ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? | மருதத்தில் ஏமாற்றப்படும் விவசாயிகளின் கதை: விதார்த் |
தமிழ் திரையுலகில் கால் நூற்றாண்டு காலமாக பயணித்து, சொற்ப எண்ணிக்கையிலான திரைப்படங்களில் மட்டுமே நடித்து, தனது தேனினும் இனிய குரலாலும், வசீகரத் தோற்றத்தாலும், ரசிகப் பெருமக்களை தன்பால் ஈர்க்கச் செய்து, தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்ற இமாலய இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து, இன்றும் தமிழ் திரையிசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் கொண்டாடப்பட்டு வரும் இசையரசர்தான் 'ஏழிசை மன்னர்' எம் கே தியாகராஜ பாகவதர்.
1948ம் ஆண்டு வெளிவந்த தனது “ராஜமுக்தி” திரைப்படத்தின் தோல்விக்குப் பின், 1952ல் இவர் நடித்து வெளியிட்ட திரைப்படம்தான் “அமரகவி”. 'நியூடோன் ஸ்டூடியோ'வில் இத்திரைப்படத்திற்கான பூஜையை பிரமாண்டமாக நடத்தி, மிகப் பெரிய நம்பிக்கையோடு இருந்து வந்தார் எம் கே தியாகராஜ பாகவதர். லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் பாகவதருக்காக ஆஜராகி வாதாடிய வழக்குரைஞர் வி எல் எத்திராஜுவிற்கு, பூஜையின் முடிவில், 100 பவுனில் செய்யப்பட்ட தங்கத்தினாலான தட்டில் பலவகைப் பழங்களையும் வைத்து, அவருக்கு வழங்கி மரியாதை செய்தார் எம் கே தியாகராஜ பாகவதர். கட்டணமே வாங்காமல் வாதாடிய வழக்குரைஞர் வி எல் எத்திராஜுவும் அந்தத் தங்கத் தட்டைத் தனது 'எத்திராஜ் மகளிர் கல்லூரி' நிதிக்காக ஏற்றுக் கொண்டார்.
அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த சமூகத் திரைப்படங்களை விரும்பிப் பார்க்கவும், பக்தி, புராண இதிகாச, ராஜா ராணி கதைகளைப் புறக்கணிக்கவுமான ஒரு போக்கு தமிழ் திரை ரசிகர்களிடையே வளரத் தொடங்கி, ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு மாறுதலை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த 1952ல் ராஜா ராணி கற்பனைக் கதையோடு, ஒரு பக்திப்படமாக எடுத்து வெளியிட்ட திரைப்படம்தான் எம் கே தியாராஜ பாகவதர் நடித்த “அமரகவி”.
கவிஞர் சுரதா வசனம் எழுத, எப் நாகூர் படத்தை இயக்க, ஜி ராமனாதன் இசையமைப்பில், எம் கே தியாகராஜ பாகவதரின் செவிக்கினிய பாடல்கள் பல இடம்பெற்றும், அன்றைய கனவுக்கன்னியாக இருந்த டி ஆர் ராஜகுமாரி மற்றும் பி எஸ் சரோஜா, பி கே சரஸ்வதி, என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம் போன்ற திறமை மிகு நடிகர்கள் நடித்திருந்தும், படம் படுதோல்வியை சந்தித்து, சாதனைக் கலைஞனாக வலம் வந்து கொண்டிருந்த எம் கே தியாகராஜ பாகவதர் என்ற அந்த முதல் சூப்பர் ஸ்டாருக்கு சோதனையை மட்டுமே பரிசாகத் தந்து சென்ற திரைப்படமாக அமைந்ததுதான் இந்த “அமரகவி”.