தமிழ் சினிமாவில் அடுத்த அதிர்ச்சி - இளம் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார் | சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் கவுதமி! | குழந்தைகள் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட விழிப்புணர்வு செய்தி! | சொர்க்கவாசலில் ஜெயில் கைதிகளின் வாழ்க்கை | 'எனை சுடும் பனி': மீண்டும் ஒரு பொள்ளாச்சி கதை | 'ப்ரீடம் அட் மிட்நைட்': இன்று வெளியானது | பிளாஷ்பேக்: லைவ் சவுண்டில் உருவான 'தூரத்து இடி முழக்கம்' | யஷ், நயன்தாரா படத்திற்காக வெட்டப்பட்ட நூற்றுக்கணக்கான மரங்கள் | பிளாஷ்பேக்: அந்த காலத்து வாலிபர் சங்கம் | லக்கி பாஸ்கரை தொடர்ந்து மீனாட்சி சவுத்ரி நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்கள் ரிலீஸ்! |
2021ம் ஆண்டில் கொரானோ பரவல் காரணமாக தியேட்டர்கள் இடையில் சில மாதங்கள் மூடப்பட்டதால் இந்த வருடம் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. சில முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த வருடம் வெளிவரவில்லை.
இருப்பினும் வந்த படங்களில் விதவிதமான பாடல்கள் இடம் பெற்று ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது. அந்த வகையில் இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல்களை வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் லிரிக் வீடியோ, பாடல் வீடியோ ஆகியவற்றின் பார்வைகளை கணக்கில் கொண்டு இந்த டாப் 10 பாடல்கள் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓரிரு பாடல்களுக்கு லிரிக் வீடியோ வெளியிடாமல் நேரடியாக வீடியோ பாடல்களையே வெளியிட்டுள்ளார்கள்.
1. மாஸ்டர் - வாத்தி கம்மிங்…
இசை - அனிருத்
பாடல் - கானா பாலசந்தர்
பாடியவர்கள் - அனிருத், கானா பாலசந்தர்
லிரிக் வீடியோ - 135 மில்லியன்
வீடியோ - 306 மில்லியன்
விஜய் படத்தின் பாடல்கள் என்றாலே எப்போதுமே பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். இந்தப் படத்தின் பாடல்களுக்கும் அப்படியே இருந்தது. இந்த 'வாத்தி கம்மிங்' பாடல் வெளிவந்ததுமே சூப்பர் ஹிட்டாகிவிட்டது. தமிழகம் கடந்து கிரிக்கெட் வீரர்கள் வரையிலும் கூட இந்தப் பாடல் சென்று சேர்ந்தது இந்தப் பாடலின் பெரும் வெற்றி. இந்த ஆண்டில் 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த ஒரே பாடல் இது.
2. ஈஸ்வரன் - மாங்கல்யம் தந்துனானே
இசை - தமன்
பாடல் - யுகபாரதி
பாடியவர்கள் - சிலம்பரசன், ரோஷினி, தமன்
வீடியோ - 185 மில்லியன்
சிலம்பரசன் நடித்து வெளிவரும் படங்களின் பாடல்களும் ரசிகர்களைச் சென்று சேரும் வகையில் உருவாக்கப்படும். அவரது நடனத்திற்கும் ரசிகர்கள் உண்டு. தமன், சிலம்பரசன் கூட்டணி ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த படம். இப்பாடலின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்ததால்தான் இவ்வளவு பார்வைகளைப் பெற்றது.
3. டாக்டர் - செல்லம்மா
இசை - அனிருத்
பாடல் - சிவகார்த்திகேயன்
பாடியவர்கள் - அனிருத், ஜோனிதா காந்தி
லிரிக் - 133 மில்லியன்
வீடியோ - 37 மில்லியன்
சிவகார்த்திகேயனும் தனது படங்களில் பாடல்கள் ஹிட்டாக அமைய வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் அவர் படத்தின் இசையமைப்பாளர்களுடன் தனி கவனம் செலுத்துகிறார். சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணி என்றாலே எப்படியும் ஒரு சூப்பர் ஹிட் பாடலாவது அமைந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது. அதற்கேற்றபடி இந்தப் பாடலும் அமைந்தது. சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் வரிகள் ரசிகர்களுக்கு நிறையவே பிடித்துப் போனது.
4. மாஸ்டர் - குட்டி ஸ்டோரி
இசை - அனிருத்
பாடல் - அருண்ராஜா காமராஜ்
பாடியவர்கள் - விஜய், அனிருத்
லிரிக் - 92 மில்லியன்
வீடியோ - 94 மில்லியன்
விஜய், அனிருத் கூட்டணியில் வந்த மற்றுமொரு ஹிட் படம். இப்படத்தில் இடம் பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலை வேறு லெவலுக்கு சூப்பர் ஹிட் ஆக்கினார்கள். இந்த 'குட்டி ஸ்டோரி' பாடலை குறிப்பாக குட்டிஸ்களிடம் அதிகமாகக் கொண்டு போய் சேர்த்தார்கள். விஜய் இந்தப் பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியது ஸ்பெஷல்.
5. ஜகமே தந்திரம் - புஜ்ஜி
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடல் - விவேக்
பாடியவர்கள் - அனிருத், சந்தோஷ் நாராயணன்
வீடியோ - 87 மில்லியன்
ஒரு படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை ரசிக்க வைக்கும். அப்படி இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இந்தப் பாடல் இளைஞர்களின் மனம் கவர்ந்த காதல் பாடலாக அமைந்துவிட்டது.
