திரைப்படத்தில் சவுகார் ஜானகி பாடுவதுபோல் வரும் “ஆண்டவனே உன் பாதங்களை” என்று ஆரம்பமாகும் பாடலை தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கச் செய்து, எம்ஜிஆர் பூரண நலம் பெற்று மீண்டும் முதல்வராக நல்லாட்சி செய்ய வழிவகுத்த வரலாற்று சிறப்பு மிக்க பாடல் காட்சியில் நடித்த பெருமைக்கும் உரியவரானார் நடிகை சவுகார் ஜானகி.