மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மேடை நாடகங்கள், மிமிக்கிரி, காமெடி, குணச்சித்ரம் என பல பரிமாணங்களில் மக்களை சிரிக்க வைத்த காமெடி நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரின் மறைவு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயில்சாமி கடந்து வந்த பாதையை பார்ப்போம்...
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் 1965, அக்., 2ல் பிறந்தவர் மயில்சாமி. மேடை நாடகங்களில் தோன்றி, மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டாக பயணித்து பலக்கட்ட போராட்டத்திற்கு பின் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் கூட்டத்தில் ஒருவராக பல படங்களில் நடித்தார். தாவணிக்கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் இவர் இதுபோன்று நடித்தார். சற்று பிரதான வேடமாக நடித்தது கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் தான். அந்த படத்தில் மெக்கானிக்காக வரும் கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்தார்.
தொடர்ந்து வெற்றி விழா, பணக்காரன், செந்தமிழ் பாட்டு, உழைப்பாளி, வால்டர் வெற்றிவேல் என நூற்றுக்கணக்கான படங்களில் சிறு வேடங்களில் நடித்து தன்னை மெல்ல வளர்த்துக் கொண்டார். 90களில் இவருக்கான பட வாய்ப்புகள் அதிகரித்தன. அன்றைய டாப் நடிகர்களின் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் இவர் நடித்தார். குறிப்பாக 2000க்கு பின் மறைந்த நடிகர் விவேக் உடன் ஏகப்பட்ட படங்களில் இணைந்து காமெடியில் அசத்தினார்.
ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இறக்கும் தருவாயிற்கு முன்பு கூட ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி இன்றைய இளம் நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களில் மயில்சாமி நடித்துள்ளார். காமெடி மட்டுமல்லாது தன்னால் குணச்சித்ர வேடங்களிலும் நடித்து அசத்த முடியும் என நிரூபித்தார். சமீபகாலமாக காமெடி கலந்த குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வந்தார்.
மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்
நடிகர் மயில்சாமி சிறந்த மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்டும் கூட. ஏராளமான மேடைகளில் தனது மிமிக்கிரிகளால் அசத்தி உள்ளார். உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலு மேடைகளில் காமெடி மற்றும் மிமிக்கிரி மூலம் மக்களை ரசிக்க வைத்தார்.
கொரோனா காலத்தில் நிஜ ஹீரோ
உலகமே கொரோனா காலத்தில் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சூழலில் கோடிகளில் சம்பளம் பெறும் பல முன்னணி நடிகர்கள் செய்யாத காரியத்தை நடிகர் மயில்சாமி செய்தார். அந்தசமயம் வீடு வீடாக சென்று மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை மேற்கொண்டார். இதேப்போன்று சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்ட சமயத்திலும் மக்களுக்கு களத்தில் இறங்கி உதவி செய்தார்.
எம்ஜிஆரின் தீவிர பக்தர்
மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்று சொல்லுவதை விட அவரின் பக்தராக இருந்தார் மயில்சாமி. அதன் தாக்கத்தால் இவரும் பிறருக்கு உதவும் குணம் கொண்டவராக இருந்தார். மேலும் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவர். இறைவன் சிவன் மீது அதிக பற்று கொண்டவர். அடிக்கடி திருவண்ணமாலைக்கு சென்று வருவதை வழக்கமா கொண்டு இருந்தார்.
விவேக் மீது அதிக பாசம்
மறைந்த நடிகர் மீது அதிக பாசம் கொண்டவர். இருவரும் நண்பர்கள் கூட. இருவரும் இணைந்து 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியில் அசத்தி உள்ளனர். அவர் மறைந்த சமயம் அதிகம் கண்கலங்கி போனவர் மயில்சாமி தான். அவர் இறந்தது முதல் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது வரை கடைசி வரை உடன் இருந்து நண்பனை வழி அனுப்பி வைத்தார்.
டிவியிலும் அசத்தல்
வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையில் மர்மதேசம் என்ற சீரியலில் நடித்துள்ளார். அசத்த போவது யாரு உள்ளிட்ட பல்வேறு காமெடி டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி உள்ளார்.
மகன்களையும் ஹீரோ ஆக்கியவர்
மயில்சாமிக்கு அன்பு மயில்சாமி(அருமைநாயகம்), யுவன் மயில்சாமி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரையும் சினிமாவில் ஹீரோவாக்கி அழகு பார்த்தவர். இவர்கள் இருவரும் முன்னணி நடிகர்கள் இல்லை என்றாலும் சினிமாவில் தங்களுக்கான இடத்தை தேடி பயணித்து வருகின்றனர்.
தேர்தல் களம்
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த நடிகர் மயில்சாமி கடந்த 2021 சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டடார். ஆனால் இந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.
கடைசிப்படம்
நடிகர் மயில்சாமி கடைசியாக கிளாஸ்மேட் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குடிகாரர்கள் தொடர்பான இந்த கதை சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தி சொல்லும் விதமாக உருவாகி உள்ளது. இறப்பதற்கு முன் இந்த படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டே சென்றுள்ளார் மயில்சாமி. விரைவில் இந்தப்படம் ரிலீஸாக உள்ளது.
மக்களை சிரிக்க வைத்து, ஏழைகளுக்கு தன்னால் ஆன உதவிகளையும் செய்து சென்ற இந்த வெள்ளைமனம் படைத்த வெள்ளித்திரை நகைச்சுவை நாயகன் மயில்சாமி மறைந்தது திரை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.