பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? | இன்று 7 படங்கள் ரிலீஸ் : முன்பதிவு நிலவரம் என்ன? |
'லால்' என்ற பெயர் இதுவரை எத்தனை தமிழ் சினிமா ரசிகர்களுக்குத் தெரியும் என்று சொல்ல முடியாது. 'சண்டக்கோழி' வில்லன் என்றால் தெரிந்து கொள்வார்கள். இனி, அவரை 'கர்ணன்' லால் என்று மாற்றிச் சொல்லுமளவிற்கு இப்படத்தில் தன்னுடைய யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.
'கர்ணன்' படத்தில் தனுஷுடன் எப்போதும் கூடவே இருக்கும் ஒரு நண்பனைப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நண்பன் என்றால் இள வயது நண்பன் அல்ல, ஒரு வயதான தாத்தா. கிராமத்துப் பக்கம் இப்படி வயது வித்தியாசம் பார்க்காமல் பழகும் பல பெரியவர்களைப் பார்க்கலாம். அப்படி ஒரு கதாபாத்திரத்தில் லால் நடிப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகிறார்கள்.
கடந்த வாரம் வெளிவந்த கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்திலும் சுல்தானை எடுத்து வளர்த்த ஒரு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அவருடைய டப்பிங் தான் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால், அவருடைய நடிப்பு பாராட்டைப் பெற்றது. ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இரண்டு படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் 'பூச்சூடவா, வருஷம் 16, காதலுக்கு மரியாதை' உள்ளிட்ட பல படங்களைக் கொடுத்த இயக்குனர் பாசிலிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர்தான் லால். பின்னர் சித்திக் உடன் இணைந்து இருவரும் பல முக்கியமான மலையாளத் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்கள். பத்துக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், எழுதியும் உள்ளார். பல படங்களைத் தயாரித்தும், வினியோகித்தும் உள்ள லால் கொஞ்சம் கொஞ்சமாக நடிக்கவும் ஆரம்பித்து பல மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் சித்திக் இயக்கி விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' படத்தில் தான் முதலில் நடித்தார். அதன்பிறகுதான் 'சண்டக்கோழி' படத்தில் வில்லனாக நடித்தார். அதற்குப் பின் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் தற்போதுதான் அதிகமாகப் பேசப்படுகிறார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார்.