'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் ஹிருதயம் என்கிற படம் வெளியானது. மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடித்த முக்கோண காதல் கதையாக சென்னை பின்னணியில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற தர்ஷனா மற்றும் ஒணக்க முந்திரி என்கிற இரண்டு பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறின. இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வகாப் என்கிற புதியவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியிருந்தார் இயக்குனர் வினித் சீனிவாசன். இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்களையும் இசையமைப்பாளரையும் பாராட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமானுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஹேஷம் அப்துல் வகாப், "2004ல் ஒரு ஆடிசனுக்காக முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமானை நேரில் சந்தித்தேன். அந்த நேரத்தில் பதட்டத்தில் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மறந்து விட்டேன். அதன்பிறகு பத்து வருடம் கழித்து மீண்டும் அவருக்கு மொபைல் ஒர்க் ஸ்டேஷன் அமைத்து தருவதற்காக சந்தித்தேன். அப்போதும் அவருடன் புகைப்படம் எடுக்கவில்லை.
இந்த நிலையில் ஹிருதயம் படத்தின் இசையமைப்பாளராக மாறிய பிறகு தற்போது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பாடல் எல்லா இடத்திலும் ஒலிக்கிறதே என்று என்னை அவர் கைகொடுத்து பாராட்டியதை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. இந்த முறை மூன்றாம் வகுப்பு சிறுவன் போல, சார் உங்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று மறக்காமல் எடுத்துக்கொண்டேன்" என்று கூறியுள்ளார் ஹேஷம் அப்துல் வகாப்.