மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ் 2019ல் இயக்குனராக மாறி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்தபடம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மலையாள திரை உலகில் முதல் 200 கோடி வசூல் கிளப்பை உருவாக்கிய பெருமையை பெற்றது. அதேசமயம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து கொஞ்சம் சிறிய பட்ஜெட்டில் ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கினார் பிரித்விராஜ். அந்த படத்தில் அப்பாவாக மோகன்லாலும் மகனாக பிரித்விராஜூ நடித்து வந்தனர்.
முழு நீள காமெடி படமாக உருவான அந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது மூன்றாவது முறையாக மோகன்லாலை வைத்து தூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் படத்தை இயக்கியுள்ளார் பிரித்விராஜ். இந்த படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தனது டைரக்ஷன் பயணம் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரித்விராஜ் கூறும்போது, ப்ரோ டாடி படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் மம்முட்டியைத்தான் நடிக்க வைக்க முதலில் முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ப்ரோ டாடி படத்தின் ஸ்கிரிப்ட் என்னிடம் வந்த போது அந்த தந்தை கதாபாத்திரத்தில் எனக்கு மம்முட்டி தான் உடனடியாக நினைவுக்கு வந்தார். மம்முட்டியிடம் சென்று அந்த கதையை கூறிய போது அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அவருக்கு வேறு சில படங்கள் முடிக்க வேண்டி இருந்தன. அதை முடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகும் பரவாயில்லையா என்று கேட்டார். அந்த நேரம் கோவிட் காலகட்டம் என்பதால் குறைந்த அளவு ஆட்களுடன் பணியாற்றி குறிப்பிட்ட காலத்திற்குள் படத்தை முடிக்க வேண்டிய சூழல் எங்களுக்கு இருந்தது.
நான் மம்முட்டியை வைத்து பெரிதாக ஒரு படம் இயக்க வேண்டும் என விரும்பி இருந்தேன். ஆனால் இந்த படம் சிறிய பட்ஜெட் படம் என்பதாலும் மம்முட்டியிடம் இதற்கான தேதிகள் இல்லை என்பதாலும் தான் அதற்கு அடுத்ததாக மோகன்லாலை இந்த படத்தில் நடிக்க வைத்தோம்.. மம்முட்டி இந்த படத்தில் நடித்திருந்தால் அவர் கோட்டயம் குஞ்சச்சன் படத்தில் நடித்திருந்தது போன்ற ஒரு கெட்டப்பில் பாலாவை சேர்ந்த ஒரு விவசாயி கதாபாத்திரத்தில் வித்தியாசமாக அவரை மாற்றி இருப்போம். ஆனாலும் அடுத்து மம்முட்டியை வைத்து மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றை உருவாக்க இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.