இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் என்ற மாபெரும் திரைக்கலைஞனின் பண்பட்ட நடிப்பில் வெளிவந்த பலதரப்பட்ட வெற்றிக் காவியங்களில் குறிப்பிடும்படியான ஒன்றாகவும், வித்தியாசமான கதைக் களத்தில் தனது விவேகமிக்க நடிப்பின் மூலம் பார்க்கும் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திய ஒரு 'த்ரில்லர்' திரைப்படமாக அவரே தயாரித்து வெளியிட்ட திரைப்படம்தான் “புதியபறவை”.
1963ம் ஆண்டு உத்தம் குமார் மற்றும் ஷர்மிளா டாகூர் நடிப்பில் வெளிவந்த “சேஷ் அங்கா” என்ற வங்காள மொழி திரைப்படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் மாற்றம் செய்து தயாரித்த திரைப்படம்தான் இந்த “புதியபறவை”.
சிவாஜிகணேசன் தமிழில் நடித்து வெற்றி பெற்ற “அமரதீபம்” என்ற திரைப்படத்தை, “அமர்தீப்” என்ற பெயரில் 1958ம் ஆண்டு நடிகர் தேவ் ஆனந்த், வைஜெயந்திமாலா, பத்மினி ஆகியோரின் நடிப்பிலும், பின்னர் தனது “பாசமலர்” திரைப்படத்தை “ராக்கி” என்ற பெயரில் 1962ம் ஆண்டு நடிகர் அசோக்குமார், வஹீதா ரஹ்மான், பிரதீப் குமார் ஆகியோரின் நடிப்பிலும் உருவாக்கி, இந்த இரண்டு திரைப்படங்களையும் ஹிந்தியில் தனது “சிவாஜி பிலிம்ஸ்” என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து வெளியிட்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசன், தனது மூன்றாவது தயாரிப்பாகவும், தமிழில் முதல் தயாரிப்பாகவும், அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் வண்ணத் திரைக்காவியம் என்ற பெருமையோடும், அவரே நடித்து வெளியிட்ட திரைப்படம்தான் இந்த “புதியபறவை”.
இத்திரைப்படத்தில் நவநாகரீக மங்கையாக, படத்தின் முக்கிய நாயகியரில் ஒருவராக சிவாஜிகணேசனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் நடிகை சவுகார் ஜானகி. அதுவரை கண்களை குளமாக்கும் சோகக் கதைகளின் நாயகியாகவே நடித்து வந்த சவுகார் ஜானகியை நவநாகரீக மங்கையாக வரும் அந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய படத்தின் இயக்குநரான தாதா மிராஸி விரும்பவில்லை. ஆனால் சிவாஜிகணேசன் சவுகார் ஜானகிதான் அந்தக் கதாபாத்திரத்திற்கு சரியாக வருவார் என்பதில் தீர்க்கமாக இருந்தார்.
படத்தின் வசனகர்த்தா ஆரூர் தாஸூம் சிவாஜியின் கருத்தை ஆதரிக்க, வேறு வழியின்றி இயக்குநர் தாதா மிராஸியும் ஒப்புக் கொள்ள, பின்னர் “பார்த்த ஞாபகம் இல்லையோ, பருவ நாடகம் தொல்லையோ” என்ற அந்தப் படத்தின் பாடல் காட்சியில் நடிகை சவுகார் ஜானகியின் மிடுக்கான நடிப்பைக் கண்டு இயக்குநர் தாதா மிராஸியே அவரை மனதார பாராட்டியும் இருக்கின்றார்.
படத்தின் உச்சக்கட்ட காட்சி உட்பட, படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்திருந்த நிலையில், வசனகர்த்தா ஆரூர்தாஸ், நடிகர் திலகம் சிவாஜிகணேசனையும், இயக்குநர் தாதா மிராஸியையும் பார்த்து, “பெண்மையே நீ வாழ்க! உள்ளமே உனக்கு என் நன்றி!!” என்று தான் எழுதி வைத்திருந்த வசனத்தை சிவாஜியைப் பேசச் சொல்லி, மீண்டும் அந்தக் காட்சியை படமாக்குமாறு கேட்டுக் கொள்ள, சிவாஜி அதற்கான காரணத்தை ஆரூர் தாஸிடம் கேட்டபோது, நாயகியின் மீதான உங்களது காதலை உறுதிபடுத்த, நீங்கள் அந்தக் காட்சியில் அது சம்பந்தமாக ஓரிரு வார்த்தைகள் அழுத்தமாக பேசியே ஆக வேண்டும். அப்படி ஏதும் நீங்கள் பேசாமல் சென்றால், படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு உங்களது கதாபாத்திரம் மீது ஒரு எதிர்மறையான எண்ணம் தோன்ற அது வழி வகுத்துவிடும் என ஆரூர் தாஸ் சொல்ல, பின்னர் அவர் எழுதித் தந்த உரையாடலின் ஆழத்தைப் புரிந்து கொண்ட இயக்குநர் தாதா மிராஸியும், சிவாஜிகணேசனும் படத்தின் உச்சக்கட்ட காட்சியை மீண்டும் படமாக்கி சேர்த்தனர்.
படத்தின் பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத, இசையமைத்து தந்திருந்தனர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. படத்தின் அனைத்து பாடல்களும் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களாக இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக “எங்கே நிம்மதி” என்ற பாடல், அந்தக் காலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான இசைக் கருவிகளைப் பயன்படுத்தி மிகப் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டப் பாடலாக இன்றும் இசை விற்பன்னர்களும், இசை விரும்பிகளும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
1964ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தை சென்னையில் தனது சொந்த திரையரங்கமான சாந்தி திரையரங்கில் திரையிட திட்டமிட்டிருந்த நிலையில், அப்போது ஹிந்தி நடிகர் ராஜ்கபூரின் “சங்கம்” திரைப்படம் சாந்தி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததாலும், மேலும் சென்னையில் வேறு எந்த திரையரங்கிலும் இதுபோன்ற வசதிகள் இல்லை என்ற காரணத்தினாலும், தனது படம் தொடர்ந்து சாந்தி திரையரங்கிலேயே ஓட அனுமதிக்குமாறு நடிகர் ராஜ்கபூர் சிவாஜியிடம் கேட்க, சிவாஜியும் அதற்கு செவி சாய்த்து, வேறு வழியின்றி தனது “புதியபறவை” திரைப்படத்தை சென்னை பாரகன் திரையரங்கில் வெளியிட்டார்.
இத்தனை சிறப்புகளையும், அனுபவங்களையும் உள்ளடக்கிய இந்தப் “புதியபறவை” திரைப்படம், நடிகர் திலகத்தின் போற்றுதலுக்குரிய திரைப்படங்களின் வரிசையில் ஒன்றாக இன்றும் புத்தம் புதுப் பறவையாக திரைவானில் சிறகடித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்றது என்பது யாராலும் மறுக்க இயலாது.