குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பின்னணிப் பாடகர்கள் எஸ்பி பாலசுப்ரமணியம் மற்றும் கேஜே யேசுதாஸ் ஆகிய இருவரும் கோலோச்சியிருந்த 1970களின் பிற்பகுதியில், தமிழ் திரையிசைக்கு அறிமுகமாகி ஒரு தரமான பின்னணிப் பாடகராக உச்சம் தொட்டவர்தான் மலேசியா வாசுதேவன்
கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், பிறந்து வளர்ந்ததெல்லாம் மலேசியாவில். அங்கு பல நாடகங்களில் நடித்த அனுபவமே இவர் திரைப்பட வாய்ப்பு தேடி சென்னை வர காரணமாயிருந்தது. மலேசிய தமிழர்கள் கூட்டாக தயாரித்த “இரத்தப் பேய்” என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு நடிகராக அறிமுகமானதோடு, பல விளம்பர ஆவணப் படங்களிலும் நடித்தார்.
பின் இளையராஜாவின் “பாவலர் பிரதர்ஸ்” இசைக்குழுவிலும் ஒரு பாடகராக பயணித்தார். இசையமைப்பாளர் வி. குமார் இசையமைப்பில் “டெல்லி டூ மெட்ராஸ்” என்ற படத்தில் “பாலு விக்கிற பத்துமா உன் பாலு ரொம்ப சுத்தமா” என்ற ஒரு பாடலை நடிகர் நாகேஷிற்காகப் பின்னணி பாடி திரையிசைப் பின்னணிப் பாடகரானார்.
1977ம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுக திரைப்படமான “16 வயதினிலே” படத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட வேண்டியதாக இருந்தது. ஆனால் பாடல் பதிவின்போது, குறித்த நேரத்தில் எஸ்பி பாலசுப்ரமணியத்தால் வர முடியாத சூழல் ஏற்பட, அந்த குறிப்பிட்ட பாடல்களை அப்போது அங்கிருந்த மலேசியா வாசுதேவனை பாடவைத்து பதிவு செய்யலாம் என முடிவெடுத்தார் இளையராஜா. மலேசியா வாசுதேவனைப் பார்த்து, இதைவிட உனக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் அமையாது, நடிகர் கமல்ஹாசனுக்காக பின்னணிப் பாடப் போகின்றாய் பயன்படுத்திக் கொள் என கூறினார்.
ஆனந்தமும் அதிர்ச்சியும் ஒருங்கே குடிகொண்டவராய் அந்தப் பாடல்களைப் பாட தயாரானார் மலேசியா வாசுதேவன். நடிகர் கமல்ஹாசனுக்காக பின்னணி பாடப் போகின்றோம் என்ற பயம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் தமிழ் திரையிசை உலகின் ராணி “கான சரஸ்வதி” பி சுசீலாவுடன் இணைந்தும் பாடப் போகின்றோம் என்ற பயமும் கொடி கொண்டவராய் அந்தப் பாடல்களை பாடி முடித்தார் மலேசியா வாசுதேவன்.
அப்படி அவர் பயத்தோடு பாடிய அந்தப் பாடல்கள் எஸ் ஜானகியுடன் இணைந்து “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு” என்ற ஒரு பாடலும், பி சுசீலாவுடன் இணைந்து “செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா” என்ற மற்றொரு பாடலுமான “16 வயதினிலே” திரைப்படப் பாடல்கள். இந்தப் பாடல்களின் வெற்றிக்குப் பின்தான் தமிழ் திரையிசை உலகின் தனி கவனத்திற்குள்ளானார் மலேசியா வாசுதேவன்.
இதனைத் தொடர்ந்து “மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்ததே”, “ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு”, “ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி”, “ஆயிரம் மலர்களே மலருங்கள்”, “அடி ஆடு பூங்கொடியே”, “அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா”, “கோடை கால காற்றே”, “பூவே இளைய பூவே” என இசைஞானி இளையராஜாவின் இசை வார்ப்பில் ஒரு சங்கீத சாம்ராஜ்ஜியமே நடத்தி, தனது தனித்துவமிக்க குரலால் தமிழ் திரையிசை ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார் பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன்.