பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
இயக்குநர் ஏ எஸ் ஏ சாமி, 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமி இந்த இருவரும் “வேலைக்காரி” திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் இணைந்து பணியாற்றிய திரைப்படம்தான் “விஜயகுமாரி”. “ஜுபிடர் பிக்சர்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் அதன் முந்தைய தயாரிப்பான “ராஜகுமாரி” டைப் கதையைப் போன்ற மந்திர தந்திர மாயாஜாலங்கள் நிறைந்த கதையாக இருந்தது. படத்தின் நாயகியாக நடிகை டி ஆர் ராஜகுமாரி மற்றும் டி எஸ் பாலையா, செருகளத்தூர் சாமா, எம் என் நம்பியார், கே ஆர் ராம்சிங் என ஒரு நட்சத்திரக் குவியல் ஒருபுறம் என்றால், “வாழ்க்கை” பட வெற்றியைக் கண்டு அதன் நாயகியான வைஜெயந்திமாலாவின் நடனம் மறுபுறம்.
மேலும் லலிதா, பத்மினி, குமாரி கமலா போன்ற நாட்டியத் தாரகைகளின் கண்ணைக் கவரும் நடனங்களும் படத்தில் இடம் பெற்றிருந்தன. கே என் தண்டாயுதபாணி பிள்ளை முதன் முறையாக நடன இயக்குநராக பணியாற்றிய திரைப்படமாகவும் இது அமைந்தது. முதன் முறையாக சி ஆர் சுப்பராமன் மற்றும் சிதம்பரம் எஸ் ஜெயராமன் ஆகிய இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்து வெளிவந்த திரைப்படமாகவும் அமைந்திருந்தது இந்த “விஜயகுமாரி” திரைப்படம்.
இவ்வளவு சிறப்பம்சங்கள் படத்தில் இருந்தும் படத்தை வெளியிடுவதற்கு முன்பே கதை வசனம் எழுதி இயக்கியிருந்த இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு ஒரு சந்தேகம். படத்தில் வருகின்ற மந்திர தந்திர மாயாஜாலக் காட்சிகளை நீக்கிவிட்டு திரையிடலாம் என்ற தனது அபிப்ராயத்தை படத்தின் தயாரிப்பாளரான “ஜுபிடர் பிக்சர்ஸ்” சோமுவிடம் கூற, தயாரிப்பாளர் சோமு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதற்கு முன்னர் இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியும், நடிகர் கே ஆர் ராமசாமியும் இணைந்து பணியாற்றி வெற்றி வாகை சூடிய “வேலைக்காரி” திரைப்படம் ஒரு பகுத்தறிவு பிரச்சாரப் படம். அத்திரைப்படத்தின் மூலம் அவர்கள் இருவரும் புகழ் பெற்றிருந்தனர். ரசிகர்கள் மத்தியில் இவ்விருவரும் பகுத்தறிவு பாசறையில் தொடர்புடையவர்கள் என்ற எண்ணமும் மேலோங்கியிருந்தவண்ணம் காணப்பட்டனர்.
“வேலைக்காரி” திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த அவ்வேளையில், மந்திர, தந்திர, மாயாஜாலங்களுடன் “விஜயகுமாரி” வெளிவந்தால் அது ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்று வெற்றி அடையுமா? என்ற சந்தேகமும் வலுப்பெற்றது இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு. இயக்குநர் ஏ எஸ் ஏ சாமியின் சந்தேகம் நூறு சதவீதம் உண்மை என சொல்லும் அளவிற்கு “விஜயகுமாரி” திரைப்படம் வெளிவந்து, வீழ்ச்சியடைந்து பெரும் தோல்வியைத் தழுவியது.