பிரபல நடன இயக்குநர்கள் ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராமின் மகள் சுஜா ரகுராம். காயத்ரி ரகுராமின் சகோதரி. பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார். தொழிலதிபர் மனோஜ் வேணுகோபாலை மணந்த சுஜா அமெரிக்காவில் செட்டிலானார். அங்கு அவர் ஹாலிவுட் இயக்குநர்களான பென் - ஜூடி லெவின், பாயு பென்னட் மற்றும் டேனியல் லிர் ஆகியோருடன் பணிபுரிந்துள்ளார்.
தற்போது சுஜா, தனது மகன் திரிசூல் மற்றும் மகள் சனா ஆகியோர் நடிப்பில் டேக் இட் ஈசி என்ற ஹாலிவுட் படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இது இசையை மையமாக கொண்ட படம். படத்திற்கு சாம்.சி.எஸ் இசை அமைத்துள்ளார். நிகில் மகேஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
படம் குறித்து சுஜா ரகுராம் கூறியதாவது: இது முழுக்க முழுக்க லாஸ் ஏஞ்சல்சில் படமாக்கப்பட்ட ஹாலிவுட் படம். முதலில் அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. அதன் பின்னர் இந்திய மொழிகளில் திரையிடப்படும். மூன்று இளைஞர்களின் வாழ்க்கை, வழியாக நட்பின் உயர்வை பற்றி பேசுகிற படம். திரைப்பட குடும்பத்தில் இருந்து வந்ததால் என் குழந்தைகளை நடிக்க வைக்க எனக்கு சிரமம் எதுவும் இருந்ததில்லை. எங்கள் திரைப்பட பாரம்பரியத்தை என் குழந்தைகளுக்கும் கொண்டு சென்றதில் மகிழ்ச்சி. படத்தில் நடித்ததோடு மட்டுமல்ல அதன் தொழில்நுட்பத்திலும் அவர்கள் எனக்கு உதவினார்கள். என்றார்.