வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தென்னிந்திய திரையுலகின் ஜாம்பவான் இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுவர்தான் 'இயக்குநர் சிகரம்' என்ற பட்டத்துக்குரிய இயக்குநர் கே.பாலசந்தர். அழுத்தமான கதைகளோடு, மாறுபட்ட கோணங்களில் கதாபாத்திரங்களை வடிவமைத்து, யாரும் சொல்லாத, யோசிக்காத விதத்தில் கதையை நகர்த்தி, அவற்றை வெற்றிப் படைப்புகளாக்குவது என்பது இவருக்கு கைவந்த கலை. கதையே இவரது முதல் நாயகன் என்பதால், பெரிய நட்சத்திரங்களை நாடி இவர் என்றுமே பயணித்ததில்லை கலையுலகில். இன்று பெரிய நட்சத்திரங்களாக அறியப்படும் பலர், இவரால் அன்று புதுமுகங்களாக அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. உயிரற்ற பொம்மையைக் கூட தனது கதையில் ஒரு கதாபாத்திரமாக்கி, அதை மக்களிடம் கொண்டு சேர்த்து, வெற்றிப் படைப்பாக்கும் வல்லமை பெற்ற இயக்குநர் இவர்.
நாகேஷ் என்ற நகைச்சுவை நடிகனுக்குள் மறைந்திருந்த மகத்தான நாயகனை அடையாளம் கண்ட ஆச்சர்ய மிகு இயக்குநரான இவர். நாகேஷை நாயகனாக்கி பல காவிய படைப்புகளை தந்திருக்கின்றார். “நீர்க்குமிழி”, “சர்வர் சுந்தரம்”, “மேஜர் சந்திரகாந்த்”, “பாமா விஜயம்”, “அனுபவி ராஜா அனுபவி”, “எதிர் நீச்சல்”, “பூவா தலையா”, “பத்தாம் பசலி”, “நவகிரஹம்” ஆகிய இந்தப் படங்கள் எல்லாம் நடிகர் நாகேஷை வேறொரு கோணத்தில் காட்டி, அவருக்கு பெயர் வாங்கித் தந்த இயக்குநர் கே பாலசந்தரின் திரைப்படங்கள். நெருங்கிய நட்பு கொண்ட இயக்குநர் கே பாலசந்தரும், நடிகர் நாகேஷூம் இணைந்து தந்த படைப்புகள் எல்லாம் தமிழ் திரையுலகின் தனிப்பெரும் முத்துக்கள்.
1972ம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தரின் கதை வசனம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், நடிகர் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ, ஜெயந்தி, எஸ் வரலக்ஷ்மி, மனோரமா நடிப்பில் வெளிவந்த “வெள்ளி விழா” திரைப்படத்தில் நடிகர் நாகேஷூம் ஒரு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த வேளையில், திடீரென ஒரு நாள் நடிகர் நாகேஷ் வேறொரு படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் “வெள்ளி விழா” படப்பிடிப்பிற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமலிருந்தது. அப்போது நாகேஷை அழைத்து வர, தனது புரொடக்ஷன் மேனேஜரை அவரது வீட்டிற்கு கே பாலசந்தர் அனுப்பி வைக்க, அவரது வீட்டில் வேறொரு படத்தின் புரொடக்ஷன் மேனேஜரும் நாகேஷிற்காக காத்திருந்தார்.
இந்நிலையில், தான் எந்த படப்பிடிப்பிற்கு செல்ல வேண்டும் என்பதை நீங்களே கூறுங்கள் என கே பாலசந்தர் அனுப்பிய புரொடக்ஷன் மேனேஜரிடம் நாகேஷ் கேட்க, விபரமறிந்த இயக்குநர் கே பாலசந்தர் சற்றும் யோசிக்காமல் நாகேஷ் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் நடிகர் தேங்காய் சீனிவாசனை நடிக்க வைத்து படமாக்கி வெளியிட்டார் “வெள்ளி விழா” திரைப்படத்தை. இதற்குப் பிறகு வந்த இயக்குநர் கே பாலசந்தரின் “அரங்கேற்றம்”, “சொல்லத்தான் நினைக்கிறேன்”, “அவள் ஒரு தொடர்கதை”, “நான் அவனில்லை” ஆகிய படங்களில் நடிகர் நாகேஷ் நடிக்கவில்லை என்பது குறிப்பிடும்படியான ஒன்று.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் கே பாலசந்தரே அழைத்து, நடிகர் நாகேஷை நடிக்க வைத்த திரைப்படம்தான் “அபூர்வ ராகங்கள்”. இப்படிப்பட்ட அபூர்வ திரைக்கலைஞர்களுக்குப் பின் நடந்த சில அசாதாரண நிகழ்வுகள் கூட, நம்மை அதிசயிக்க வைக்கும் சுகமான நினைவுகளே.