மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ் | 200 படங்களை கடந்த 2025 | ரிலீசுக்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த காந்தாரா சாப்டர் 1 | முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி | அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி | ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா : அரசியல் பேசப்படுமா? அடக்கி வாசிக்கப்படுமா? | சின்ன வயது கஷ்டங்களை சொல்லும் தனுஷ் | கிடா சண்டையை மையமாக கொண்டு உருவாகும் ஜாக்கி | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அர்ச்சனா | பிளாஷ்பேக்: சினிமாவான முதல் உண்மை சம்பவம் |
தமிழ் திரைவானில் உச்ச நட்சத்திரங்களாக மின்னிய, மின்னிக் கொண்டிருக்கின்ற பல திரைக்கலைஞர்களுக்கு விலாசமாக இருந்து, தனது வித்தியாசமான படைப்புகளின் வாயிலாக அவர்களை அறிமுகம் செய்து வைத்து, அழகு பார்த்தவர்தான் 'இயக்குநர் சிகரம்' கே பாலசந்தர். எவரும் சொல்லத் தயங்கும் சமூக அவலங்களையும், பயணிக்கத் தயங்கும் கதைக் களங்களையும் கையில் எடுத்து, தனது ஆற்றல் மிகு இயக்கத்தின் மூலம் அவற்றை போற்றுதலுக்குரிய படைப்புகளாக மாற்றும் வல்லமை கொண்ட இவர், புகழ் பெற்ற இயக்குநர்களான மிருணாள் சென், சத்யஜித் ரே பாணியில் எடுத்த ஒரு திரைப்படம்தான் “தப்புத்தாளங்கள்”.
சென்னை தி நகரிலுள்ள பார்க் மாண்டிச்சேரி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி அபிலாஷா. சிறுவயதிலேயே திருமணமாகி விவாகரத்தான இந்த அபிலாஷாவைத்தான் சரிதா என பெயர் மாற்றம் செய்து, 1977ம் ஆண்டு இயக்குநர் கே பாலசந்தர், தான் இயக்கிய “மரோசரித்ரா” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 1978ம் ஆண்டு தனது “தப்புத்தாளங்கள்” திரைப்படத்தின் வாயிலாகத்தான் “மரோசரித்ரா” சரிதாவை தமிழ் திரையுலகிற்கும் அறிமுகம் செய்து வைத்து அழகு பார்த்தார்.
தொடர்ந்து “நூல்வேலி”, “தண்ணீர்…தண்ணீர்…”, “அக்னி சாட்சி”, “அச்சமில்லை அச்சமில்லை” என இவரது இயக்கத்திலும், இவரது தயாரிப்பில் வெளிவந்த பல படங்களிலும் நடித்து, தென்னிந்தியத் திரையுலகின் தவிர்க்க முடியாத நாயகியரில் ஒருவராக உயர்ந்து மின்னியவர்தான் நடிகை சரிதா.
இதேபோன்று 1966ம் ஆண்டு நகைச்சுவை நடிகர் சந்திரபாபு நடித்து, இயக்கியிருந்த “தட்டுங்கள் திறக்கப்படும்” திரைப்படத்தில் நடித்திருந்த சிறுமி மகாலட்சுமிதான் மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, ஷோபா என பெயர் மாற்றம் பெற்றிருந்தார்.
இயக்குநர் சேதுமாதவனின் “ஓர்மகள் மரிக்குமோ” என்ற மலையாள திரைப்படத்தின் நாயகியாக அறிமுகமான இவர், இயக்குநர் பாலுமகேந்திராவின் “கோகிலா” திரைப்படத்தின் மூலம் கன்னடத்திலும், இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த “தரம் மாறிந்தி” என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நாயகியாக உயர்ந்த நடிகை ஷோபாவை தமிழில் அறிமுகப்படுத்தியதும் இயக்குநர் கே பாலசந்தரே.
1978ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளிவந்த “நிழல் நிஜமாகிறது” திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து அறிமுகமானார் நடிகை ஷோபா. மிகக் குறைந்த காலமே இந்தப் பூவுலகிலும், வெள்ளித்திரையிலும் பயணித்த நடிகை ஷோபா, இயக்குநர் துரை இயக்கிய “பசி” திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்று, 'ஊர்வசி' ஷோபா என உயர்ந்தார். அந்த வகையில் அபார திறமை படைத்த இந்த இரண்டு திரைத் தாரகைகளையும் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய இயக்குநர் கே பாலசந்தர், படைப்பாளிகளில் பிதாமகர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.