Advertisement

சிறப்புச்செய்திகள்

எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கலையுலகை காத்து நின்ற “பூந்தோட்டக் காவல்காரன்” விஜயகாந்த்

28 டிச, 2023 - 10:08 IST
எழுத்தின் அளவு:
Vijayakanth-was-the-“garden-guard”-who-guarded-the-art-world

நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது மறைவால் ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் தேமுதிக., தொண்டர்கள் கண்ணீரில் மிதக்கின்றனர். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் ஒருவனாய் திகழ்ந்தார். சினிமாவிலும் சரி... அரசியலிலும் சரி... தனக்கு மனதில் பட்டதை நேர்மையாக, தைரியமாக பேசியவர் விஜயகாந்த். சினிமா, அரசியலில் அவர் செய்த சில முக்கிய நிகழ்வுகள், சாதனைகளை இங்கு நினைவு கூறுகிறோம்.

வளரும் கலைஞர்களுக்கு உதவி
ஆரம்பத்தில் இவரது கருப்பு நிறம் கலையுலகில் சிலரால் விமர்சிக்கப்பட்டு பின் கரடு முரடான பாதைகள் பல கடந்து, கடின உழைப்பிற்குப் பின் கலையுலகில் நிலையான இடம்பிடித்து, மலையளவு உச்சம் தொட்ட மதுரை மண்ணின் பெருமை மிகு அடையாளமாக பார்க்கப்படும் விஜயகாந்த், தான் அனுபவித்த வலியும், சிரமங்களும் வேறு எந்த ஒரு வளரும் திரைக்கலைஞருக்கும் நேராத வண்ணம் உதவிக்கரம் நீட்டி, பல திரைப்படக் கல்லூரி மாணவர்களை இயக்குநராக்கி அழகு பார்த்தார்.

கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு
“ஊமை விழிகள்”, “உழவன் மகன்”, “பூந்தோட்டக் காவல்காரன்”, “செந்தூரப்பூவே”, “புலண்விசாரணை”, “கேப்டன் பிரபாகரன்”, “பரதன்” என ஏராளமான திரைப்படங்களின் மூலம், ஆபாவாணன், ஆர்.அரவிந்த்ராஜ், செந்தில்நாதன், பி ஆர் தேவராஜ், ஆர்கே செல்வமணி, எஸ்டி சபா போன்ற பல திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு தந்து, அவர்கள் பின்னாளில் பிரபல இயக்குநராக வர பேருதவி புரிந்தவர் “கேப்டன்” விஜயகாந்த்.

கலையுலகை காத்து நின்ற “பூந்தோட்டக் காவல்காரன்”
4.5 கோடி ரூபாய் கடனில் இருந்த நடிகர் சங்கத்தை, இவர் தலைமையேற்ற பின் தனது திறமையான மற்றும் சாதுர்யமான அணுகுமுறைகளால், 2002ம் ஆண்டு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் 'நட்சத்திர இரவு' என்ற நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து, அதை வெற்றிகரமாக நடத்தி முடித்து, அதிலிருந்து பெறப்பட்ட தொகையைக் கொண்டு கடனை அடைத்து நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தார்.

விஜய்யை ஏற்றிவிட்ட ஏணிப்படி
நடிகர் விஜய்யின் முதல் படமான “நாளைய தீர்ப்பு” தோல்வியடைய, விஜயகாந்தோடு விஜய் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அது அவரது திரை வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் என்று எண்ணிய இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகருக்காக, தானே மனமுவந்து நடித்துக் கொடுத்த திரைப்படம்தான் “செந்தூரப்பாண்டி”. மிகப் பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்திற்குப் பின் நடிகர் விஜய்யின் திரைப்பயணமும் பிரகாசமானது.

ஒரே ஆண்டில் 18 படங்கள்
1979ஆம் ஆண்டு தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த், 1984ஆம் ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தார். மேலும் தமிழில் வெளியான முதல் 3டி திரைப்படமான “அன்னை பூமி” திரைப்படத்தின் நாயகனாகவும் நடித்து பிரமிப்பூட்டினார்.

பிறமொழியில் நடிக்காத கேப்டன்
தனது நீண்ட நெடிய இந்த கலைப்பயணத்தில் வேறு எந்த மொழி திரைப்படங்களிலும் நடிக்காமல், தமிழில் மட்டுமே 150க்கும் அதிகமான படங்களில் நடித்து, தமிழ் நடிகராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் “கேப்டன்” விஜயகாந்த்.

