மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சுனைனா. மாடலிங் துறையில் இருந்த இவர் 'குமாரி வெசஸ் குமாரி' என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிக்க வந்தார். 'காதலில் விழுந்தேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்பறவை, காளி, எனை நோக்கி பாயும் தோட்டா, சில்லுகருப்பட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக விஷாலுடன் 'லத்தி' படத்தில் நடித்தார்.
தற்போது அவர் முதன் முறையாக சோலோ ஹீரோயினாக 'ரெஜினா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். தனக்கு ஏற்பட்ட ஒரு கொடுமைக்காக ஒரு சாதாரண பெண் அசாதாரண பெண்ணாக மாறி எப்படி பழி தீர்க்கிறார் என்பது மாதிரியான கதை. படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சுனைனா பேசியதாவது:
சின்ன வயதில் இருந்தே சினிமாதான் எனது கனவாக இருந்தது. அதற்கு காரணமே தென்னிந்திய படங்கள்தான். அவற்றைத்தான் நான் சின்ன வயதில் இருந்தே விரும்பி பார்த்து வந்தேன். குறிப்பாக ரஜினி, சூர்யா படங்களை பார்த்து பிரமித்து வளர்ந்தேன். வெங்கட் பிரபு இயக்கிய 'சரோஜா' படத்தை பல முறை பார்த்திருக்கிறேன். எனக்கு ஏதாவது கவலை வந்தால் அந்த படத்தில் பிரம்மானந்தம் நடித்த காட்சிகளை பார்ப்பேன். மக்கள் இப்போது நல்ல கதையம்சமுள்ள படங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.