மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1985ம் ஆண்டு தீபாவளி தினம் நவம்பர் 11ம் தேதி அன்று வந்தது. அன்றைய தினத்தில் “கரையைத் தொடாத அலைகள், படிக்காதவன், பிரேம பாசம், ஜப்பானில் கல்யாணராமன், சமயபுரத்தாளே சாட்சி, ஆஷா, சிந்து பைரவி, சின்னவீடு, பெருமை” ஆகிய படங்கள் வெளிவந்தன.
அத்தனை படங்களிலும் இன்றைக்கும் பேசப்படும், பெருமைப்படும் ஒரு 'கிளாசிக்' படமாக அமைந்த படம் 'சிந்து பைரவி'. கே பாலசந்தர் இயக்கத்தில், இளையராஜா இசையில், சிவகுமார், சுஹாசினி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். இசையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெளிவந்த இந்தப் படத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. படத்தின் பெரும் வெவற்றிக்குக் காரணமாக இளையராஜாவின் இசை அமைந்தது. அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் வாங்கிக் கொடுத்தது. பின்னணிப் பாடகி சித்ராவிற்கு முதல் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். சிவகுமார், சுஹாசினி இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். இருவருக்குமே அப்படத்திற்காக தேசிய விருதை வழங்கியிருக்கலாம். ஆனால், சுஹாசினி மட்டுமே சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். பாலசந்தர் இயக்கிய 100 படங்களில் டாப் 10 படங்களில் ஒன்றாக இந்தப் படமும் இடம் பெறும்.
ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் இருவரும் “ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழவைப்பேன்” படங்களுக்குப் பிறகு இணைந்து நடித்த மூன்றாவது படமான 'படிக்காதவன்' படமும் 1985 தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் ஒன்று. ராஜசேகர் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த படம். அமிதாப், வினோத் மெஹ்ரா, சஞ்சீவ் குமார் நடித்து 1982ல் ஹிந்தியில் வெளிவந்த 'குத்-டார்' படத்தின் தமிழ் ரீமேக்தான் 'படிக்காதவன். அண்ணன் தம்பிகளாக சிவாஜிகணேசன், ரஜினிகாந்த், விஜயபாபு ஆகியோர் நடித்தார்கள். அண்ணன் சிவாஜியைப் பிரிந்த தம்பிகள் ரஜினிகாந்த், விஜயபாபு. படிக்காத ரஜினி, தம்பி விஜயாபுவைப் படிக்க வைப்பார். ஆனால், அண்ணனை மதிக்காத தம்பி விஜயபாபு தடம் மாறிப் போவார். பல வருடங்களுக்கு முன்பு பிரிந்த அண்ணன், தம்பிகள் மீண்டும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ரஜினி ஜோடியாக அம்பிகா, திருடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டாக்சி டிரைவராக இருக்கும் ரஜினி அவரது காரை லட்சுமி எனப் பெயர் வைத்து அழைத்ததை கூட ரசிகர்கள் அப்போது ரசித்தனர். இளையராஜாவின் இசையில் 'ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்' பாடல் இப்போதும் ரசிக்கப்படும் தத்துவப் பாடல். மற்ற பாடல்களும் அந்தக் காலத்தில் ரசிக்கப்பட்டவை.
ஒரு பக்கம் ரஜினிகாந்த், மற்றொரு பக்கம் கே பாலசந்தர் என இரு பெரும் துருவங்கள் போட்டியில் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது டிரேட் மார்க் படத்தால் பெண் ரசிகைகளைக் கவர்ந்து 'சின்ன வீடு' படத்தை இயக்கி நடித்து வெற்றி பெற்றார் கே பாக்யராஜ். ஊர்வசியின் அக்கா கல்பனா இந்தப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். குண்டான தோற்றத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக நன்றாகச் சாப்பிட்டு உடம்பை ஏற்றி நடித்தார் கல்பனா. தாலி கட்டிய மனைவி கல்பனா குண்டாக இருப்பதால் சின்ன வீடு வைத்துக் கொள்ளும் பாக்யராஜ் அதனால் என்ன துயரங்களை அனுபவிக்கிறார் என்பதை காமெடியாக சொல்லியிருப்பார். இந்தப் படத்திற்கும் இசை இளையராஜா. 'வெள்ளை மனம் உள்ள மச்சான்' பாடல் இன்றும் இளையராஜா ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் கண்டிப்பாக இருக்கும்.
1979ல் வெளிவந்த 'கல்யாணராமன்' படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த படம் 'ஜப்பானில் கல்யாணராமன்'. கமல்ஹாசன், ராதா நடித்த இந்தப் படம் முதல் பாகம் அளவிற்கு வரவேற்பைப் பெறாமல் தோல்வியைத் தழுவியது. தமிழ் சினிமாவில் முதன் முதலாக வெளிவந்த இரண்டாம் பாகம் படம் இது. இளையராஜா இசைமையப்பில் சில பாடல்கள் ரசிக்கப்பட்டாலும், படம் ஜப்பானில் படமாக்கப்பட்டாலும் அழுத்தமான கதையம்சம் இல்லாததால் தோல்வியைத் தழுவியது.
கேஆர் விஜயா, ராஜேஷ், நளினி நடித்து வெளிவந்த 'சமயபுரத்தாளே சாட்சி', சுஜாதா, ராஜீவ், நிழல்கள் ரவி நடித்து வெளிவந்த 'பெருமை', சிவக்குமார், ரேவதி நடித்து வெளிவந்த 'பிரேம பாசம்' ஆகிய படங்கள் பெண்களை நம்பி எடுக்கப்பட்டு வெளிவந்த படங்கள். சுமாரான வெற்றியைப் பெற்றன.