இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற மாபெரும் திரைச்சிற்பியை தமிழ் திரையுலகம் கண்டெடுத்த திருநாள் இன்று. சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தான், 'சக்ஸஸ்' என்ற வசனம் பேசி, அரை நூற்றாண்டு காலம் தென்னிந்திய சினிமா உலகின் முடிசூடா மன்னனாக விஸ்வரூபம் எடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற நடிப்புலக மேதையின் நடிப்பில் உதயமான முதல் திரைப்படம் "பராசக்தி" வெளியான நாள் இதே நாள் (17.10.1952).
1950ல் தமிழ் அறிஞர் பாவலர் பாலசுந்தரம் எழுதிய நாடகம் தான் இந்த 'பராசக்தி'. இதன் உரிமையை படத் தயாரிப்பாளர் பிஏ பெருமாள் வாங்கி, பட அதிபர் ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களோடு இணைந்து தயாரித்து உருவாக்கியது தான் இந்த 'பராசக்தி'. 2000 அடி வரை எடுத்திருந்த 'பராசக்தி' திரைப்படத்தில் படத்தின் நாயகனான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தேகம் மெலிந்து காணப்படுவதாக கூறி, நடிகர் திலகத்திற்கு மாற்றாக நடிகர் கேஆர் ராமசாமியை நடிக்க வைக்க உத்தேசிக்கப்பட்டது. ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பாற்றலிலும், திறமையிலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்த தயாரிப்பாளர் பிஏ பெருமாள் அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. நடிகர் திலகமே நாயகனாக நடித்து தீபாவளி திருநாளில் வெளிவந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது.
பெரும்பாலும் வெகுஜன மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட ராஜா ராணி கதைகளை பின்புலமாகக் கொண்ட திரைப்படங்களே வெற்றி படங்களாக அறியப்பட்டுக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில், ஒரு சமூக திரைப்படமாக வந்து சாதனை படைத்தது தான் இந்த 'பராசக்தி'. திரையிடப்பட்ட பல திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடியது இந்த 'பராசக்தி'. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் என்று அறியப்பட்ட மதுரை 'தங்கம்' திரையரங்கில் முதன்முதலில் திரையிடப்பட்ட படமான இது 100 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை செய்தது. தொடர்ச்சியாக மதுரை 'சிட்டி சினிமா'விலும் 126 நாட்கள் ஓடி வெற்றி வாகை சூடிய திரைப்படமாக அறியப்பட்டது. சென்னை பாரகன், அசோக், பாரத் ஆகிய திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்து ஓடியதோடு, கடல் கடந்து இலங்கையிலும் 40 வாரங்கள் வரை ஓடி சரித்திரம் படைத்தது தான் இந்த 'பராசக்தி'.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு, எஸ் எஸ் ராஜேந்திரன் என்ற லட்சிய நடிகரையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து அழகு பார்த்ததும் இந்த 'பராசக்தி' தான். மகாகவி பாரதியார், பாரதிதாசன், உடுமலை நாராயணகவி, கே பி காமாட்சி சுந்தரம், மு கருணாநிதி ஆகியோரின் பாடல்கள் மேலும் சக்தியை தந்தது இந்த 'பராசக்தி'க்கு. கவியரசர் கண்ணதாசனின் பெயர் கவிஞர்களின் பட்டியலில் இல்லையென்றாலும், படத்தின் நீதிமன்ற காட்சியில் நீதிபதியாக தோன்றியவர் கவியரசர் கண்ணதாசன் என்பது ஆறுதலான ஒன்று. தயாரிப்பாளர்கள் பிஏ பெருமாள், ஏவி மெய்யப்ப செட்டியார், திரைக்கதை வசனம் எழுதிய மு கருணாநிதி, இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, இசையமைப்பாளர் ஆர் சுதர்சனம், ஒளிப்பதிவாளர் மாருதி ராவ், போன்ற தலை சிறந்த திரை ஜாம்பவான்களின் உருவாக்கத்தில் வந்த இந்த திரைக்காவியத்தை அதன் 70ம் ஆண்டு நிறைவு நாளில் நினைவு கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.