மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமா உலகத்தில் பிரம்மாண்டம் என்றால் 1945ல் வெளிவந்த 'சந்திரலேகா' படத்தைப் பற்றித்தான் 90கள் வரையிலும் குறிப்பிட்டு வந்தார்கள். அந்த பிரம்மாண்டத்தைத் தமிழ் சினிமாவில் மீண்டும் கொண்டு வந்து காட்டியவர் இயக்குனர் ஷங்கர்.
அவரது இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த 'ஜென்டில்மேன்' படத்திற்கு இன்று 30 வவருடங்கள் நிறைவடைகிறது. 70களில் பிறந்த 90ஸ் யூத்களுக்கு 93 ஜுலை 30ம் தேதி வெளிவந்த 'ஜென்டில்மேன்' படம் ஒரு மாறுபட்ட படைப்பாக, பிரம்மாண்டமாக அமைந்து வியக்க வைத்தது. சங்கர் என்றுதானே சொல்வார்கள் அது என்ன ஷங்கர் என்று அவரது பெயரில் எழுந்த ஆச்சரியம் தொடர்ந்து அவரது படங்களிலும் இருந்து வந்தது.
கிச்சா, சுசீலா, சுகந்தி, மணி, பப்லு, அழகர் நம்பி என 'ஜென்டில்மேன்' படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரங்கள் இப்போதும் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாபாத்திரங்களாக இருக்கின்றன. ஒரு கமர்ஷியல் சினிமாவை இப்படி கூட பரபரப்பாக கொடுக்க முடியுமா என அன்றைய இளம் ரசிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் வியந்து பார்த்தார்கள்.
அர்ஜுன், மதுபாலா, சுபாஸ்ரீ, கவுண்டமணி, செந்தில், நம்பியார், மனோரமா, சரண் ராஜ், வினீத் அவர்களோடு ஒரே ஒரு பாடலில் வந்து நடனமாடிய பிரபுதேவா, கவுதமி ஆகியோர் கூட ரசிகர்களை ரசிக்க வைத்தார்கள்.
ஏஆர் ரகுமானின் இசையில் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தன. அன்றைய காலத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான ஆடியோ கேசட்டுகள் விற்கப்பட்டு சாதனை படைத்த ஒரு படம். 'ஒட்டகத்தை கட்டிக்கோ, என் வீட்டு தோட்டத்தில், பார்க்காத பார்க்காத, உசிலம்பட்டி பெண்குட்டி' என ஐந்து பாடல்களும் ஐந்து ரகம். ஜீவாவின் ஒளிப்பதிவு, பாலகுமாரன் வசனம் ஆகியவை படத்தின் வெற்றிக்கு உதவியாக அமைந்தது.
30 வருடங்களுக்கு முந்தைய அந்தப் படம் இப்போது புதிதாக வந்தால் பெரும் வசூல் சாதனை படைக்கும் என்று கூட சொல்லலாம். தமிழ் சினிமாவின் பாதையை, தடத்தை மாற்றியதில் 'ஜென்டில்மேன்' படத்திற்கு முக்கிய பங்குண்டு. அந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் உச்சத்திற்குச் சென்றார் இயக்குனர் ஷங்கர்.
அவரது இயக்கத்தில் அடுத்து வெளிவந்த 'காதலன்' சுமாரான வெற்றி என்றாலும், அடுத்து வந்த 'இந்தியன், ஜீன்ஸ், முதல்வன்' ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் மிக மிக முக்கியமான படங்களாக அமைந்தன. அடுத்து வந்த 'பாய்ஸ்' படத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்தார் ஷங்கர். அப்படி ஒரு இரட்டை அர்த்த வசனங்கள் கொண்டு படத்தை ரசிகர்கள் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அதை ஏற்றுக் கொண்ட ஷங்கர் அதன்பின் அப்படியான படத்தைக் கொடுக்கவேயில்லை.
பின்னர் வந்த 'அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, 2.0' என அவரது பயணம் தமிழ் சினிமாவின் எல்லைகளை பல வெளிநாடுகளிலும் பரவக் காரணமாக அமைந்தது. அடுத்ததாக 'நண்பன், ஐ, 2.0' என வசூல் ரீதியாக பெரிய லாபத்தை பெறவில்லை என்றாலும் அந்தப் படங்கள் ரசிக்கப்பட்டன.
ஷங்கர் போன்ற மாறுபட்ட படைப்பாளிகள் நினைத்திருந்தால் இந்த 30 வருடங்களில் எத்தனையோ படங்களை இயக்கி பல கோடிகளை சம்பாதித்திருக்கலாம். ஆனால், ஷங்கர் இத்தனை வருடங்களில் 13 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். தற்போது தமிழில் 'இந்தியன் 2' படத்தையும், தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தையும் இயக்கி வருகிறார். இந்த இரண்டு படங்களும் அந்தந்த மொழிகளில் பெரும் சாதனையைப் படைக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
ஒரு சினிமாவின் வெற்றி என்பது இயக்குனர்களின் கையில்தான் உள்ளது என்பார்கள். ஆம், அர்ஜுன், கமல்ஹாசன், பிரஷாந்த், விக்ரம், ரஜினிகாந்த், விஜய் என அவரது பட இயக்குனர்களின் உயரத்தை மற்றுமொரு உயர்ந்த தளத்திற்குக் கொண்டு சென்றதில் ஷங்கரின் பங்கு பெரியது.
தமிழ் சினிமாவின் வரலாறை எத்தனை ஆண்டுகள் கழித்து நினைவு கூர்ந்தாலும் அதில் டாப் 10 இயக்குனர்களில் ஷங்கரின் பெயர் எப்போதும் இடம் பெறும்.
கேக் வெட்டி கொண்டாட்டம்
ஷங்கர் திரையுலகில் 30 ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு அவரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றி, பின்னர் இயக்குனர்களாக மாறிய ‛ஈரம்' அறிவழகன் உள்ளிட்டவர்களும், உதவி இயக்குனர்களும் ஷங்கரை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, அதை கேக் வெட்டி கொண்டாடினார். இதுதொடர்பான போட்டோக்கள் வெளியாகி உள்ளது.