அடுத்த ஐந்து மாதங்களுக்கு வரப் போகும் புதுப் படங்கள் அசத்துமா? | பாலியல் குற்றவாளிகளுக்கு இந்த மாதிரி தண்டனை வழங்க வேண்டும் : வரலட்சுமி | கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் |
தமிழ் திரையுலகில் எம் ஜி ஆருக்கு அடுத்தபடியாக, வாள் வீச்சு சண்டையில் வல்லவராக அறியப்பட்டவரும், தனது பெயருக்கு முன்னால் 'விஜயபுரி வீரன்' என்ற அடைமொழியோடு ஆர்ப்பாட்டமாக அறுபதுகளில் அறியப்பட்டு, அனைவரின் விருப்ப நாயகனாக வலம் வந்தவர்தான் நடிகர் சி எல் ஆனந்தன். மூன்று தசாப்தங்களாக கலைப்பணி ஆற்றிய இவர், ஏறக்குறைய 60 திரைப்படங்கள் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்திருக்கின்றார். பிரபல திரை நட்சத்திரங்களான டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதா குமாரி ஆகியோர் இவரது மகள்கள் மற்றும் கலை வாரிசுகள்.
“நானும் மனிதன்தான்” என்ற ஒரு திரைப்படத்தை தயாரித்தும் இருக்கின்றார் நடிகர் சி எல் ஆனந்தன். வாள் வீச்சு, குதிரை சவாரி, நடனம் என அனைத்திலும் நன்கு தேர்ச்சி பெற்றவரான இவரால் மற்ற நாயகர்களைப் போல் ஒரு நிலைத்த நாயகனாக நிற்க இயலாமல் போனது துரதிர்ஷ்டமே. 1960ம் ஆண்டு இயக்குநர் ஜோசப் தளியத் தயாரித்து இயக்கியிருந்த “விஜயபுரி வீரன்” மிகப் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அமோகமான வசூலைப் பெற்று வந்த அந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கின்றது? என யோசித்த ஏ வி மெய்யப்ப செட்டியார், அதுபோலவே ஒரு 'போக்லோர்' கதையை படமாக்க விரும்பினார்.
“விஜயபுரி வீரன்” திரைப்படத்தில் இயக்குநர் ஜோசப் தளியத்திடம் உதவி இயக்குநராக அப்போது பணிபுரிந்து வந்த இயக்குநர் ஏ சி திருலோகசந்தரையும், அந்தப் படத்தின் நாயகனான 'சிட்டாடெல்' ஆனந்தனையும் அழைத்து வரச் செய்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். “விஜயபுரி வீரன்” திரைப்படம் போலவே ஒரு 'போக்லோர்' கதையை உருவாக்குங்கள் என இயக்குநர் ஏ சி திருலோகசந்தரிடம் ஏ வி மெய்யப்ப செட்டியார் கூற, அப்படி உருவானதுதான் “வீரத்திருமகன்” என்ற திரைப்படம்.
ஏ சி திருலோகசந்தர் இயக்குநராக அறிமுகமான இத்திரைப்படம், நடிகை சச்சுவையும் நாயகியாக அறிமுகப்படுத்தியதோடு, நடிகர் சி எல் ஆனந்தனுக்கு ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் பெற்றுத் தந்தது. 1957ல் இயக்குநர் ஜோசப் தளியத் தனது 'சிட்டாடெல் கம்பெனி'யின் சார்பில் தயாரித்து இயக்கியிருந்த “மல்லிகா” என்ற திரைப்படத்தில் ஒரு நடனக் காட்சியில் மஜ்னுவாக நடித்திருந்த சி எல் ஆனந்தன் 'சிட்டாடெல்' ஆனந்தன் என அழைக்கப்பட்டு வந்தார். பின்னர் “விஜயபுரி வீரன்” படம் வெளிவந்து அதன் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் 'விஜயபுரி வீரன்' ஆனந்தன் ஆனார்.
“வீரத்திருமகன்” திரைப்படத்திற்குப் பின் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த “குபேரத் தீவு”, “செங்கமலத்தீவு” போன்ற ஒரு சில படங்களும் இவருக்கு ஒரு நிலையான இடத்தை தமிழ் திரையுலகில் பெற்றுத் தரவில்லை என்பதுதான் உண்மை. பின்னர் வந்த “யார் நீ?”, “மூன்றெழுத்து”, “நினைவில் நின்றவள்”, “பொன்னு மாப்பிள்ளை”, “நான்கு கில்லாடிகள்” என பல படங்களில் வில்லனாகவும், துணை நடிகராகவும் நடித்து வந்தார். “தனிப்பிறவி”, “நீரும் நெருப்பும்” ஆகிய படங்களில் எம் ஜி ஆரோடு இணைந்து நடித்து வந்த இவர், நடிகர் ரஜினிகாந்துடனும் இணைந்து “தனிக்காட்டு ராஜா”, “அடுத்த வாரிசு” என இரண்டு படங்களில் நடித்திருக்கின்றார். 1988ம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த “செந்தூரப் பூவே” திரைப்படத்தில் நடிகை நிரோஷாவின் தந்தையாக நடித்திருந்ததே இவரது கடைசி தமிழ் திரைப்படம். 1989ம் ஆண்டு தனது 55வது அகவையில் இந்த வாள் வீச்சு நாயகன் வாழ்க்கைப் பயணத்திலிருந்தும் விடைபெற்று விண்ணை அடைந்தார்.