அரசியலிலும் சாதனை
சினிமா உலகிலிருந்து அரசியல் உலகிற்கு வந்து சாதித்து விடலாம் என எண்ணி எத்தனையோ நடிகர்கள் முயற்சித்து முடியாமல் முடங்கிப்போன வேளையில், முடியும் என முயற்சித்து, முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்குப் பின் ஒரு கட்சியின் தலைவராக, சட்டசபை எதிர்கட்சித் தலைவராக அரசியல் களம் கண்ட ஆச்சர்ய திரைக்கலைஞர்தான் “கேப்டன்” விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரும் தலைவர்கள் இருந்தபோது தைரியமாக அரசியல் கட்சி தொடங்கி அதில் தன்னால் நிலைக்க முடியும் என நிரூபித்தவர் விஜயகாந்த்.

ரசிகர் மன்றத்தில் தமிழ்நாடு
தென்னிந்திய, அகில இந்திய என இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களின் பெயர்களை, 1982ஆம் ஆண்டு “தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்” என பெயர் மாற்றம் செய்து, தமிழ்நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்த்தார்.

நலிந்த கலைஞர்களுக்கு உதவி
நடிகர் சங்கத் தலைவராக இவர் இருந்தபோதுதான், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவும் பொருட்டு, ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்து, அதற்காக ஒரு பெரிய தொகையையும் டெபாஸிட் செய்து வைத்தார்.

வறுமை ஒழிப்பு தினம்
ஈழத் தமிழர்களின் அல்லல்களை அறிந்தவரும், அவர்களின் உணர்வுகளை உணர்ந்தவருமான விஜயகாந்த், தனது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை தவிர்த்து வந்ததோடு, அந்த நாளை “வறுமை ஒழிப்பு தினம்” என அறிவித்து, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வழிவகையும் செய்து வறியோரின் மனங்களிலும், எளியோரின் மனங்களிலும் ஏழைப் பங்காளனாய் இடம் பிடித்தார்.
வள்ளல் மனம் படைத்த 'வல்லரசு'
கனவில் மட்டுமே கைகூடி வரும் கலையுலக வாய்ப்புகளை, கண்ணிமைக்கும் நேரத்தில் கைவசமாக்கித் தந்து, கலையுலகின் உச்சம் தொட வைத்து, உச்சி முகரும் வள்ளல் மனம் படைத்த 'வல்லரசு' கேப்டன் விஜயகாந்த் அவர்களால் அறிமுகம் ஆகி, அறுவடை செய்த திரைக்கலைஞர்கள் ஏராளம்! ஏராளம்!!

'ஒண்ணா ரெண்டா தாமரைப்பூ நம் வீட்டினில் பூத்தது ஏராளம்' எனும் இவரது பாடல் போலவே, தமிழ் திரையுலகம் என்ற கேப்டனின் கலைக்குடும்பத்தில் இருந்து இவரால் பூத்து, மலர்ந்து, ஒளிவீசிக் கொண்டிருக்கும் திரைக்கலைஞர்கள் ஒன்றல்ல ரெண்டல்ல ஏராளமே. விஜய், சரத்குமார், மன்சூரலிகான், லிவிங்ஸ்டன் என நடிகர்களின் பட்டியல் ஒரு புறம் நீள, ஆர் அரவிந்தராஜ், ஆபாவாணன், ஆர் கே செல்வமணி, எஸ் டி சபா, பி ஆர் தேவராஜ் என திரைப்படக் கல்லூரி மாணவர்களை இயக்குநராக்கி அழகு பார்த்ததும், புதுப்புது தயாரிப்பாளர்கள் உருவானதும் மறுபுறம்.

எஸ்.ஏ.சி உடன் அதிகம்
தனது திரையுலகப் பயணத்தில் 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் கேப்டன் விஜயகாந்த், தன்னை முதன் முதலாக அதிரடி நாயகனாக்கி அழகு பார்த்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் மட்டும் ஏறக்குறைய 18 திரைப்படங்கள் வரை நடித்து, நன்றி விசுவாசத்தின் நல்லதோர் அடையாளமாய் வாழ்ந்துகாட்டி, வளரும் கலைஞர்களுக்கு ஓர் கலங்கரை விளக்கமாய் வாழ்ந்து மறைந்தவர்தான் நமது கேப்டன் விஜயகாந்த்.

பெயர் சொன்ன படங்கள்
“சட்டம் ஒரு இருட்டறை”, “வைதேகி காத்திருந்தாள்”, “அம்மன் கோயில் கிழக்காலே”, “ஊமை விழிகள்”, “உழவன் மகன்”, “பூந்தோட்டக் காவல்காரன்”, “புலன் விசாரணை”, “சத்ரியன்”, “கேப்டன் பிரபாகரன்”, “சின்னக் கவுண்டர்”, “வானத்தைப்போல”, “ரமணா” போன்ற சில குறிப்பிடும்படியான திரைப்படங்கள் கேப்டன் விஜயகாந்தின் நீண்ட நெடிய திரைப்பயணத்தில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிய திரைப்படங்களாக அமைந்தன.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகருக்குப் பின் இயக்குநர் ராம நாராயணன் இயக்கத்தில் 10 படங்கள் வரையிலும், இயக்குநர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 7 திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார் கேப்டன் விஜயகாந்த்.

