2025ன் அரையாண்டில் தமிழ் சினிமா வசூல் எவ்வளவு?
06 ஜூலை, 2025 - 12:22 IST
2025ம் ஆண்டின் அரையாண்டு முடிந்து அடுத்த அரையாண்டு ஆரம்பமாகியுள்ளது. இந்த வருடத்தில் மொத்தமாக ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கடந்த ஆறு மாதங்களில் கமல்ஹாசன், அஜித், சூர்யா, தனுஷ், சிலம்பரசன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆறு மாதங்களில் ரஜினிகாந்த், மேலும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது.
கடந்த அரையாண்டில் தமிழ் சினிமாவில் சுமார் 120 படங்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் 10க்கும் குறைவான படங்களே வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. அதிக வசூலைப் பெற்றுள்ள படங்களாக 'குட் பேட் அக்லி' சுமார் 250 கோடி, 'டிராகன்' 150 கோடி, 'விடாமுயற்சி' 130 கோடி, 'ரெட்ரோ' 100 கோடி, 'தக் லைப்' 95 கோடி, 'டூரிஸ்ட் பேமிலி' 85 கோடி, 'வீர தீர சூரன் 2' 70 கோடி, 'மத கஜ ராஜா' 60 கோடி, 'மாமன்' 40 கோடி, 'குடும்பஸ்தன்' சுமார் 30 கோடி என வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள படங்களில் “விடாமுயற்சி, ரெட்ரோ, தக் லைப்,” ஆகிய படங்கள் அவ்வளவு வசூலித்திருந்தாலும் தியேட்டர் வியாபார கணக்கில் நஷ்டம் தந்துள்ளதாகச் சொல்கிறார்கள். நஷ்டத் தொகை எவ்வளவு என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கே தெரியும். சாட்டிலைட், ஓடிடி உரிமை ஆகியவற்றின் மூலம் தயாரிப்பாளருக்கு நல்ல வருவாய் கிடைத்திருக்க வாய்ப்புகள் உண்டு.
தனுஷ் நடித்து வெளிவந்த 'குபேரா' படம் 100 கோடி வசூலைக் கடந்திருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரையில் அந்தப் படம் 20 கோடிக்கும் குறைவாகவே வசூலித்து தோல்வியைத் தழுவியுள்ளது. வசூலித்த பெரும் தொகை தெலுங்கு மாநிலங்களின் வருவாய் மட்டுமே.
அஜித் நடித்து வெளிவந்த 'குட் பேட் அக்லி' படம் 250 கோடி வசூலித்துள்ளதாகச் சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் மட்டுமே அந்தப் படம் லாபம் கொடுத்துள்ளது என்கிறார்கள். மற்ற மாநிலங்களின் வசூல் காரணமாக தயாரிப்பளருக்கு நஷ்டம் தான் என்பது தகவல்.
வெளியீட்டிற்குத் தயாராகி 12 ஆண்டுகள் கழித்து வெளிவந்த 'மத கஜ ராஜா' படத்தின் வசூல் யாருமே எதிர்பார்க்காத ஒன்று. இத்தனை வருடங்கள் கழித்து வந்தாலும் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தால் அது வெற்றிதான் என்பதை இந்தப் படம் புரிய வைத்துள்ளது. வெளியீட்டிற்குத் தயாராகி வெளிவராமல் முடங்கிக் கிடக்கும் 'துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல்,' உள்ளிட்ட சில படங்களுக்கு அது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணி 37 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைய, கூடவே சிலம்பரசன், ஏஆர் ரகுமான் ஆகியோர் இருந்தும் அந்தப் படத்தின் தோல்வி தமிழ் சினிமாவை பெரிதும் பாதித்தது. எப்பேர்ப்பட்ட கூட்டணி என்பது முக்கியமில்லை, என்ன கதையைச் சொல்கிறோம் என்பதுதான் முக்கியம் என்பதை அந்தப் படத்தின் ரிசல்ட் மீண்டும் உணர்த்தியுள்ளது. அதனால், அடுத்து வரும் சில பெரிய கூட்டணிகளைக் கண்டு தமிழ் சினிமா கொஞ்சம் அஞ்சியே இருக்கிறது.
