26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

அன்றைய நாளில் சினிமா உலகின் பிரச்னைகளை தீர்ப்பதிலும், தயாரிப்புத் தொழிலின் சிரமங்களைத் தவிர்ப்பதிலும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு செயல்பட்டு வந்தவர்தான் இயக்குநர் கே சுப்ரமணியம். சட்டம் பயின்ற வழக்குரைஞரான இவர், மகத்தான லட்சியங்களுடனும், கனவுகளுடனும் சில படத் தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சியோடு உருவாக்கிய ஸ்டூடியோதான் “மோஷன் பிக்சர் புரொடியூசர் கம்பைன்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம்.
1937ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தயாரிப்பு நிறுவனத்தில், இந்தியாவின் தலை சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களை வரவழைத்து பணிபுரியச் செய்திருந்தார். அந்நாட்களில் 'ஷெர்லி டெம்பிள்' என்ற ஆங்கில திரைப்பட குழந்தை நட்சத்திரத்தையும், 'வாசந்தி' என்ற ஹிந்தித் திரைப்பட குழந்தை நட்சத்திரத்தையும் அறியாத இந்தியர்கள் எவரும் இல்லை. இந்த இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடித்த ஆங்கில திரைப்படமும், ஹிந்தி திரைப்படமும் இந்தியா முழுதும் திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருந்த வேளையில், அதேபோல தமிழிலும் ஒரு குழந்தை நட்சத்திரத்தை அறிமுகப்படுத்தி, பிரபலமாக்க திட்டமிட்ட இயக்குநர் கே சுப்ரமணியம், குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரித்தார்.
பிற மொழித் திரைப்படங்களுக்கு இணையாக தமிழ் திரைப்படங்களின் தரத்தை உயர்த்த பெருமுயற்சி மேற்கொண்ட இயக்குநர் கே சுப்ரமணியம், குழந்தைகளை நடிக்க வைத்து, தயாரித்து, இயக்கி 1937ம் ஆண்டு வெளியிட்ட திரைப்படம்தான் “பாலயோகினி”. 'ஷெர்லி டெம்பிள்', 'வாசந்தி' என்ற ஆங்கில மற்றும் ஹிந்தி திரைப்பட குழந்தை நட்சத்திரங்களுக்கு இணையாக தமிழில் இவர் அறிமுகம் செய்து வைத்து, பிரபலமாக்கிய குழந்தை நட்சத்திரம்தான் 'பேபி சரோஜா'.
பார்த்தசாரதி என்ற புது நடிகரோடு, கே ஆர் செல்லம், பாலசரஸ்வதி, ஆர் பிரகதாம்பாள் போன்ற நடிகைகளோடு இணைந்து “பாலயோகினி” திரைப்படத்தில் நடித்திருந்தார் 'பேபி சரோஜா' என்ற இந்த குழந்தை நட்சத்திரம். இயக்குநர் கே சுப்ரமணியத்தின் சகோதரர் கே விஸ்வநாத்தின் மகளான 'பேபி சரோஜா', படத்தில் நடித்திருந்த மற்ற திரைக் கலைஞர்களைக் காட்டிலும் அதிக புகழுக்கு உரியவளாகவும் பார்க்கப்பட்டாள்.
இந்தப் புகழை அந்நாட்களில் வியாபாரிகள் தங்கள் விற்பனையைப் பெருக்கவும் பயன்படுத்தினர். கைப்பைகள், நோட்டுப் புத்தகங்கள் என ஏனைய விளம்பரங்கள் வரை அனைத்திலும் பேபி சரோஜாவின் பெயரையும், உருவத்தையும் அச்சிட்டு பயன்படுத்தி வந்தனர். “பாலயோகினி”, “தியாக பூமி”, “காமதேனு” என மூன்றே திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் 'பேபி சரோஜா', இந்தியாவின் 'ஷெர்லி டெம்பிள்' என்றும் அழைக்கப்பட்டார்.




