வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
நரை விழுந்த போதிலும், வயதிற்கு திரை ஏதும் இல்லை என நிரூபித்து, கரை கடக்கும் புயலைப் போல், தான் கற்ற நாட்டியக் கலையை மற்றவரும் பயனுறும் வகையில், இன்னும் தீவிரம் காட்டி நாட்டியக் கலைப் பணியாற்றி வரும் “நாட்டிய ராணி”, “நாடறிந்த வெள்ளித்திரை நாயகி” நடிகை வைஜெயந்திமாலாவின் 88வது பிறந்த தினம் இன்று…
ஒரு நடிகை என்பதையும் தாண்டி, தலைசிறந்த நாட்டியக் கலைஞராக இன்றும் பார்க்கப்பட்டு, போற்றப்பட்டு வரும் நடிகை வைஜெயந்திமாலா, 1936ம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில், எம்டி ராமன் மற்றும் வசுந்தராதேவி இணையரின் மகளாகப் பிறந்தார்.
பள்ளிச் சிறுமியாக இருந்தபோதே போப் ஆண்டவர் முன் நடனமாடியவர் நடிகை வைஜெயந்திமாலா. 1959ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் பரதநாட்டியம் ஆடிய முதல் பெண்மணி என்ற பெருமையும் இவருக்குண்டு. நடனம் தவிர, கர்நாடக இசையை முறையாகப் பயின்றவர். ராஜம் அய்யர், அரியக்குடி ராமனுஜ அய்யங்கார், டிகே பட்டம்மாள் போன்ற சங்கீத மேதைகளிடம் இசை பயின்றவர். மேலும் பில்லியர்ட்ஸ் விளையாட்டிலும் தேர்ச்சி பெற்றவராக அறியப்படுபவர்தான் வைஜெயந்திமாலா.
இவரது தாய் வசுந்தராதேவியும் ஒரு பிரபல நடிகையாக தமிழ் திரையுலகில் 1940களில் நடித்து வந்தார். 1949ம் ஆண்டு தனது 13வது வயதில் ஏவிஎம் தயாரித்த “வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார் வைஜெயந்திமாலா.
1951ல் இதே திரைப்படம் ஹிந்தியில் “பஹார்” என்ற பெயரில் தயாரானபோது, அத்திரைப்படத்திலும் இவரே நாயகியாக நடித்து ஹிந்தி திரையுலகிலும் தடம் பதித்தார். பேரழகும், பெரும் நாட்டியத் திறனும் கொண்ட வைஜெயந்திமாலாவை ஹிந்தி திரையுலகம் சுவீகரித்துக் கொண்டதில் ஐயம் ஏதும் இல்லை.
இதனைத் தொடர்ந்து 1953ல் பின்னணிப் பாடகரும், நடிகருமான கிஷோர் குமாருடன் இணைந்து இவர் நடித்த “லட்கி” திரைப்படமும் இவருக்கு ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித் தர, பிஸியான நடிகையானார் வைஜெயந்திமாலா. இத்திரைப்படமே பின்னர் தமிழில் நடிகர் ஜெமினிகணேசன் மற்றும் 'வீணை' எஸ் பாலசந்தருடன் இவர் இணைந்து நடித்து “பெண்” என்ற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது.
இவரது நடிப்பில் “நாகின்”, “யாஸ்மின்”, “தேவ்தாஸ்”, “நியூ டெல்லி”, “நயா தௌர்”, “சாத்னா”, “மதுமதி”, “பைகாம்” போன்ற திரைப்படங்கள் இவருக்கு தொடர் வெற்றியைத் தந்து, இவரை ஹிந்தி திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திர நாயகியாக்கியது.
