கடவுள் பூமிக்கு வந்தால்… : சிம்புவின் 51வது பட அறிவிப்பு வெளியானது | லக்கி பாஸ்கரை அடுத்து 4 மொழிகளில் துல்கர் சல்மான் நடிக்கும் படம் | தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்: பார்வதி நாயருக்கு விரைவில் 'டும்.. டும்.. டும்..' | பிரியங்கா சோப்ரா இல்லாமல் மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பை துவங்கிய ராஜமவுலி | கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது | லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக்: சவுராஷ்டிர மொழி சொற்கள் இடம்பெற்ற ஒரே தமிழ் திரையிசைப் பாடல் | இளையராஜா முன் அவரது பாடல்களுக்கு நடனமாடி வசீகரித்த ரஷ்ய கலைஞர்கள் | நடிகராக 50வது படம், தயாரிப்பாளராக மாறிய சிம்பு |
வெள்ளித்திரையில் சொல்லிலடங்கா புதுமைகளைச் செய்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் 300க்கும் அதிகமான திரைப்படங்களை தயாரித்து, சிவாஜிகணேசன், கமல்ஹாசன், சிவக்குமார், குமாரி ருக்மணி போன்ற எண்ணிலடங்கா அற்புத திரைக்கலைஞர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததோடு, அவர்களது கலை வாரிசுகளான நடிகர் பிரபு, நடிகை லக்ஷ்மி, நடிகர் சூர்யா ஆகியோரையும் தங்களது தயாரிப்பில் நடிக்க வைத்து, தலைமுறைகள் கடந்தும் தனது தனித்துவத்தை என்றும் இழக்காத ஏ வி எம் என்ற அந்த மாபெரும் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப்படங்களுக்கு என ஒரு தனிச் சிறப்பு, எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், கலையுலகினரிடமும் எப்போதும் இருந்ததுண்டு.
அப்படி ஒரு எதிர்பார்ப்புடன் 1967ம் ஆண்டு வெளிவந்து, மாபெரும் வெற்றி பெற்ற மர்ம திகில் திரைப்படம்தான் “அதே கண்கள்”. 1965ல் ஹிந்தியில் ஏ வி எம் தயாரித்த “மெஹர்பான்” என்ற திரைப்படத்திற்காக போடப்பட்ட பிரமாண்டமான வீட்டின் 'செட்' அமைப்பை பிரித்து எடுத்துவிடாமல் அதை அப்படியே தங்களது அடுத்த தயாரிப்பான “அதே கண்கள்” திரைப்படத்திற்கும் பயன்படுத்தி புதுமை படைத்திருந்ததோடு, படத்தில் இடம் பெற்ற பாடல்களிலும் சில புதுமைகளைச் செய்து ரசிக்க வைத்திருந்தனர்.
நடிகர் ரவிச்சந்திரன், காஞ்சனா, எஸ் ஏ அசோகன், கீதாஞ்சலி, நாகேஷ், மாதவி, எஸ் வி ராமதாஸ், ஜி சகுந்தலா, கே பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன், ஏ கருணாநிதி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த இந்த வண்ணமயமான மர்ம திகில் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் வேதா. “ஓ ஓ எத்தனை அழகு இருபது வயதினிலே”, “என்னென்னமோ நான் நினைத்தேன்”, “பூம் பூம் பூ மாட்டுக்காரன்”, “வா அருகில் வா”, “கண்ணுக்குத் தெரியாதா”, “பொம்பள ஒருத்தி இருந்தாளாம்” என படத்தில் இடம் பெற்றிருந்த அத்தனைப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருந்தன.
தமிழ் திரைப்படப் பாடல் ஒன்றில் சவுராஷ்டிர மொழி வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒரு பாடல் உண்டு என்றால், அது “அதே கண்கள்” திரைப்படத்தில் இடம் பெற்ற “பொம்பள ஒருத்தி இருந்தாளாம் பூதத்தப் பார்த்து பயந்தாளாம்” என்ற பாடல்தான் என நாம் உறுதிபட கூற முடியும். பாடலின் முடிவில் “சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா”, “சொன்னவோ, சொன்னவோ, சொன்னவோ”, “தாக்கரேஸ், தாக்கரேஸ், தாக்கரேஸ்”, “தக்குனோக, தக்குனோக, தக்குனோக” என சவுராஷ்டிர மொழி வார்த்தைகளைப் பாடலில் பயன்படுத்தியிருப்பர். “விட்டுப் போ,”, “விடாதே,”, “பயமாயிருக்கு,”, “பயப்படாதே,” என்ற தமிழ் சொற்களுக்கு இணையான அந்த சவுராஷ்டிர மொழி வார்த்தைகளை ஒரு தமிழ் திரையிசைப் பாடலில் முதன் முதலாக இடம்பெறச் செய்து, அதிலும் புதுமை படைத்திருந்தனர் ஏ வி எம் தயாரிப்பு நிறுவனத்தினர்.