பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! | த்ரிவிக்ரம், வெங்கடேஷ் படத்தில் இணையும் இளம் நாயகி! |
மவுனப் படங்களிலிருந்து பேசும் படமாக தமிழ் சினிமா பரிணாம வளர்ச்சி அடைந்ததிலிருந்து ஏறத்தாழ ஐம்பது வருடங்களாக, அந்தந்த காலகட்டங்களுக்கு ஏற்றவாறு தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ் திரையுலகம் போதுமான முன்னேற்றத்தைக் கண்டிருந்த போதிலும், படத்தயாரிப்பு என்று வரும்போது அவை முற்றிலும் கருப்பு வெள்ளைத் திரைப்படங்களையே தயாரித்து வெளியிடும் நிலையில்தான் இருந்து வந்தது. இந்நிலையில் எம் ஜி ஆர், சிவாஜி என்ற இருபெரும் ஜாம்பவான்கள் கோலோச்சியிருந்த காலங்களிலிருந்து, அடுத்த தலைமுறை நாயகர்களான ரஜினி, கமல் வரை நீடித்திருந்தது என்பதே உண்மை. காரணம் தயாரிப்பு செலவு பன்மடங்கு கூடும் என்ற ஒற்றைக் காரணத்தினாலேயே வண்ணத் திரைப்படங்களை எடுப்பதற்கு சுணக்கம் காட்டும் நிலையும் இருந்து வந்தது.
அந்த வகையில் 1950களிலேயே செலவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் வண்ணத் திரைப்படத்தை எடுக்க முன் வந்த முதல் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிப்பாளர் டி ஆர் சுந்தரம் அவர்களின் சேலம் “மாடர்ன் தியேட்டர்ஸ்”. இந்நிறுவனம் தயாரித்த “அலிபாபாவும் 40 திருடர்களும்” என்ற திரைப்படம்தான் தென்னிந்தியாவின் முதல் வண்ணத் திரைப்படம் என்ற அந்தஸ்தைப் பெற்ற திரைப்படமாக வெளிவந்தது. இத்திரைப்படத்தின் நாயகனாக நடித்திருந்தவர் எம் ஜி ஆர். முற்றிலும் கேவா கலரில் தயாரிக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் 1956ல் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது.
இந்த வரிசையில் அடுத்து வருவது தயாரிப்பாளர் ஜி என் வேலுமணி அவர்களின் “சரவணா பிலிம்ஸ்”. “பாகப்பிரிவினை”, “பாலும் பழமும்”, “பாதகாணிக்கை”, “பணத்தோட்டம்”, “இது சத்தியம்”, “கலங்கரை விளக்கம்”, “சந்திரோதயம்” என தொடர்ந்து கருப்பு வெள்ளைத் திரைக்காவியங்களைத் தந்து கொண்டிருந்த இந்நிறுவனத்தின் முதல் வண்ணத் திரைக்காவியமாக வெளிவந்ததுதான் “படகோட்டி”. 1964ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் மீனவர்களின் இன்னல்களையும், அவர்கள் படும் துன்பங்களையும் துடைத்தெறியும் நாயகனாக நடித்திருந்தவரும் 'மக்கள் திலகம்' எம் ஜி ஆரே.
அடுத்து நாம் பார்க்க இருப்பது தென்னிந்திய திரையுலகின் மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தயாரிப்பாளர் பி நாகிரெட்டி அவர்களின் “விஜயா வாஹிணி ஸ்டூடியோஸ்”. “பாதாள பைரவி”, “மிஸ்ஸியம்மா”, “மாயா பஜார்” போன்ற மாபெரும் வெற்றித் திரைப்படங்களைத் தந்த இந்நிறுவனம், தெலுங்கில் என் டி ராமாராவ் இரு வேடங்களில் நடித்த “ராமுடு பீமுடு” என்ற கருப்பு வெள்ளைத் திரைப்படத்தை தமிழில் தயாரிக்க முன்வந்து, தங்களது முதல் வண்ணத்திரைக் காவியமாக தந்ததுதான் “எங்க வீட்டுப் பிள்ளை”. “நாடோடி மன்னன்” திரைப்படத்திற்குப் பின் எம் ஜி ஆர் இரட்டை வேடமேற்று நடித்திருந்த இத்திரைப்படம், 1965 பொங்கல் நாளன்று வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடியது.