அதே போன்று கலகலப்பான காமெடி கூட்டணியான சுந்தர் சி, வடிவேலு 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த 'கேங்கர்ஸ்' படம் எதிர்பார்க்க வைத்து காமெடியில் ஏமாற்றத்தையே தந்தது.
கடந்த வருடம் வெளிவந்த பிரம்மாண்ட சரித்திரப் படமான 'கங்குவா' படம் சூர்யாவுக்கு பெரிய தோல்வியைத் தந்தது. இந்த வருடம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடித்த 'ரெட்ரோ' படம் அவரை மீட்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. அடுத்து வர உள்ள 'கருப்பு' தான் சூர்யாவை கமர்ஷியல் பக்கம் மீட்டு காப்பாற்ற வேண்டும்.
'லவ் டுடே' படம் கொடுத்த 100 கோடியை மிஞ்சி, 'டிராகன்' படம் மூலம் 150 கோடி வசூலைத் தொட்டு வியாபார வசூலில் உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த ஆண்டின் தனித்துவமான அழுத்தமான வெற்றி என்றால் சசிகுமார் நடித்து வெளிவந்த 'டூரிஸ்ட் பேமிலி' படத்தைத்தான் சொல்ல வேண்டும். தனி நாயகனாக சூரியின் வெற்றி 'மாமன்' படத்தின் மூலம் அவருக்கு ஒரு வியாபாரத்தை தமிழ் சினிமாவில் திறந்து வைத்திருக்கிறது. மணிகண்டன் நடித்த 'குடும்பஸ்தன்' படமும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. இந்த படங்கள் சிறிய பட்ஜெட் படங்கள் மீதான நம்பிக்கை அதிகம் ஏற்படுத்தியது.
வியாபார ரீதியாக இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் வசூல் நிலவரத்தால் பாதிக்கப்பட்ட மற்ற நடிகர்களில் விஜய் சேதுபதி (ஏஸ்), ஜெயம் ரவி ( காதலிக்க நேரமில்லை), அருண் விஜய் ( வணங்கான்), ஜீவா (அகத்தியா), சந்தானம் (டிடி நெக்ஸ்ட் லெவல்), ஆகியோர் குறிப்பிட வேண்டியவர்கள்.
வெற்றி, தோல்வி என ரிசல்ட் தந்த படங்களின் மூலம் அரையாண்டில் 1000 கோடிக்கும் சற்றே கூடுதலான வசூல் கிடைத்துள்ளது. அந்த வசூலை சுமார் 25 படங்கள் மட்டுமே பெற்றுத் தந்துள்ளன. மீதியுள்ள 100 படங்களின் மூலம் கிடைத்த வசூல் சில கோடிகள் மட்டுமே இருக்கும். அந்த 100 படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 400 முதல் 500 கோடி வரை வரும்.
முன்னணி நடிகரோ, நடுநிலை நடிகரோ, பின்னணி நடிகரோ, பிரம்மாண்டப் படமோ, சிறிய பட்ஜெட் படமோ வெற்றியும், வசூலும் கதை, திரைக்கதை ஆகியவற்றையே நம்பி உள்ளது என இந்த அரையாண்டில் வந்த படங்களின் வரவேற்பு மீண்டும் அழுத்தமாய் தெரிவித்துள்ளது. சினிமாவைப் பொறுத்தவரை வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வருவதுதான். தோல்வியிலிருந்து பாடம் கற்று திருத்தி மீண்டும் வெற்றி பெறுவதுதான் அதற்கான ஒரே வழி. அதைச் செய்பவர்கள் மீண்டும் கோடிகளை அள்ளுவார்கள். அதே தவறை மீண்டும் செய்பவர்கள் மீட்க முடியாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்.