6. டிக்கிலோனா - பேர் வச்சாலும்
இசை (ரீமிக்ஸ்) - யுவன்ஷங்கர் ராஜா
பாடல் - வாலி
பாடியவர்கள் - மலேசியா வாசுதேவன், ஜானகி
வீடியோ - 86 மில்லியன்
30 வருடங்களுக்கு முன்பு வந்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இளையராஜா இசையமைப்பில் வந்த பாடல் 'பேர் வச்சாலும்…'. இத்தனை வருடங்கள் கழித்து ஒரு பாடலை ரீமிக்ஸ் செய்து அதை ரசிகர்களிடம் மீண்டும் கொண்டு போய் சேர்த்த பெருமை யுவன்ஷங்கர் ராஜாவுக்கு உண்டு. இன்றைய இசை ரசிகர்களை பல இளையராஜா பாடல்களை மீண்டும் தேடிப் பிடித்து கேட்க வைத்த பெருமை இந்தப் பாடலுக்கு உண்டு.
7. ஜகமே தந்திரம் - ரகிட ரகிட
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடல் - விவேக்
பாடியவர்கள் - தனுஷ், தீ, சந்தோஷ் நாராயணன்
லிரிக் - 78 மில்லியன்
வீடியோ - 52 மில்லியன்
தனுஷ், தீ இருவரும் இணைந்து பாடிய 'ரௌடி பேபி' பாடல் யு டியூபில் தமிழ்த் திரைப்படப் பாடல்களில் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பாடிய பாடல் இது. படம் பெரிய வரவேற்ப் பெற்றிருந்தால் இந்தப் பாடல் இன்னும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கும்.
8. சுல்தான் - ஜெய் சுல்தான்
இசை - விவேக் மெர்வின்
பாடல் - விவேகா
பாடியவர்கள் - அனிருத், ஜுனியர் நித்யா, கானா குணா
லிரிக் - 33 மில்லியன்
வீடியோ - 75 மில்லியன்
விவேக் மெர்வின் இசையில் இதற்கு முன்பு வந்த பாடல்களில் 'குலேபகாவலி' படத்தின் 'குலேபா' பாடல் 200 மில்லியனை நெருங்கி வருகிறது. அப்பாடலுக்குப் பிறகு இந்தப் பாடல்தான் அவர்களுக்கு முக்கிய ஹிட் பாடலாக அமைந்துள்ளது. ஒரு ஹீரோயிசப் பாடல் இந்த அளவிற்கு வரவேற்பைப் பெற்றது ஆச்சரியம்தான்.
9. கர்ணன் - கண்டா வர சொல்லுங்க
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடல் - மாரி செல்வராஜ்
பாடியவர்கள் - கிடக்குழி மாரியம்மாள், சந்தோஷ் நாராயணன்
லிரிக் - 63 மில்லியன்
வீடியோ - 18 மில்லியன்
இந்த ஆண்டில் வந்த பாடல்களில் அற்புதமான கிராமியப் பாடலாக, உணர்வைத் தூண்டும் பாடலாக இந்தப் பாடல் அமைந்தது. படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை இந்தப் பாடல் அதிகம் தூண்டியது என்பதும் உண்மை. எங்கோ இருக்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியதற்காக படக்குழுவினரைப் பாராட்டி ஆக வேண்டும்.
10. பாரிஸ் ஜெயராஜ் - புலி மாங்கா
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடல் - ரோகேஷ், அசல் கோலார்
பாடியவர் - கானா முத்து
வீடியோ - 67 மில்லியன்
இந்த ஆண்டில் எத்தனையோ கானா பாடல்கள் வந்தாலும் இந்தப் பாடல் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றது. அதற்குக் காரணம் பாடல் வரிகள். ஒரு திருமண வரவேற்பறையிலேயே, பாடலுக்கான நடனத்தையும் வித்தியாசமாக அமைத்து ரசிக்க வைத்தார்கள்.
2021ம் ஆண்டு வந்த பாடல்களில் டாப் 10ல் இடம் பெற்ற பாடல்களில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. நான்கு பாடல்களையுமே அவர் விதவிதமாகக் கொடுத்ததுதான் அதற்குக் காரணம்.
டாப் 10 பாடல்களில் 3 பாடல்கள் அனிருத் இசையமைப்பில் வந்த பாடல்கள். அது தவிர்த்து வேறு இசையமைப்பாளர் இசையில் அவர் பாடிய 2 பாடல்களும் டாப் 10 பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் 2 பாடல்கள் டாப் 10ல் இடம் பெற்றுள்ளது. அதே போல் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படத்தின் 2 பாடல்களும் இடம் பெற்றுள்ளது. அவர்களோடு சந்தானம் நடித்த 'டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் பாடல்களும் இடம் பெற்று அவரும் விஜய், தனுஷுடன் 2 பாடல்கள் பெருமையைப் பெற்றுள்ளார்.
விஜய், தனுஷ், சிலம்பரசன் ஆகிய நடிகர்கள் பாடிய பாடல்களும் இந்த டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
லிரிக் வீடியோ வெளியாகாத 'புஜ்ஜி, பேர் வச்சாலும்,' ஆகிய பாடல்களின் பாடல் வீடியோ அதிகப் பார்வைகளைப் பெற்றுள்ளதால் அவை பட்டியலில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.