எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' | 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தை திருட வரும் நடிகை | பிளாஷ்பேக் : மருதகாசியை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய திருச்சி லோகநாதன் குரல் | பிளாஷ்பேக் : சிறை வாழ்க்கையையும் காமெடியாக்கிய என்.எஸ்.கிருஷ்ணன் |
இந்திய சினிமாவில் 60 வயதைக் கடந்த சீனியர் ஹீரோக்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்னும் 30 பிளஸ் கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். படங்களில் அவர்களுக்குக் கல்யாணம் ஆகாமல் இருப்பது, ஜோடியாக நடிக்கும் இளம் ஹீரோயின்களைக் காதலிப்பது ஆகியற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த 2022ல் இந்திய சினிமா பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. தியேட்டர்களுக்கு வரும் மக்களின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. 'பொன்னியின் செல்வன்' மாதிரியான படங்களுக்குத்தான் மிக அபூர்வமாக வயதானவர்களும் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். அதே சமயம் மற்ற சீனியர் ஹீரோக்களின் படங்களைப் பார்க்க இளம் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை.
கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் ஓடியதே என சிலர் கேட்கலாம். தமிழ் சினிமாவில் தனி திறமைசாலியாக அடையாளம் காட்டப்பட்ட கமல்ஹாசன் தனது தற்போதைய நட்சத்திர அந்தஸ்தை உணர்ந்துதான் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை கூட்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார். இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னை அவரிடம் ஒப்படைத்துவிட்டார். அதுதான் அந்தப் படத்தின் வெற்றிக்கான முதன்மைக் காரணம். இதை கமல்ஹாசன் கூட மறுக்க மாட்டார். இதற்கு முன்பு கமல்ஹாசன் நடிக்கும் படம் என்றால் அதில் அவரின் தலையீடு அதிகம் இருக்கும் என்று திரையுலகத்தில் சொன்னவர்கள்தான் அதிகம். இன்றைய ரசிகர்களின் மனநிலை அறிந்தே கமல்ஹாசன் தன்னை மாற்றிக் கொண்டு அவருடைய 60 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் பெரும் வசூலை 'விக்ரம்' படம் மூலம் பெற்றார்.
அவரது வழியில்தான் தற்போது ரஜினிகாந்தும் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். 'கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட்' ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமாருடன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரஜினி இப்படி மாறியதற்கு கடந்த தீபாவளிக்கு வெளிவந்த 'அண்ணாத்த' படத்தின் தோல்வியும் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்கு முன்பு சில தோல்விப் படங்களில் அவர் நடித்த போது கூட பெரிய கிண்டல்கள் எழவில்லை. ஆனால், 'அண்ணாத்த' படத்தை வைத்து பல மீம்ஸ்கள் வெளிவரும் அளவிற்கு அந்தப் படத்தின் ரிசல்ட் இருந்தது.
70களின் பிற்பகுதியில் கதாநாயகர்களாக அறிமுகமாகி இன்றும் கதாநாயகர்ளாக நடித்து வருபவர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும். அவர்களுக்குப் பின் 80களில் கதாநாயகர்களாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சத்யராஜ், சரத்குமார், பிரபு ஆகியோர் சினிமாவில் நடந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அதற்கேற்றபடி தங்களை மாற்றிக் கொண்டார்கள். அதனால்தான் இப்போதும் பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து தங்களது நடிப்புப் பயணத்தை விடாமல் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களது கால கட்டங்களில் அறிமுகமான சில ஹீரோக்கள் தற்போது நடிப்பதிலிருந்து ஒதுங்கிவிட்டார்கள் அல்லது ஒதுக்கப்பட்டார்கள்.
இயக்குனராகவும் இருப்பதால் தனக்கான கதைகளை, கதாபாத்திரங்களை உருவாக்கி, அந்தப் படங்களையும் எப்படி புதுமையாகக் கொடுக்க முடியுமோ என யோசித்து 'ஒத்த செருப்பு, இரவின் நிழல்' என ஒரு பக்கம் இயக்குனராகவும், மற்றொரு பக்கம் வில்லன், நகைச்சுவை, குணச்சித்திரம் என எது வந்தாலும் பொருத்தமாக இருந்தால் ஏற்று நடித்து வருகிறார் பார்த்திபன். அவர் காலத்தில் இயக்கம் பிளஸ் நடிப்பு என வந்தவர்கள் இப்போது முகவரியைத் தொலைத்து நிற்கிறார்கள்.
90களின் துவக்கத்தில் அறிமுகமாகி 'ரோஜா' படம் மூலம் அந்தக் கால இளம் பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் அரவிந்த்சாமி. 90களிலேயே அவர் கதாநாயகனாக நடித்து வெற்றிப் படங்களாக அமைந்தவை என்று பார்த்தால் 'மறுபடியும், பாம்பே, இந்திரா' என சில படங்கள் மட்டும்தான். இடையில் பல வருடங்கள் சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்தவர் மீண்டும் 'கடல்' மூலம் வந்து 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து இப்போது மீண்டும் தனி கதாநாயகனாகவும், வில்லன், குணச்சித்திரம் எனவும் நடித்து வருகிறார்.
90கள், 2கே வருடங்களில் அறிமுகமாகி, பிரபலமாகிய சில ஹீரோக்கள் இப்போது வாய்ப்பு இல்லாமல் ஒதுங்கி இருக்கும் காலத்தில் 70, 80களில் பிரபலமாக இருந்தவர்கள் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு தங்களையும் மாற்றிக் கொண்டதால்தான் இந்த 2022லும் தங்கள் திரைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். இதை இன்றைய சில டாப் ஹீரோக்கள் முன்னுதாரணமாய் எடுத்துக் கொள்ள வேண்டும். தாங்கள் விரும்பிய துறைகளில் நீண்ட காலம் பயணிக்க விரும்பும் பலருக்கும் கூட இது ஒரு பாடம்தான்.