இந்த வரிசையில் அடுத்து வருவது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, பெங்காளி, என இந்திய மொழிகளைக் கடந்து சிங்களத்திலும் தங்களது தயாரிப்புப் பணியை திறம்பட நடத்தி, தமிழ் திரையுலகின் அடையாளமாகிப் போன “ஏ வி எம் புரொடக்ஷன்ஸ்”. இந்நிறுவனத்தின் முதல் வண்ணத் திரைப்படம் “அன்பே வா”. ஏ வி எம் நிறுவனத்திற்காக எம் ஜி ஆர் நடித்துக் கொடுத்த ஒரே திரைப்படம். இயக்குநர் ஏ சி திருலோகசந்தர் இயக்கத்தில் எம் ஜி ஆர் நடித்த ஒரே திரைப்படம். எம் ஜி ஆரின் வழக்கமான பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நடித்திருந்த ஒரே திரைப்படம் என்ற பல சிறப்புகளுக்குரிய இத்திரைப்படமும் 1966ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்து வெள்ளி விழாவினைக் கொண்டாடியது.
“கூண்டுக்கிளி”, “குலேபகாவலி”, “பாசம்”, “பெரிய இடத்துப் பெண்”, “பணக்காரக் குடும்பம்”, “பணம் படைத்தவன்” என தொடர்ந்து எம் ஜி ஆரை வைத்து கருப்பு வெள்ளைத் திரைப்படங்களாக தந்து கொண்டிருந்த இயக்குநர் டி ஆர் ராமண்ணாவின் “ஆர் ஆர் பிக்சர்ஸ்” நிறுவனத்தின் முதல் வண்ணத் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “பறக்கும் பாவை”. சர்க்கஸ் பின்னணியில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் நாயகனும் எம் ஜி ஆரே. 1966ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம், எம் ஜி ஆரின் முந்தைய வண்ணத் திரைப்படங்களின் வெற்றியைப் பெறத் தவறியது குறிப்பிடத்தக்கது.
இந்த வரிசையில் அடுத்து வருவது, இந்தியத் திரையுலகின் தலைசிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான “ஜெமினி ஸ்டூடியோஸ்”. “சந்திரலேகா”, “அபூர்வ சகோதரர்கள்”, “ஒளவையார்” போன்ற மகத்தான கலைப் படைப்புகளைத் தந்த இந்நிறுவனத்தின் முதல் வண்ணத்திரைக் காவியம் “ஒளி விளக்கு”. “பூல் அவுர் பத்தர்” என்ற ஹிந்திப் படத்தின் தமிழாக்கமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் நாயகனும் எம் ஜி ஆரே. எம் ஜி ஆரின் 100வது திரைப்படமாக வெளிவந்த இத்திரைப்படம், தமிழகத்தில் பல திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்து ஓடியதோடு, கொழும்பில் 150 நாள்களையும் கடந்து ஓடி, ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.
“எம் ஜி ஆர் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற எம் ஜி ஆரின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக பொருப்பாளராக இருந்து வந்த திரு ஆர் எம் வீரப்பன் அவர்களின் சொந்த தயாரிப்பு நிறுவனம்தான் “சத்யா மூவீஸ்”. 1963ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “தெய்வத்தாய்” திரைப்படத்தினைத் தொடர்ந்து “நான் ஆணையிட்டால்”, “காவல் காரன்”, “கண்ணன் என் காதலன்” என தொடர்ந்து எம் ஜி ஆரை வைத்து கருப்பு வெள்ளைத் திரைப்படங்களாக தந்து கொண்டிருந்த இந்நிறுவனத்தின் முதல் வண்ணத் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “ரிக்ஷாக்காரன்”. எம் ஜி ஆர் கதாநாயகனாக நடித்து, 1971ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியதோடு, எம் ஜி ஆருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்றுத் தந்தது.
இந்த வரிசையில் நாம் இறுதியாக பார்க்க இருப்பது, எம் ஜி ஆரை நாயகனாக வைத்து 16 திரைப்படங்கள் வரை தயாரித்த “தேவர் பிலிம்ஸ்”. 1956ல் தங்களது முதல் படைப்பான “தாய்க்குப் பின் தாரம்” தொடங்கி 1968ல் வெளிவந்த “காதல் வாகனம்” வரை இவர்களது தயாரிப்பில் எம் ஜி ஆர் நடித்திருந்த 15 கருப்பு வெள்ளைத் திரைப்படங்களுக்குப் பின் “தேவர் பிலிம்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த முதல் வண்ணத் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “நல்ல நேரம்”. “ஹாத்தி மேரா சாத்தி” என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழாக்கமான இத்திரைப்படத்தின் நாயகனும் எம் ஜி ஆரே. 1972ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படமும் பல திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்து ஓடி, ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.
இவ்வாறு பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் முதல் வண்ணத் திரைக் காவியங்களின் நாயகனாக திரையை அலங்கரித்திருந்த எம் ஜி ஆர், கலையுலகில் இன்றளவும் அந்த வண்ணம் சற்றும் குறையாமல், தனது படைப்புகளின் மறு வெளியீட்டின் மூலம் அதை நிரூபித்துக் கொண்டே இருக்கின்றார் என்பதே உண்மை.