ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக பரபரப்பாகப் பிரச்சாரம் செய்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அப்போது அவருக்கு சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது.
அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை பகைத்துக் கொள்ள விரும்பாத திரையுலகினர் வடிவேலுவை தங்களது படங்களில் நடிக்க வைப்பதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டனர். அதனால், இனி நகைச்சுவை வேடங்களில் நடிக்காமல் நாயகனாக நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் வடிவேலு.
2014ம் ஆண்டில் தெனாலிராமன், 2015ம் ஆண்டில் எலி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார். ஆனால், இரண்டு படங்களுமே படுதோல்வியடைந்தது. அதன்பின் 2016ல் நடைபெற்ற தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியைப் பிடித்தது. இருந்தாலும் நாயகனாக நடிப்பது வெற்றி பெறாமல் போகவே மீண்டும் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
கத்தி சண்டை, சிவலிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார். இருந்தாலும் தான் முதன் முதலாக நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படம் தந்த மாபெரும் வெற்றி காரணமாக அப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் 2017 ல் நடிக்க ஆரம்பித்தார். படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே வடிவேலுவுக்கும் அப்படத்தின் இயக்குனர் சிம்புதேவன், தயாரிப்பாளர் ஷங்கர் ஆகியோருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
படத்திற்காக பல கோடி செலவு செய்து அரங்கம் அமைத்துவிட்டோம், வடிவேலு நடிக்க வர மறுக்கிறார் என அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார் ஷங்கர். அதைப் பற்றி தயாரிப்பாளர் சங்கம் விசாரித்தது. ஷங்கர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக வடிவேலுவை தொடர்ந்து படங்களில் நடிக்க மறைமுகமாக ரெட் விதித்தாக சொல்லப்பட்டது. அவரும் வேறு எந்தப் படத்திலும் நடிக்க முயற்சி செய்யவில்லை. தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட ஆரம்பித்து, சில நல்ல விஷயங்களை தனது மகன், மகள்களுக்காக செய்து முடித்தார்.
2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக வடிவேலு பிரச்சாரம் செய்ததால்தான் அவரை ஓரம் கட்டினார்கள் என்ற ஒரு தகவல் மக்களிடம் பரவியுள்ளது. ஆனால், அதில் பல்வேறு திரையுலக அரசியலும் கலந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாத விஷயம். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ளதால் வடிவேலு மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.
கடந்த பத்து வருடங்களாக சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் மீம்ஸ் கிரியேட்டர்களின் பல மீம்ஸ்களில் வடிவேலுதான் கதாநாயகனாக இருந்து வருகிறார். ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பின்படி வடிவேலு தன்னுடைய புதிய படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என பலரும் எதிர்பார்க்கிறார்கள்.