மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நூற்றுக்கு நூறு, எங்கிருந்தோ வந்தாள், வைரம், ரிக்ஷாக்காரன், தேடி வந்த லக்ஷ்மி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, பிஞ்சு மனம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களிலும், இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெய்குமாரி. வில்லி மற்றும் கவர்ச்சி வேடங்களில்தான் அதிகமாக நடித்துள்ளார். அந்தக் காலத்திலேயே நீச்சல் உடையில் நடித்தவர்.
70 வயதை கடந்து விட்ட அவர் தற்போது வேளச்சேரியில் தனது மகனுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கணவர் அப்துல்லா இறந்து விட்டார். தற்போது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
ஜெய்குமாரி தனது வறுமை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது: எனது சொந்த ஊர், பெங்களூர். ஆனால் வளர்ந்தது, வாழ்ந்தது எல்லாம் சென்னையில்தான். என் உடன்பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். அப்பா உடல்நலம் பாதிக்கப்பட்டதால், 6 வயது சிறுமியாக இருந்தபோதே நடிக்க வந்துவிட்டேன். என் முதல் படம், 'மக்கள் ராஜ்யாக்' என்ற கன்னட படம். எம்.ஜி.ஆர். நடித்த 'நாடோடி' தான் என் முதல் தமிழ் படம். அப்போது எனக்கு 14 வயது. அதன்பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்தாலும், நடிப்பதை விட, கவர்ச்சி நடனத்துக்கு அதிகமாக சம்பளம் கொடுத்ததால், நடனம் ஆடுவதில் ஆர்வம் காட்டினேன்.
நான் நடித்து சம்பாதித்து, 2 தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். என்னுடைய 25வது வயதில், நாகப்பட்டினத்தை சேர்ந்த அப்துல்லா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு சாஜிதா, பானு என்ற 2 மகள்களும், ரோஷன் என்ற ஒரு மகனும் பிறந்தார்கள். என் கணவர் சொந்த படம் எடுக்க ஆரம்பித்தார். 'முன்னொரு காலத்திலே' என்ற படத்தை தயாரித்தோம். படம் முடிவடைந்த நிலையில், என் கணவருக்கும், பைனான்சியருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த கவலையில், என் கணவர் மரணம் அடைந்து விட்டார்.
அதன்பிறகுதான் என் வாழ்க்கையில் சோதனை ஆரம்பம் ஆனது. கணவருக்கு சொந்தமான பெரிய வீட்டை, கடனுக்காக எடுத்துக் கொண்டார்கள். நான் 3 கார்கள் வைத்திருந்தேன். மூன்று கார்களையும் விற்று விட்டு வாடகை வீட்டில் குடியேறினேன். மூத்த மகளை படிக்க வைத்த அளவுக்கு, இரண்டாவது மகளையும், மகனையும் படிக்க வைக்க முடியவில்லை. என் தங்கைகள் எனக்கு உதவ முன் வரவில்லை. கஷ்டப்பட்டு இரண்டாவது மகள் பானுவுக்கு திருமணம் செய்து வைத்தேன். 2 மகள்களும் என்னை கவனிப்பதில்லை. எந்த உதவியும் செய்வதில்லை. நானும், என் மகனும் வேளச்சேரியில் 750 ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.
இவ்வாறு அந்த பேட்டியில் ஜெய்குமாரி கூறியிருக்கிறார்.
சினிமாவில் ஹீரோயினாக நடிக்க அனைத்து தகுதியும், அழகும் இருந்தும் ஏனோ அவரை கவர்ச்சி வேடங்களில் ஆட விட்டது உண்மையில் பெரிய வருத்தமே. 200 படங்களுக்கு மேல் நடித்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தது துரதிர்ஷ்டமே. பல ஆண்டுகளாக ஏழ்மையில் தவித்து வரும் நடிகைக்கு நடிகர் சங்கமோ, திரையுலகமோ யாரும் உதவவில்லை.