இந்தியன் 2 படம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் உலகளவில் புரொமோஷன் செய்ய கிளம்பிவிட்டார். அந்தவகையில் மலேசியா சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தன.
இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அன்வர் இப்ராஹிம், ‛‛அரசு பணிகளுக்கு இடையில், இந்தியாவின் பிரபல கலைஞரும் 'சூப்பர் ஸ்டாருமான' கமல்ஹாசனுடன் நேரத்தை செலவிட எனக்கு நேரம் கிடைத்தது. ஊழலுக்கு எதிரான கண்டிப்பு உள்ளிட்ட திரையுலகம் தொடர்பான கருத்துக்களை பேசவும் பரிமாறிக் கொண்டோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல், ‛‛உங்களைச் சந்தித்ததில் பெருமை அடைகிறேன் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம். பலதரப்பட்ட பிரச்னைகள் பற்றிய அறிவொளி கலந்த விவாதம். நமது நாடுகளுக்கிடையேயான இருதரப்பு உறவுகள் பற்றிய உங்கள் கருத்துகளை கேட்டு, சினிமாவின் முக்கியப் பங்கு மற்றும் சமூகத்தில் ஊழலுக்கு எதிரான கடுமையான சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை குறித்து உங்களுடன் ஒத்துப்போவதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்'' என குறிப்பிட்டுள்ளார்.