அனல் பறந்த வசனங்கள்
இயக்குநர் லியாகத் அலிகான் வசனத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளிவந்த “புலன் விசாரணை”, “கேப்டன் பிரபாகரன்”, “ஏழைஜாதி” போன்ற திரைப்படங்களில் கேப்டன் விஜயகாந்த் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றென்றும் கேப்டன் விஜயகாந்தை நினைவுபடுத்துபவையாகவே இருக்கின்றன.
விஜயகாந்த்திற்கு பிடித்த வசனம்
ஒற்றுமையில் இந்தியனா இரு...
உணர்வில் தமிழனா இரு...
மொத்தத்தில் மனிதனா இரு...
படம் : ஏழை ஜாதி

இப்ராஹிம் ராவுத்தர் உடன் வெற்றிக் கூட்டணி
விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர். அவரின் சினிமா பயணத்தில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவர் ‛ராவுத்தர் பிலிம்ஸ், தமிழ் அன்னை சினி கிரியேசன்ஸ் மற்றும் ஐ.வி. சினி புரொடெக்சன்ஸ்' என்ற பேனர்களில் படங்கள் தயாரித்தார். ஏற்குறைய இவர்கள் கூட்டணியில் உழவன் மகன், பரதன், பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட 15 படங்கள் வெளிவந்துள்ளன. பெரும்பாலும் வெற்றி படங்களே.

100ல் வெற்றி
இவருடன் பயணப்பட்ட சக நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு அவர்களின் 100வது படம் தோல்வியை தந்தது. மாறாக விஜயகாந்த்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் சூப்பர்-டூப்பர் ஹிட்டாக அமைந்தது.

இளையராஜா உடன் வெற்றிக் கூட்டணி
விஜயகாந்தின் படங்களில் சுமாராக 50 படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். மற்ற ஹீரோக்களை போல் இல்லாமல் இவருக்கான பாடல்கள் தனி ரகமாக இருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும் என்பதே உண்மை. சொல்லப்போனால் விஜயகாந்த்திற்கு இளையராஜா தந்த சோகப்பாடல்கள் தான் இன்று அவரின் மறைவுக்கு பின்னும் ஒலிக்கிறது. அந்த பாடலின் வரிகளும் விஜயகாந்த்திற்கு பொருத்தமாக அமைந்து போனது.

கமல் உடன் ‛மனக்கணக்கு' திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்தார். இதில் கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
விஜயகாந்த் உடன் அதிக படங்களில் நடித்த நடிகைகளில் ராதிகா தான் முன்னணியில் உள்ளார். அவருக்கு பின் நளினி அதிக படங்களில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் நிலை அறிந்து ஊதியத்தை குறைத்து கொண்ட சம்பவமும் உண்டு, ஊதியம் வாங்காமல் நடித்த சம்பவங்களும் நடந்துள்ளது.

தமிழ் திரைத்துறையில் எம்ஜிஆருக்கு பிறகு மினிமம் கியாரண்டி நாயகனாக தயாரிப்பாளர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ, தியேட்டர் உரிமையாளர்களுக்கோ நஷ்டம் வராத அளவு படங்களுக்கு வசூல் உத்ரவாதம் தந்த ஒரே கலைஞர் விஜயகாந்த் தான்.

விஜயகாந்த்தின் படங்களில் பெரும்பாலும் சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்கள், வசனங்கள் அதிகம் இடம் பெற்று இருக்கும். அதேப்போல் புள்ளிவிபர பட்டியலை இவரை போன்று வேறு யாரும் பட்டியலிட முடியாது.

போலீஸ் கதாபாத்திரங்கள் என்றால் சில நடிகர்கள் நம் கண் முன் வருவார்கள். அவற்றில் முக்கியமானவர் விஜயகாந்த். எத்தனையோ நடிகர்கள் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தாலும் இவர் நடிக்கும் வேடங்கள் போலீஸ் தான் தனி கம்பீரத்தை பெற்று தந்தன என்றால் மிகையல்ல. ஊமை விழிகள், புலன் விசாரணை, மாநகர காவல், வல்லரசு, வாஞ்சிநாதன், நரசிம்மா என சொல்லிக் கொண்டே போகலாம்.

விஜயகாந்த் போட்டோ ஆல்பம் காண : https://www.dinamalar.com/news_detail.asp?id=3514530

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மனிதம் பேசிய மகத்தான தலைவன் : ‛கேப்டன்' விஜயகாந்த் வாழ்க்கை பயணம்மனிதம் பேசிய மகத்தான தலைவன் : ... அரசியலில் நம்பிக்கையை உருவாக்கியவர் விஜயகாந்த் : கமல் இரங்கல் அரசியலில் நம்பிக்கையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)