இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
இலங்கையை சேர்ந்த பிரபல வானொலி தொகுப்பாளர் பிஹெச் அப்துல் ஹமீது. அவரின் தனித்துவமான கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் அவ்வளவு இனிமையாக இருக்கும். டிவியில் ‛பாட்டுக்கு பாட்டு' நிகழ்ச்சி உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். மேலும் பல விளம்பரங்களுக்கும் இவரின் தனித்துவமான குரல் சிறப்பு சேர்த்து இருக்கின்றன. இந்நிலையில் நேற்றைய(ஜூன் 24) தினம் இவர் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. இதுதொடர்பாக அப்துல் ஹமீதே வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது...
மாண்டவன் மீண்டு வந்து பேசுகிறானே என சிலர் வியந்து நோக்க கூடும். நேற்று நள்ளிரவு முதல் இந்த நிமிடம் வரை நித்திரை கொள்ளவில்லை. அந்த விஷமச் செய்தியை கேட்டு பல்லாயிரம் அன்பு உள்ளங்கள் தொலைபேசியில் என்னை அழைத்தனர். என் குரலை கேட்ட பின்னரே நான் உயிரோடு இருப்பதை நிச்சயப்படுத்தி கொண்டனர். அதிலும் சிலர் என் குரலை கேட்டு கதறி அழுவதை கேட்டு என்னால் தாங்க முடியவில்லை (என கூறுகையில் அவரும் கண் கலங்கி அழுதார்). இத்தனை அன்பு உள்ளங்களை பெற என்ன தவம் செய்தாளோ என் அன்னை.
இலங்கை பத்திரிக்கையில் ‛மரணம் மனிதனுக்கு தரும் வரம்' என்ற பெயரில் நேற்று ஒரு கட்டுரை எழுதினேன். அந்த அனுபவம் தான் எனக்கு இப்போது கிடைத்துள்ளது. என் மீது பொறாமை கொண்ட சிலர் இப்படி எதிர்மறையான விமர்சனங்களை பரப்பி இருக்கலாம்.
நான் செத்து பிழைப்பது இது எனக்கு மூன்றாவது அனுபவம். 1983ல் இனகலவரத்தின் போது என்னையும், என் மனைவியையும் உயிரோடு கொளுத்தி எரித்து விட்டார்கள் என இங்கு(இலங்கை) மட்டுமல்ல தமிழகத்தில் வதந்தி பரப்பினர். அது எனது முதல் அனுபவம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் யு-டியூப்பில் ஒருவர் அதிக பணம் வருமானம் ஈட்ட வேண்டும் என்ற பேராசையில் என் படத்தை போட்டு மரணம் என செய்தி பரப்பினர். இப்போது மூன்றாவது முறை. ஆகவே மூன்று முறை நான் உயிர்த்தெழுந்து இருக்கிறேன் என நகைச்சுவையாக தோன்றுகிறது.
நாம் இறந்த பின் நம் மீது உண்மையான அன்பு பாசம் கொண்டவர்கள் யார் என பார்க்க முடியாது. ஆனால் வாழும் காலத்திலேயே ஒரு முறை அதை கணிக்க அதை அறிந்து கொள்ள இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் தான் இது. இந்த செய்தியை பரப்பிய அந்த மனிதரை காப்பாற்றும்படி இறைவனை வேண்டுகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வணக்கமும்... நன்றியும்''
இவ்வாறு அப்துல் ஹமீது கூறியுள்ளார்.