1949ல் “வாழ்க்கை” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்த வைஜெயந்திமாலா, அதன்பிறகு ஹிந்தி திரையுலகில் கோலோச்சியிருந்திருந்தாலும், அவ்வப்போது தமிழிலும் ஓரிரு திரைப்படங்களில் நடிக்கத் தவறியதில்லை. 1956ல் நடிகர் ஸ்ரீராமுடன் இணைந்து “மர்மவீரன்”, 1959ல் அக்கினேனி நாகேஸ்வரராவுடன் “அதிசயப் பெண்”, 1960ல் எம்ஜிஆருடன் “பாக்தாத் திருடன்”, சிவாஜி கணேசனுடன் “இரும்புத்திரை”, “ராஜபக்தி”, மற்றும் “சித்தூர் ராணிபத்மினி” என மூன்று திரைப்படங்கள், “பெண்”, “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, “பார்த்திபன் கனவு”, மற்றும் “தேன்நிலவு” என நடிகர் ஜெமினி கணேசனுடன் இணைந்து நான்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் வைஜெயந்திமாலா.
வெற்றி பெற்ற தமிழ் திரைப்படங்களில் சில, ஹிந்தி திரையுலகிற்குச் சென்று மீண்டும் தயாரானபோது, அத்திரைப்படங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட ஒரே நடிகை வைஜெயந்திமாலா. “கணவனே கண்கண்ட தெய்வம்” “தேவதா” என்ற பெயரிலும், “கல்யாணப்பரிசு” “நஸ்ரானா” என்ற பெயரிலும், “கைராசி” “ஜுலா” என்ற பெயரிலும், “பாலும் பழமும்” “ஸாதி” என்ற பெயரிலும், “அமரதீபம்” “அமர்தீப்” ஆன போதும் அத்தனை திரைப்படங்களிலும் நாயகியாக நடித்திருந்தவர் வைஜெயந்திமாலா.
தனது திரையுலகப் பயணத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஏறத்தாழ 65 திரைப்படங்களுக்கும் மேல் நடித்திருக்கின்றார். நடித்த அத்தனை திரைப்படங்களிலும் நாயகியாகவே நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. வைஜெயந்திமாலாவின் 14 திரைப்படங்கள் ரஷ்ய மொழியில் மொழிபெயர்ப்பு செய்து அங்கும் வெளியாகி இருக்கின்றன.
தனது 32வது வயதில் வட இந்தியரான சமன்லால் பாலி என்பவரை கரம் பற்றி இல்லறம் புகுந்தார். இந்த இணையருக்கு சுசீந்திர பாலி என்ற மகன் ஒருவரும் உண்டு. இவர் 2007ம் ஆண்டு வெளிவந்த “நினைத்தாலே” என்ற படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
திருமணத்திற்குப் பின் முற்றிலுமாக திரைத்துறையிலிருந்து விலகிய வைஜெயந்திமாலா, அரசியலில் தடம் பதித்தார். இந்திரா காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு பொதுத் தேர்தலில், தென் சென்னை வேட்பாளராக 1984 மற்றும் 1989 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய ஒரே நடிகை என்ற பெருமையும் இவருக்குண்டு.
தொடர்ந்து 1993ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1999ம் ஆண்டு கட்சிப் பொறுபிலிருந்து தன்னை விலக்கிக் கொண்ட வைஜெயந்திமாலா, பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், கலைமாமணி, சங்கீத நாடக அகாடமி விருது என இன்னும் பல நடன அமைப்புகள் வழங்கிய ஏராளமான விருதுகளை பெற்றிருக்கும் இவர், தமிழ் திரைப்படங்களில் சொற்ப எண்ணிக்கையில் நடித்திருந்தாலும், தமிழிலிருந்து ஹிந்தி திரையுலகிற்குச் சென்று அங்கு தனித்துவம் பெற்ற நடிகையாக கோலோச்சிய முதல் தமிழ் நடிகை பெருமையைத் தேடித் தந்த நடிகை வைஜெயந்திமாலா அவர்களின் பிறந்த தினமான இன்று, அவருடைய கலைப்பணி மேலும் சிறக்க, அவரை வாழ்த்தி வணங்குவதில் நாம் பெருமை கொள்வோம்.